×

அஷ்டமி சந்திர விப்ராஜ தளிக ஸ்தல சோபிதா முதல் வக்த்ர லக்ஷ்மி பரீவாஹ சலன் மீனாப லோசனா வரை

ஆதி சக்திக்கு ஆயிரம் நாமங்கள்

லலிதா சஹஸ்ரநாமங்களின் உரை

ரம்யா வாசுதேவன் & கிருஷ்ணா

(சென்ற இதழ் தொடர்ச்சி…)

நாம் லலிதா ஸஹஸ்ரநாமத்தில் ஒவ்வொரு நாமத்தினுடைய பொருளையும் பார்த்துக்கொண்டே வருகின்றோம். இப்போது மீண்டும் இதுவரை பார்த்த நாமங்களை நமக்குள் தொகுத்துக் கொள்வோமா! ஏனெனில், லலிதா சஹஸ்ரநாமம் ஒரு அழகான அலைவரிசையில் வசின்யாதி வாக்தேவதைகளால் வெளிப்பட்டிருக்கின்றன. இந்த நாமங்களை பாராயணம் செய்தலே பிரம்ம வித்யைக்கு ஈடானது. அதனுடைய பொருளையும் தத்துவார்த்தத்தையும் அறிதல் என்பது நம்மை இன்னும் பல படிகள் மேலே செலுத்தும்.

ஹயக்ரீவர் அகத்தியருக்கும், லலிதையான அம்பாள் வசின்யாதி வாக்தேவதைகளுக்கும் இந்த லலிதா சஹஸ்ரநாமத்தை அருளியதைப் பார்த்தோம். இப்போது நாம் இதற்கு முன் உள்ள நாமங்களைச் சுருக்கமாக பார்த்து புரிந்து கொள்வோம். பிறகு அடுத்தடுத்த நாமங்களை பார்ப்போம்.

15. அஷ்டமி சந்திர விப்ராஜ தளிக ஸ்தல சோபிதா

இதற்கு முன்புள்ள இரண்டு நாமங்களான சம்பகா சோக புன்னாக ஸௌகந்தி கலஸ்தகசா மற்றும் குருவிந்த மணிச்ரேணீ கந்த கோடீர மண்டிதா என்ற இரண்டு நாமங்களில் அம்பிகையின் கேசத்தின் வர்ணனையும், அந்த கேசத்தினுடைய வர்ணனை மற்றும் அந்த கேசத்தில் அணிந்துகொண்டிருக்கும் கிரீடத்தினுடைய வர்ணனையும் அதன் தத்துவார்த்தமும் பார்த்தோம். இதில் தொடர்ச்சியாக நாம் கவனத்தில்கொள்ள வேண்டிய விஷயம் என்னவெனில், அம்பிகையானவள் சிதக்னியிலிருந்து ஆவிர்பவிக்கின்றாள். அதாவது ஆத்மாவாகிய அந்த பெருஞ்சக்தி தன்னை ஒரு ஜீவனான சாதகனிடத்தில் வெளிப்படுத்திக்கொள்கின்றாள்.

அப்போது மேல்நோக்கி எழும்பும்போது அந்த கேச பாரத்தினுடைய தரிசனத்தை காண்கின்றாள். அதற்கு பிறகு கிரீடம் தெரிகின்றது. இப்போது அந்த கிரீடத்திற்குக் கீழே நெற்றிப்பகுதி தெரிகின்றது. இந்த நெற்றிப்பகுதியானது நமக்கு யோக மார்க்கத்தில் லலாட ஸ்தானம். மிகவும் முக்கியமான இடம். அதாவது ஆக்ஞா சக்கரம். இப்போது இந்த நெற்றியினுடைய தரிசனம் கிடைக்கின்றது. அந்த நெற்றிக்குத்தான் அஷ்டமி சந்திர விப்ராஜ தளிக ஸ்தல சோபிதா என்று பெயர். அந்த நெற்றிக்கு வசின்யாதி வாக் தேவதைகள் ஒரு உவமை கொடுக்கின்றார்கள். அது என்ன உவமை எனில் அஷ்டமி சந்திரனைப்போன்று பிரகாசிக்கும் நெற்றியை உடையவள் என்று பொருள்.

ஏன் இங்கு அஷ்டமி சந்திரனை உவமையாக்க வேண்டும். சந்திரனுடைய கலைகளை கவனிப்போம். ஒரு பட்சத்தை எடுத்துக் கொள்வோம். அமாவாசையிலிருந்து பௌர்ணமி. வளர்பிறை. பிறகு பௌர்ணமியிலிருந்து அமாவாசை. இப்படி பதினைந்து நாட்களாக சந்திரனின் கலைகள் வளர்ந்து தேய்ந்து, தேய்ந்து வளர்ந்து என்று மாறுபாடு அடைந்து கொண்டே இருக்கின்றது. இப்படி ஒரு பட்சத்தின் பதினைந்து நாட்களில் நடுவில் இருப்பது அஷ்டமியாகும். இந்த அஷ்டமி அன்றுதான் சந்திரன் சரிபாதியாக இருக்கிறது.

அம்பிகையினுடைய முகமே சந்திரனுக்கு உவமையாகின்றது. இப்படி முழு முகமும் சந்திரன் என்று சொன்னோமெனில் இந்த நெற்றிப் பகுதி மட்டும் பாதி சந்திரனாகின்றது. அதாவது அர்த்த சந்திரன். இப்படி சந்திரனின் சரி பாதியாக அம்பிகையின் நெற்றி விளங்குகின்றது என்று இந்த நாமம் சொல்கின்றது. இதன் நேரடியான பொருள் மற்றும் சூட்சுமமான விஷயத்தைப் பார்ப்போம்.

சிதக்னி குண்டத்திலிருந்து எழுந்த அம்பிகையான சொரூபத்தை தரிசிக்கின்றான். அந்த தரிசனம் எப்படிப்பட்ட ஆனந்தமாக இருந்தது என்பதைப் பார்த்தோம். இந்த ஆனந்தத்திற்கு மேல்
இன்னொரு ஆனந்தம் இல்லை என்பதாக அந்த கிரீடம் இருக்கின்றது. இப்போது இந்த நாமத்தில் அஷ்டமி என்கிற பெயர் வருகின்றது. இந்தப் பக்கம் ஏழு அந்தப் பக்கம் ஏழு என்று நடுவே இருக்கின்றது. இந்த நடுவே என்பது சமநிலை குறிப்பதாகும். இப்போது இதேபோல் இந்த ஆத்மானுபவம் பெற்ற சாதகன் என்ன ஆகிறான் எனில், அவன் ஒரு நிலைக்கு வருகின்றான். எந்தப் பக்கமும் சாயாத ஸ்திதப் பிரக்ஞன் என்கிற நிலைக்கு வருகின்றான். அவனை நன்மை தீமை என்ற இருமை பாதிக்காது.

புண்ணியம் பாவம் பாதிக்காது. சரி, தவறு பாதிக்காது. இன்பம் துன்பம் பாதிக்காது. இந்த உலகத்தில் இருக்கக் கூடிய எந்த இருமைகளும் (duality) அவனை பாதிக்காது. நெருங்காது. ஏனெனில், அவன் மத்தியில் இருக்கின்றான். இனி எந்தப் பக்கமும் சாயாத, சலனமில்லாத சலனமற்ற நிலையை எய்திவிடுகின்றான். மனம் நின்று போய்விடுகின்றது. அவன் உலக நியதிகளுக்குண்டான இருமைகளை கடந்து விட்டான். இந்த நெற்றியினுடைய தரிசனம்தான் ஸ்தித பிரக்ஞ நிலையை உணர்த்துகின்றது.

எப்படி அஷ்டமி சந்திரன் சரியாக இந்தப் பக்கம் ஏழு நாள் அந்தப் பக்கம் ஏழு நாள் நடுப்பாதியாக நிற்கிறதோ, அதுபோல எந்தப் பக்கமும் இல்லாமல் சரியாக நிற்கிறான்.

16. வதந ஸ்மரா மாங்கல்ய கிருஹ தோரண சில்லிகா

இதற்கு முந்தைய நாமங்களில் ஒன்று நெற்றியையும் அடுத்து முகத்தையும் உணர்த்தின. இப்போது இந்த நாமம் அம்பிகையின் புருவத்தை வர்ணிக்கின்றது. புருவத்தை வர்ணிக்கும்போது எப்படி நெற்றிக்கும் முகத்திற்கும் உவமை சொன்னார்களோ அதாவது நெற்றிக்கு அஷ்டமி சந்திரனையும் முகத்திற்கு பூரண சந்திரனையும் சொன்னார்கள். அந்த பூரண சந்திரனில் உள்ள கருமை போன்ற களங்கத்தை கஸ்தூரிக்கு உவமையாக்கினார்கள். அம்பிகையை உவமையாகச் சொல்லிக்கொண்டே அதற்குப் பின்னால் உள்ள தத்துவத்தையும் சொல்லிக் கொண்டே வருகின்றார்கள். வசின்யாதி வாக்தேவதைகள் உவமைகளை சொல்லிச் சொல்லியே அம்பிகையின் சௌந்தர்யத்தை வர்ணிக்கிறார்கள்.

இந்த உவமை சொல்வதில் ஒரு முக்கியத்துவம் உண்டு. இவர்கள் வர்ணிப்பதோ பரமாத்ம வஸ்து. ஆனால், இவர்கள் சொல்லக்கூடிய உவமை பார்த்தால் எல்லாமே நமக்குத் தெரியக்கூடிய விஷயங்களை வைத்துக்கொண்டே உவமையை சொல்லிக்கொண்டே செல்கிறார்கள். இங்கு கிருஹ தோரண சில்லிகா… என்கிற அம்பிகையினுடைய புருவத்தைச் சொல்லும்போது அம்பிகையினுடைய முகம் மன்மதனுடைய கிரஹம் அதாவது வீடு போன்று இருக்கின்றது. மன்மதனுக்கு ஒரு வீடு போன்று இருக்கின்றது. அதனால்தான் ஸ்மரா மாங்கல்ய கிருஹ… ஸ்மரன் என்றால் மன்மதன் என்று அர்த்தம். மாங்கல்ய கிரஹம் என்றால் மங்களமான வீடு. எது என்றால் வதனம்.

அம்பாளுடைய வதனம் மன்மதனுக்கு மங்களகரமான வீடு. இப்படி சொல்லிவிட்டு கிரஹ தோரண சில்லிகா…. என்று அடுத்து வருகின்றது. இங்கு சில்லிகா என்றால் புருவங்கள். இந்த அம்பாளின் புருவங்கள் எப்படி இருக்கின்றதெனில் மன்மதனுடைய வீட்டினுடைய தோரணங்களாக விளங்குகின்றன. இந்த உவமை சொல்வதில் காரணம் என்னவென்று காண்போமாயின், அதாவது கிரஹ தோரணம். இங்கு வீடு என்பது நமக்குத் தெரிந்த ஒரு பொருள். வீடு என்று ஒன்று இருந்தால் அந்த வீட்டிற்கு வாசல் என்று ஒன்று இருக்கும். அந்த வாசலுக்கு தோரணம் இருக்குமென்பது நமக்குத் தெரிந்த விஷயம். அப்போது இந்த தெரிந்த விஷயத்தை உவமையாக்கி, தெரியாத பரமாத்ம வஸ்துவை நமக்குக் காண்பித்துக் கொடுக்கிறார்கள்.

கொஞ்சம் இங்கு கவனியுங்கள். அஷ்டமி சந்திரனில் தொடங்கினோம். பிறகு முழுச் சந்திரனையும் அதிலுள்ள கஸ்தூரி திலகத்தையும் பார்த்துக் கொண்டே வந்து இப்போது சட்டென்று வீட்டிற்கு வந்து விட்டோம். குழந்தைகளுக்கு சந்திரனை காட்டிக் கொண்டே உணவூட்டுவதுபோல இங்கும் வாக்தேவதைகள் சந்திரனின் அழகை காட்டிக் கொண்டே வந்து சட்டென்று வீட்டை காட்டுகிறார்கள். இதோ இங்கு பார் உன் வீடு என்று தொடுகிறார்கள்.

இந்த வீட்டினுடைய வாசலில் உள்ள தோரணம் வரைக்கும் வந்தாகி விட்டது. இதிலுள்ள சூட்சுமத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சந்திரனிலிருந்து நம் வீடு வரையுள்ள பிரபஞ்சம் முழுவதையும் பார்க்கப் பார்க்க இந்த பிரபஞ்ச வஸ்துவோடு அபின்னமாக அதாவது பேதமற்று, பிரிக்க முடியாத அளவிற்கு அம்பிகையும் இருக்கின்றாள் என்று புலப்படுகின்றது. நினைவுக்கும் வரும்.

17. வக்த்ர லக்ஷ்மி பரீவாஹ சலன் மீனாப லோசனா

நாம் தொடர்ந்து அம்பிகையின் கேசம் முதல் பாதம் வரையிலான வர்ணனையை பார்த்துக்கொண்டு வருகின்றோம். அதில் வக்த்ர லக்ஷ்மி பரீவாஹ என்று இதை இப்போது பார்க்கப் போகின்றோம். அதாவது முகமாகிய அழகிய வெள்ளத்தில் ஓடும் மீன்களைப்போலக் கண்களை உடையவள் என்று பொருள். இதற்கு முன்பு அம்பிகையின் கேச பாரம் என்கிற கூந்தல், கிரீடம், நெற்றி, புருவம் என்று பார்த்துக்கொண்டே வந்து இப்போது முக்கியமாக உள்ள அம்பாளின் கண்களை வாக் தேவதைகள் வர்ணிக்கின்றன. அம்பிகையினுடைய கண்களைத்தான் இந்த நாமா வர்ணிக்கின்றன.

இதற்கு முன்பு நெற்றிக்கு எப்படி அஷ்டமி சந்திரனோ, முகத்திற்கு பூரண சந்திரனோ, புருவத்திற்கு தோரணத்தையோ வசின்யாதி வாக்தேவதைகள் உவமை காண்பித்திருப்பார்கள். இந்தக் கண்ணை வர்ணிக்கும்போது இங்கேயும் ஒரு உவமை காண்பிக்கப்படுகின்றது. ஆனால், இந்த உவமையை சாதாரணமான உவமையாகச் சொல்லாமல் கவிநயத்தோடுகூடியதாகச் சொல்கிறார்கள். இங்கு வக்த்ர லக்ஷ்மி பரீவாஹ அம்பிகையின் முகமானது ஆற்றைப் போல, அருவியைப்போலப் பொங்கித் ததும்பக் கூடியபிரவாஹத்தை உடையது. ஆற்றில் நாம் காண்பது தண்ணீருடைய பிரவாஹம்.

ஆனால், இங்கு அம்பிகையினுடைய முகம் எதனுடைய பிரவாஹமெனில், ஐஸ்வர்யத்தினுடைய, மங்களத்தினுடைய பிரவாஹம்தான் அம்பிகையினுடைய முகம். அப்படி பிரவாஹம் எடுக்கும்போது அந்த நீருக்குள் மீன்கள் இருக்கும். இப்போது அம்பிகையினுடைய முகமே நமக்கு பெரிய பிரவாஹமாக இருக்கின்றது. அந்த பிரவாஹத்தில் இரண்டே இரண்டு மீன்கள் இருக்கின்றன. அந்த பிரவாஹத்தில் அது அழகாக விளையாடிக் கொண்டிருக்கின்றன. அப்படி விளையாடிக் கொண்டிருக்கும் மீன்களைத்தான் இங்கு அம்பாளுடைய கண்களாக காட்டப்பட்டிருக்கின்றன. மீனாப லோசனா மீன்களைப்போன்ற கண்கள்.

வக்த்ர லக்ஷ்மி பரீவாஹ சலன் மீனாப லோசனா முகத்தில் அங்கேயும் இங்கேயும் சலித்துக் கொண்டிருக்கும் கண்கள். இப்பொழுது கொஞ்சம் ஆழமான பொருளை நோக்கிப் போவோமா! இதற்கு முன்னர் உள்ள நாமாவில் ஞானத்தினுடைய தோரண வாயில் என புருவங்கள் உதாரணம் காட்டப்பட்டது. ஒரு ஆத்மீக சாதகன் உலகியலில் இருந்துகொண்டே இருந்தவன் எப்படி ஞானத்தை நோக்கி திரும்புகிறான். அப்படி திரும்புகிறவனின் முதல் ஞானானுபவத்தை தோரணமாக வரவேற்கும் விதமாகப் பார்த்தோம்.

இங்கு இந்த நாமத்தில் அந்த ஞானியினுடைய நிலையை அடைந்ததற்குப் பிறகு, ஞானம் என்கிற மங்களகரமான அந்த வீட்டிற்குள் பிரவேசம் செய்ததற்குப் பிறகு, அந்த ஞானத்தினுடைய பிரபாவத்தினால் எங்கே பார்த்தாலும் அவனுக்கு மங்களம் பொங்கி வழிகின்றது. நாம் உள்முகமாகப் போகப்போக வெளியில் ஜிலுஜிலுவென்று ஞானக்காற்று அடிக்க ஆரம்பித்துவிடும். இன்னும் கேட்டால் இதற்கு முன்னால் வாழ்க்கை எப்படி சாரமற்று இருந்ததோ இப்போது சாரமுடையதாக மாறிவிடும்.

அப்போது ஞான சொரூபமாக ஐஸ்வர்யமும் மங்களமும் பொங்கி வழியும். அதுதான் அம்பாளுடைய முகம். அதில் சர்வசகஜமாக அந்த நிலையிலிருந்து இறங்குவதில்லை. அதுதான் அம்பிகையின் கண்கள். இன்னொரு கோணத்தில் எங்கும் நிறைந்த ஞானத்தை அனுபவிப்பனை, பார்ப்பவனை அந்த நிலையிலிருந்து நழுவ விடாமல் அந்த கண்கள் கடாட்சம் செய்கின்றன. அவனை அதற்குப்பிறகு கீழேயே இறக்குவதில்லை.

அதனால்தான் இங்கு சலன் மீனாப லோசனா… அம்பிகையின் கண்கள் movementலேயே இருக்கின்றது. சலனத்திலேயே இருக்கின்றது. ஏனெனில், நம்மை அசலமாக வைத்துக் கொள்வதற்காக அவளின் கண்கள் சலித்துக்கொண்டேயிருக்கின்றன. இவன் நழுவிவிடக்கூடாது என்பதற்காக தொடர்ச்சியாக கடாட்சம் செய்து கொண்டே இருக்கிறாள்.

The post அஷ்டமி சந்திர விப்ராஜ தளிக ஸ்தல சோபிதா முதல் வக்த்ர லக்ஷ்மி பரீவாஹ சலன் மீனாப லோசனா வரை appeared first on Dinakaran.

Tags : Ashtami Chandra Vibraja Talica Stala Sobita ,Vaktra Lakshmi Parivaha Salan Meinaba Losana ,Adhi Shakti ,Lalita Sahasranams Ramya Vasudevan ,Krishna ,Wakdra Lakshmi Parivaha Salan Meinaba Losana ,
× RELATED குழப்பத்தை தீர்க்கும் அழகிய நாமம்