×

தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் ஒய்எஸ் சர்மிளா கட்சி விலகல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு

திருமலை: தெலங்கானாவில் போட்டியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக ஒய்.எஸ்.சர்மிளா தெரிவித்தார். ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சி தலைவரும், ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் சகோதரியுமான ஒய்.எஸ்.சர்மிளா தெலங்கானாவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 119 இடங்களிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார். இந்நிலையில், நேற்று ஐதராபாத் லோட்டஸ் பாண்ட் கட்சி அலுவலகத்தில் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், ஒய்.எஸ்.சர்மிளா நிருபர்களிடம் கூறியதாவது:

ஆளும் பாரதிய ராஷ்டிரிய சமிதி (பிஆர்எஸ்) கட்சியை தேற்கடிக்க வேண்டும். இதற்காக காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளேன். மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ள நிலையில், அரசுக்கு எதிரான வாக்குகளைப் பிரித்து தடையாக நிற்க விரும்பவில்லை. காங்கிரஸ் தலைவர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. எனவே காங்கிரஸின் வாக்குகளைப் பிரிக்க விரும்பவில்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாதயாத்திரை கர்நாடகாவில் வெற்றி பெற வைத்தது. தெலுங்கானாவிலும் வெற்றி பெறும் நேரத்தில், காங்கிரஸைப் புண்படுத்தும் எண்ணம் எங்களுக்கு இல்லை.

காங்கிரஸ் தலைவர்கள் எனக்கு அந்நியர்கள் அல்ல. மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகளான என் மீது காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் அளவற்ற பாசம் காட்டினர். காங்கிரஸின் வாக்குகளைப் பிரித்து சந்திரசேகர் ராவ் மீண்டும் முதல்வரானால் வரலாறு என்னை மன்னிக்காது என்ற அச்சம் எனக்கு இருப்பதால் தேர்தலில் இருந்து எனது கட்சி விலகுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

* ஓவைசி கட்சி 9 தொகுதிகளில் போட்டி
தெலங்கானாவில் ஏஐஎம்ஐஎம் கட்சி 9 இடங்களில் போட்டியிடும் என்று அதன் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்தார். மற்ற இடங்களில் பிஆர்எஸ் கட்சிக்கு ஆதரவளிப்பதாக அவர் கூறினார்.

* கம்யூனிஸ்ட்டுகளுடன் தொகுதி பேச்சுவார்த்தை
தெலங்கானாவில் இந்தியா கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்ட்டுகளுக்கு காங்கிரஸ் தொகுதி ஒதுக்காததால் மார்க்சிஸ்ட் 17 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது. தற்போது தொகுதி பங்கீடு குறித்து கம்யூனிஸ்ட்டுகளுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி அறிவித்து உள்ளார்.

The post தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் ஒய்எஸ் சர்மிளா கட்சி விலகல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு appeared first on Dinakaran.

Tags : YS ,Sharmila ,Congress party ,Telangana ,assembly elections ,Tirumala ,Sarmila ,YSR Telangana Party ,Telangana assembly elections ,
× RELATED விஜயவாடாவில் சாலையில் அமர்ந்து...