×

கோயில் பணியாளர்களின் பதவிக்கு ஏற்ப குடியிருப்பு ஒதுக்க வேண்டும்: அறநிலையத்துறை ஆணையர் முரளீதரன் தகவல்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு பதவிக்கேற்ப குடியிருப்புகள் ஒதுக்க வேண்டும் என அறநிலையத்துறை ஆணையர் முரளீதரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அனைத்து இணை மற்றும் உதவி ஆணையர்களுக்கு ஆணையர் முரளீதரன் அனுப்பிய சுற்றறிக்கை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணியாற்றும் பணியாளர்களின் நலன் கருதி அவர்களுக்கு குடியிருப்புகள் கட்டுவதற்கான் மதிப்பீடுகளுக்கு நிர்வாக அனுமதி மற்றும் தொழில்நுட்ப அனுமதி வேண்டி சார்நிலை அலுவலர்களிடமிருந்து அறநிலையத்துறை அலுவலகத்துக்கு முன்மொழிவுகள் வரப்பெறுகின்றன.

இந்த முன்மொழிவுகள் இந்த அலுவலகத்தில் பரிசீலிக்கப்பட்டு அரசுக்கு நிர்வாக அனுமதி வேண்டி அனுப்பப்படுகிறது. இந்நேர்வில் கோயிலுக்கு கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள குடியிருப்பு எந்த வகையான பதவி தரத்திற்கு (Category) கோயில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் என்ற விவரம், எத்தனை சதுர அடி கட்டப்பட வேண்டும் என்ற விவரம் மற்றும் கோயிலுக்கு கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள குடியிருப்புகளின் எண்ணிக்கை பற்றிய விவரம் ஆகிய விவரங்கள் அரசால் கோரப்படுகிறது.

எனவே, இனிவரும் காலங்களில் கோயில் பணியாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டும் பணி தொடர்பாக அனுப்பப்படும் முன்மொழிவுகளில் பொதுப்பணித்துறை விதிகளின்படி அனைத்து வசதிகளுடன் கூடிய பணியாளர் குடியிருப்புகள் கட்டுவதற்கு ஏற்ற வகையில் பணியாளர்களின் பதவி தரத்திற்கு ஏற்றவாறு மதிப்பீடு தயார் செய்து அனுப்பி வைக்க அனைத்து சார்நிலை அலுவலர்களையும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post கோயில் பணியாளர்களின் பதவிக்கு ஏற்ப குடியிருப்பு ஒதுக்க வேண்டும்: அறநிலையத்துறை ஆணையர் முரளீதரன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Charity Commissioner ,Muralitharan ,Chennai ,Department of Charities ,Hindu Religious Charities Department ,
× RELATED ஓடிடியில் வெளியானது அசோக் செல்வன் நடித்த “சபாநாயகன்”