×

களம் இறங்கிய விஐபிக்கள் சட்டீஸ்கரில் காத்திருக்கும் சவால்கள்: அமைச்சர்களை எதிர்ப்பவர்கள் யார்?

நக்சல் பாதிப்பு அதிகம் உள்ள சட்டீஸ்கரில் இந்த முறை 2 கட்ட தேர்தல். மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் முதற்கட்டமாக 20 தொகுதிகளுக்கு நவ.7ல் வாக்குப்பதிவு நடக்கிறது. மீதம் உள்ள 70 தொகுதிகளுக்கு நவ.17ல் வாக்குப்பதிவு. ஓட்டு எண்ணிக்கை டிச.3ல் நடக்கிறது. இங்கு பூபேஷ் பாகெல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. பா.ஜ தான் எதிரணி. 15 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்த பா.ஜ கடந்த முறை பூபேஷ் பாகெலிடம் ஆட்சியை பறிகொடுத்தது.

இந்த முறை மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பா.ஜவும், தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியில் நீடிக்க காங்கிரசும் போராடுகிறது. இடையில் மாநிலத்தின் முதல் முதல்வர் அஜித் ஜோகி மகன் அமித் ஜோகி தலைமையிலான ஜனதா காங்கிரஸ் சட்டீஸ்கர் தனி அணியாக 60 தொகுதிகளில் களம் இறங்கி உள்ளது. பகுஜன் சமாஜ் + கோண்ட்வானா கட்சி இணைந்து 90 தொகுதிகளிலும், ஆம்ஆத்மி 57 தொகுதிகளிலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் 25 தொகுதியிலும் களம் இறங்கி உள்ளன. மொத்தம் 90 தொகுதிகளிலும் எக்கச்சக்க விஐபிகள் களம் இறங்கி உள்ளதால் தேர்தல் களம் அனல் பறக்கிறது. அதன் விவரம் வருமாறு:

1 பதான்: முதல்வர் பூபேஷ் பாகெல் சொந்த தொகுதி. மீண்டும் அங்கு களம் இறக்கப்பட்டுள்ளார். அவருக்கு போட்டியாக துர்க் தொகுதி எம்பி விஜய் பாகெலை களம் இறக்கி போட்டி அளித்துள்ளது பா.ஜ. அங்கு முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியின் மகன் அமித் ஜோகியும் ஜனதா காங்கிரஸ் சட்டீஸ்கர் கட்சி சார்பில் களம் இறங்கி உள்ளதால் மும்முனை போட்டியால் திணறுகிறது பதான் தொகுதி.

2 அம்பிகாபூர்: துணைமுதல்வர் டி.எஸ். சிங் தியோவின் தொகுதி. அவரை வீழ்த்த உள்ளூர் தலைவர் ராஜேஷ் அகர்வால் பா.ஜ சார்பில் களம் இறக்கப்பட்டுள்ளார்.

3 சக்தி: சட்டீஸ்கர் சபாநாயகரும், முன்னாள் ஒன்றிய இணை அமைச்சருமான சரண்தாஸ் மாகாந்த் இங்கு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பா.ஜ சார்பில் கிலாவான் சாகு நிறுத்தப்பட்டுள்ளார்.

4 சித்தரகோட்: சட்டீஸ்கர் காங்கிரஸ் தலைவர் தீபக் பாஜ் இங்கு நிறுத்தப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து பா.ஜ சார்பில் வினாயக் கோயல் நிறுத்தப்பட்டுள்ளார்.

5 ராஜ்நத்க்கான்: சட்டீஸ்கர் முன்னாள் முதல்வர், 15 ஆண்டுகாலம் மாநிலத்தை ஆட்சி செய்த பா.ஜவின் பெரும் தலைவர் ராமன்சிங் இங்கு 2008ல் இருந்து மீண்டும் மீண்டும் களம் இறக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து இந்த முறை காங்கிரஸ் கட்சி சார்பில் கிரிஷ் தேவன்கன் நிறுத்தப்பட்டுள்ளார்.

6 ஜான்ஜ்கிர்-சம்பா: சட்டீஸ்கர் எதிர்கட்சி தலைவர் நாராயண் சாண்டல் இங்கு பா.ஜ சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் வியாஸ் காஸ்யாப் களம் இறக்கப்பட்டுள்ளார்.

7 பாரத்பூர்-சோன்ஹத்: ஒன்றிய பழங்குடியினர் துறை இணை அமைச்சர் ரேணுகா சிங் இங்கு பா.ஜ வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். அவரை எதிர்த்து குலாப்சிங் காம்ரோ நிறுத்தப்பட்டுள்ளார். போட்டி கடுமையாக உள்ளது.

8 பாதல்கான்: ராஜ்கார்க் தொகுதி எம்பி கோமதி சாய் இந்த தொகுதியில் பா.ஜ சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ராம்புகார்சிங் நிறுத்தப்பட்டுள்ளார்.

9 தார்சிவா: சட்டீஸ்கர் மாநிலத்தின் பிரபல நடிகர் அனுஜ் சர்மா இங்கு பா.ஜ சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார். 2014ம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம் பா.ஜவில் இணைந்த இவருக்கு தற்போது தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்பட்டுள்ளது. அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் சாயா வர்மா நிறுத்தப்பட்டுள்ளார்.

இவர்கள் தவிர பா.ஜ சார்பில் முன்பு அமைச்சர்களாக இருந்த லதா உசண்டி கோண்டகான் தொகுதியில் சட்டீஸ்கர் முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் மோகன் மார்கம்மை எதிர்த்து நிறுத்தப்பட்டுள்ளார். அந்தகார்க் தொகுதியில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் விக்ரம் உசேண்டியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ரூப்சிங் நிறுத்தப்பட்டுள்ளார். நவகார்க் தொகுதியில் முன்னாள் அமைச்சர் தயாள்தாஸ் பாகெலை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் குரு ருத்ரகுமாரும், பிலாய்நகர் தொகுதியில் முன்னாள் சபாநாயகர், முன்னாள் அமைச்சருமான பிரேம்பிரகாஷ் பாண்டேவை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளராக தேவேந்திர யாதவும்,

குரத் தொகுதியில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான அஜய் சந்திரசேகரரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் தாரணி சந்திரசேகர் நிறுத்தப்பட்டுள்ளனர். ராய்ப்பூர் சிட்டி தெற்கு தொகுதியில் முன்னாள் உள்துறை அமைச்சரும், பா.ஜவின் பலம் வாய்ந்த தலைவருமான பிரிஜ் மோகன் அகர்வாலை வீழ்த்த இந்த முறை காங்கிரஸ் சார்பில் மகாந்த் ராம்சுந்தர் தாஸ் நிறுத்தப்பட்டுள்ளார். ராய்ப்பூர் சிட்டி மேற்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் ராஜேஷ் முனாத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் விகாஸ் உபாத்யாயா நிறுத்தப்பட்டுள்ளார். இதனால் போட்டி கடுமையாக உள்ளது.

The post களம் இறங்கிய விஐபிக்கள் சட்டீஸ்கரில் காத்திருக்கும் சவால்கள்: அமைச்சர்களை எதிர்ப்பவர்கள் யார்? appeared first on Dinakaran.

Tags : Chhattisgarh ,Naxal ,Dinakaran ,
× RELATED என்கவுன்டரில் நக்சல் பலி