×

இந்தியா முழுவதும் ஒன்றிய பாஜ அரசுக்கு எதிரான அலை வீசுகிறது வேஷம் போடும் பாஜ-அதிமுக கள்ளக்கூட்டணியை வீடு வீடாக சென்று அம்பலப்படுத்துங்கள்: திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: இந்தியா முழுவதும் ஒன்றிய பாஜ அரசுக்கு எதிரான அலை கடுமையாக வீசுகிறது என்றும், கூட்டணி முறிந்ததாக வேஷம் போடும் பாஜ- அதிமுக இடையேயான கள்ளக் கூட்டணியை வீடு வீடாக சென்று அம்பலப்படுத்துங்கள் என்று திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.  திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: திமுக 6வது முறையாக ஆட்சி செய்கின்ற வாய்ப்பினை வழங்கிய தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றுகிற வகையில் நாள்தோறும் சாதனைத் திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றி வருகிறது நமது திராவிட மாடல் அரசு.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் பின்பற்றக்கூடிய வகையில் நம்முடைய அரசின் திட்டங்கள் மக்களுக்குப் பயனளித்து வருகின்றன. அதேநேரத்தில், மாநிலங்களின் வளர்ச்சியை விரும்பாத, மாநிலங்களின் உரிமைகளை மதிக்காத, மாநிலங்களுக்குப் போதிய நிதியளிக்காத, மாநிலங்கள் என்ற கட்டமைப்பே இருக்கக்கூடாது என்ற கொள்கையைக் கொண்டவர்களின் ஆட்சி இந்திய ஒன்றியத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது குறித்து, ‘ஸ்பீக்கிங் பார் இந்தியா’ என்ற நிகழ்வின் மூன்றாவது பகுதியில் பேசியிருக்கிறேன். கலைஞர் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மாநில சுயாட்சிக் கொள்கையையும் அதன் இன்றைய தேவையையும் அந்த உரையில் குறிப்பிட்டிருக்கிறேன்.

தமிழிலும் இந்திய மொழிகள் பலவற்றிலும் வெளியாகியுள்ள அந்த உரையை உடன்பிறப்புகளாகிய நீங்கள் கேட்டிருப்பீர்கள் என நம்புகிறேன். இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் எதிரான மதவாதக் கொள்கை கொண்ட ஆட்சியை அகற்றிட இந்தியா கூட்டணி உருவாகி, நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. அதில், திமுக பங்கு மகத்தானது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் முழுமையான வெற்றியை இந்தியா கூட்டணி பெற்றிட, தமிழ்நாடு, புதுவை உள்ளடக்கிய 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்றாக வேண்டும். அதற்கான கட்டமைப்பை இந்தியா கூட்டணி உருவாவதற்கு முன்பே நாம் தொடங்கிவிட்டோம்.

கடந்த மார்ச் 22ம் நாள் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒவ்வொரு வாக்குசாவடிக்கும் 100 வாக்காளர்களுக்கு ஒருவர் என பூத் கமிட்டி அமைப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது. ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் மகளிர், இளைஞர், சமூக வலைத்தளச் செயல்பாட்டாளர்கள் இருக்க வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழ்நாடு முழுவதுமுள்ள வாக்குச்சாவடிகளுக்கு பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டு, அதில் பங்கேற்றுள்ள உறுப்பினர்களின் விவரங்கள் சரியாக இருக்கிறதா என்பதும் உறுதி செய்யப்பட்டது.

அதே மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், திமுகவில் ஏற்கனவே உள்ள ஒரு கோடி உறுப்பினர்களுடன் புதிதாக ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்கிற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு, ஒரு தொகுதிக்கு எத்தனை உறுப்பினர்கள் என்ற விவரமும் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டு, அதன்படி புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு நிறைவடைந்துள்ளது. புதிய உறுப்பினர்களின் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆதாரங்களும் சரிபார்க்கப்பட்டுள்ளன. நவம்பர் 7ம் நாள் முதல் திமுகவின் புதிய உறுப்பினர்களுக்கான அட்டைகள் வழங்கப்படவிருக்கின்றன. அதுபோலவே, பூத் கமிட்டிக்குரிய பாக முகவர்களின் கூட்டம் மண்டலவாரியாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நவம்பர் 5ம்தேதி அன்று சென்னை மண்டலத்திற்கான பாக முகவர்களுக்குரிய பயிற்சிக் கூட்டம் திருவள்ளூரில் நடைபெறவிருக்கிறது. மாநாடுகள் போல நடைபெற்ற ஒவ்வொரு கூட்டத்திலும், பாக முகவர்களும் பூத் கமிட்டி உறுப்பினர்களும் எத்தகைய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. சமூக வலைத்தளங்களில் எப்படி செயல்படவேண்டும் என்பதையும், திமுக சார்பிலான செயலிகளைப் பயன்படுத்தும் முறையையும் தெளிவாக விளக்கி, ஒவ்வொரு வாக்கையும் சிந்தாமல் சிதறாமல் திமுக அணிக்குக் கொண்டு வருவதற்குரிய வகையில் பயிற்சிகள் அமைந்தன.

தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் திமுக சார்பில் தொகுதிப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் தங்கள் பணியை நிறைவேற்றியுள்ளனர். திமுகவின் மூத்த அமைச்சர்களும் இதே போல ஆய்வுப் பணியை மேற்கொண்டு, இளைய அமைச்சர்களுக்கும் வழிகாட்டுகிறார்கள். திமுகவின் இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதியும் தமிழ்நாடு முழுவதும் திமுக நிகழ்வுகளில் தொடர்ச்சியாகப் பங்கேற்பதுடன், திமுக அரசின் திட்டங்கள் எந்தளவில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்பதை ஆய்வு செய்யும் பணிகளிலும் முனைப்பாகச் செயல்பட்டு வருவதை நான் செல்லும் மாவட்டங்களில் என்னைச் சந்திக்கும் மூத்த அமைச்சர்களும் மாவட்ட செயலாளர்களும் தெரிவித்து வருகின்றனர்.

திமுகவில் எந்தவிதப் பிரதிபலனும் எதிர்பாராமல் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞருக்காகவும், கருப்பு-சிவப்பு கொடியின் நிறமே தங்கள் குருதி நிறம் என்ற உணர்வுடனும் தங்கள் இளமை வாழ்வை இயக்கத்திற்கு அர்ப்பணித்து, இன்று மூத்த உறுப்பினர்களாகத் திகழ்பவர்களுக்கு மாவட்டந்தோறும் பொற்கிழி வழங்குகிறார் தம்பி உதயநிதி. நீ அவரவர் பகுதியில் உள்ள பொதுமக்களிடமும் மாணவர்களிடமும் நீங்கள் கையெழுத்தைப் பெற வேண்டும். 50 லட்சம் என நிர்ணயித்திருக்கின்ற இலக்கையும் தாண்டி உங்களுடைய பங்களிப்பு இருக்க வேண்டும். குறிப்பாக மருத்துவக் கனவு சிதைகின்ற அச்சத்தில் உள்ள மாணவர்கள், நீட் தேர்வினால் பெரும் அவதிக்கு உள்ளாகும் பெற்றோர் ஆகியோரிடம் கையெழுத்து பெற வேண்டும்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் எனும் புரட்சித் திட்டம், பேருந்துகளில் பெண்களுக்குக் கட்டணமில்லாத விடியல் பயணத் திட்டம், காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட மகத்தான திட்டங்களின் பயன்கள் மக்களிடம் சரியாகப் போய்ச் சேரவேண்டும். அது பற்றி அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அரசின் திட்டங்கள் எவருக்கேனும் கிடைக்காமல் இருந்தால், அவர்கள் தகுதியான விண்ணப்பதாரர்களாக இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு அரசின் திட்டங்களின் பயன்கள் கிடைக்கும்படி செய்திட வேண்டியது தொகுதிக்குட்பட்ட மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய, நகரச் செயலாளர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பொறுப்பாகும்.

சென்னை மண்டல பாக முகவர்கள் கூட்டம் நடைபெறும் நாளான நவம்பர் 5ம் நாளன்று கூட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணி நடைபெறவிருக்கிறது. தொகுதியின் ஒவ்வொரு வார்டிலும் இருக்கக்கூடிய பூத் கமிட்டி உறுப்பினர்களைக் கொண்டு அந்தப் பணியைத் தவறாமல் மேற்கொள்ள வேண்டும். நாம் உழைப்பது நம் இயக்கத்தின் வெற்றிக்காக மட்டுமல்ல, நாட்டு மக்களின் விடுதலைக்காக. ஏழரை லட்சம் கோடி ஊழல் செய்ததாக சி.ஏ.ஜி.யால் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாஜகவின் கைகளிலிருந்து காப்பாற்றும் வகையிலும், அவர்களுடன் கூட்டு சேர்ந்து நாட்டுக்கும் மக்களுக்கும் எண்ணற்ற துரோகங்கள் செய்துவிட்டு, இப்போது கூட்டணி முறிந்துவிட்டதாக வேடம் போடும் அதிமுகவின் கள்ளக்கூட்டணியை அம்பலப்படுத்தும் வகையிலும் வீடு வீடாக உங்கள் பணி மேற்கொள்ளப்பட வேண்டும்.

நாற்பதும் நமதே, நாடும் நமதே என்று கடந்த 2022ம் ஆண்டு விருதுநகரில் நடந்த முப்பெரும் விழாவில் என் முழக்கத்தை முன்வைத்தேன். அதைச் செயல்படுத்தும் வியூகங்கள் வலுப்பெற்று, இன்று இந்தியா முழுவதும் பாஜ அரசுக்கு எதிரான அலை கடுமையாக வீசிக் கொண்டிருக்கிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா நம் வசம்தான். ஜனநாயகம் காப்பதில் உறுதியாக உள்ள தோழமை சக்திகளுடன் இணைந்து மகத்தான வெற்றியைப் பெறுவோம். அதற்கேற்ற வகையில் ஒவ்வொரு வாக்குச்சாவடியாகக் களம் காணட்டும் திமுக படை. வெற்றியை உறுதி செய்யும் உழைப்பை வழங்கட்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post இந்தியா முழுவதும் ஒன்றிய பாஜ அரசுக்கு எதிரான அலை வீசுகிறது வேஷம் போடும் பாஜ-அதிமுக கள்ளக்கூட்டணியை வீடு வீடாக சென்று அம்பலப்படுத்துங்கள்: திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Union BJP government ,India ,BJP ,ADMK alliance ,Chief Minister ,M.K.Stal ,DMK ,CHENNAI ,BJP-ADMK ,Dinakaran ,
× RELATED ஒன்றிய பாஜ அரசின் அடக்குமுறை கண்டித்து விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்