×

கவுன்சலிங் ரூம்

நன்றி குங்குமம் டாக்டர்

மருத்துவப் பேராசிரியர் முத்தையா

எங்கள் மகளுக்குப் பத்து வயது. இப்போதும் அவள் தூக்கத்தில் சிறுநீர் கழிக்கிறாள். இந்தப் பழக்கத்தை எப்படி மாற்றுவது?
– ஆர்.பரமேஸ்வரி, திருச்செந்தூர்.

குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பது இயல்புதான். ஆனால், பத்து வயதுக் குழந்தை படுக்கையில் சிறுநீர் கழிப்பது கவனிக்க வேண்டிய விஷயம்தான். படுக்கையில் சிறுநீர்
கழிப்பதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கக்கூடும். ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதால் சிறுநீர் வருவதை உணர முடியாமல் போகிறது. இதற்கு, ஹார்மோன் சமச்சீரின்மை, சிறுநீரகத் தொற்றுகள், தீவிர மலச்சிக்கல் போன்றவை காரணமாக இருக்கலாம்.

இவை தவிர சிறுநீரகப்பை முழுமையாக வளர்ச்சி அடையாமல் இருப்பது அல்லது அதன் செயல்திறன் குறைவாக இருப்பது, தூக்கத்திலிருந்து எழ முடியாத அளவுக்கு ஆழமான உறக்கத்தில் இருப்பது, மரபியல் பிரச்னைகள் போன்றவையும் தூக்கத்தில் சிறுநீர் கழிப்பதற்கான காரணங்களாக இருக்கலாம். இந்தப் பிரச்னையைத் தவிர்க்க, குழந்தைகளுக்குக் கழிவறைப் பழக்கங்களை முறையாகச் சொல்லித்தர வேண்டியது அவசியம்.

சிறுவயதில் குழந்தை சிறுநீர் கழிக்கும்போது முழுமையாகக் கழிக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டியது அவசியம். குறிப்பாக, தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் குழந்தை, இரவு தூங்கச் செல்வதற்கு முன் முழுமையாகச் சிறுநீர் கழித்துவிட்டதா என்பதைப் பெற்றோர் அவசியம் பார்க்க வேண்டும்.

மேலும், இரவு நேரத்தில் குழந்தைக்கு நீர்ச்சத்து அதிகமுள்ள உணவுகளைத் தருவதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை கொடுத்துவிட்டால், சிறுநீர் கழிக்காமல் படுக்க வைக்காதீர்கள். ‘அலாரம் டெக்னிக்’ நன்றாக உதவும். தூங்க ஆரம்பித்த ஓரிரு மணி நேரம் கழித்து அலாரம் வைத்து குழந்தையை எழுப்பி, பாத்ரூம் அழைத்துச் சென்று சிறுநீர் கழிக்கவைத்து படுக்கவைக்கலாம். தினமும், எந்த நேரத்தில் குழந்தை சிறுநீர் கழிக்கிறதோ, அந்த நேரத்தில் இந்த முறையைப் பின்பற்றலாம்.

இந்தப் பிரச்னைக்கு மாத்திரைகள், தெரபிகள் உள்ளன. தெரபிகள் இறுதி நிலையில்தான் பரிந்துரைக்கப்படும். இப்போதைக்கு அவை குறித்து யோசிக்க வேண்டாம். மருத்துவ ஆலோசனை பெற்று, குழந்தையின் உடலில் சிறுநீர் உற்பத்தி அளவைக் குறைக்கும் மாத்திரைகளை வாங்கிக் கொடுக்கலாம்.

சிறுநீரகத்தின் திறன் குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு, அதன் செயல்திறனை அதிகரிக்கும் மாத்திரைகள் தேவைப்படும் என்பதால், அவற்றைக் கொடுக்கலாம். தேவைப்பட்டால் மனஅழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகளும் வழங்கப்படும். பெண் குழந்தை, பருவ வயதை அடைந்தால் சிக்கல் பெரிதாகும். எனவே, பிரச்னையை விரைந்து சரிசெய்ய தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.

என் தந்தைக்கு 70 வயது. கடந்த வருடம் ஒரு விபத்துக்குப் பின் கால் மூட்டில் அடிபட்டு படுத்தபடுக்கையாய் இருக்கிறார். இவருக்கு முதுகெங்கும் படுக்கைப்புண் உருவாகி உள்ளது. இது ஏன் ஏற்படுகிறது? இதற்கு என்ன தீர்வு?
– கே.எஸ்.முத்தமிழ் விரும்பி, நாமக்கல்.

படுக்கைப்புண் என்பது படுக்கையில் புரண்டு படுக்க முடியாத அளவுக்கு நோய்வாய்ப்பட்டவர்களுக்கு, குறிப்பாக மிகவும் மெலிந்து தளர்ந்த நிலையில் இருக்கும் வயதானவர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஏற்படுகின்றன. இவை நாட்பட்ட திறந்த புண்கள். உடலில் எலும்புப் பகுதிகளில் தோல் அழுந்தும் இடங்களில் ஏற்படுகின்றன. பெரும்பாலும், புட்டம், முதுகு, தோள்பட்டை, முழங்கை, கால்களில் ஏற்படுகின்றன. படுக்கைப்புண்கள் ஏற்பட்டவர்களை உப்பு அல்லது ஹைட்ரஜன் பெராக்சைடு கலந்த வெந்நீரில் கழுவ வேண்டும்.

பிறகு, போவிடோன் அயோடின் போன்ற ஆன்டிபயாடிக் களிம்புகளை போட வேண்டும். பிறகு சுத்தமான காட்டன் வலைத்துணியால் கட்டுப்போட்டு பாதுகாக்க வேண்டும். தினமும் கட்டை நீக்கி சுத்தம் செய்து, புதிய கட்டு இட்டு வந்தால், புண்கள் குணமாகும். படுக்கைப் புண் வராமல் இருக்க இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை நோயாளியைப் புரண்டு படுக்க வையுங்கள். நோயாளியை தினமும் குளிப்பாட்டவும், எண்ணெய் தேய்த்துவிடவும் வேண்டும்.

மென்மையான படுக்கை விரிப்புகளை, தலையணைகளை பயன்படுத்தலாம். சிறுநீர், மலம், வாந்தி போன்றவற்றால் படுக்கை அசுத்தமானால் உடனடியாக மாற்ற வேண்டும். எலும்பு உள்ள பகுதிகள் அதிகம் அழுந்தாதப் படி தலையணை அல்லது மென்மையான துணியை அடியில் வைக்கலாம்.

எனக்கு வயது 53. நான் கடந்த ஆண்டு முதல் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவருகிறேன். தற்போது இந்த நோய் என் மனைவிக்கும் பரவி உள்ளதோ என சந்தேகமாக உள்ளது. யானைக்கால் நோய் ஏன் ஏற்படுகிறது? இது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவுமா? இதற்கு என்ன தீர்வு?
– பெ.தேவகிருபை, நாகர்கோவில்.

யானைக்கால் நோய் எனப்படும் லிம்ஃபாடிக் ஃபைலெரியாசிஸ் (Lymphatic filariasis) உடலின் நிண நீரில் வாழும் ஒட்டுண்ணிப் புழுக்களால் உருவாகிறது. நிணநீரில் வாழும் மைக்ரோஃபைலேரியா எனப்படும் ஒட்டுண்ணிப் புழுக்களின் லார்வாக்கள் ரத்த ஓட்டத்தில் கலந்து உடல் முழுக்கப் பயணிக்கும். இந்த பாதிப்பு ஏற்பட்டவரைக் கொசு கடிக்கும்போது, அதன் லார்வாக்கள் கொசுவுக்குத் தொற்றி, அந்தக் கொசு இன்னொருவரைக் கடிக்கும் போது அவருக்கும் யானைக்கால் நோய் ஏற்படுகிறது. திடீரென அடிக்கடி ஏற்படும் காய்ச்சல், தலைவலி, உடல் வலி, சோர்வு, குளிர் நடுக்கம், மலேரியா போல விட்டு விட்டு தோன்றும் காய்ச்சல், கை, கால்களில் தோல் வீக்கம், வலி, பெரிதான நிணநீர் முடிச்சுகள், நிணநீர் குழாய் வீக்கம், கை, கால்களின் கீழ்ப்பகுதி, பிறப்புறுப்பில் வீக்கம் போன்றவை இதன் அறிகுறிகள்.

இந்த பாதிப்பு ஏற்பட்டவருக்கு டைஈதல் கார்பமிஸின் (டிஈசி -ஹெட்ரசான்) மாத்திரைகள் தரப்படுகின்றன. இந்த மருந்தை நோயாளியின் எடையில் கிலோவுக்கு 6 மி.கி என்ற கணக்கில் இரண்டு வாரங்களுக்குத் தர வேண்டும். இதன் விலை மிகவும் மலிவு. இதனுடன் அல்பெல்டஸோல் மாத்திரையையும் மருத்துவர் பரிந்துரையுடன் அளவாக எடுத்துக்கொள்ளலாம். கால் வீக்கத்தைக் குறைக்க எலாஸ்டிக் பேண்ட் அணிவது நல்லது. இது நிரந்தரமாகக் கால் வீங்கிப்போவதைத் தவிர்க்கும்.

இரவு நேரத்தில் கட்டை அவிழ்த்துவிடுவது நல்லது. இந்த நோய் கொசுக்கள் மூலம் பரவுவதால், சுகாதாரமான சூழல் அவசியம். இந்த கொசுக்கள் மாலை நேரத்தில்தான் கடிக்கும் என்பதால், கொசுவலை போன்றவற்றைப் பயன்படுத்தி இந்த நோய் பரவாமல் தடுக்கலாம்.

The post கவுன்சலிங் ரூம் appeared first on Dinakaran.

Tags : Saffron ,Dr. ,Muttiah ,Dinakaran ,
× RELATED பயிர்கள் நன்றாக வளர்ந்து அதிக மகசூல்...