×

ஒன்றிய பாஜக அரசின் தூண்டுதல் காரணமாகவே எனக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சாடல்!!

புதுடெல்லி : டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி அரசு அமல்படுத்திய புதிய மதுபானக் கொள்கையானது, மது விற்பனை உரிமையாளர்கள் பயனடையும் வகையில் அவர்களுக்கு சாதகமான அம்சங்களை சேர்த்து வரையறை செய்ததாகவும், இதற்காக பிரதிபலனாக பெரும் தொகையை ஆம் ஆத்மி பெற்றதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இது குறித்து எதிர்கட்சிகள் எழுப்பிய புகார் மற்றும் மனு அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்தார்.

இதையடுத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய சிபிஐ, இதில் பலகோடி ரூபாய் சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தது. சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரியைின் அடிப்படையில் சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கை தனியாக பதிவு செய்து அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரியில் அமலாக்கத் துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அவரை தொடர்ந்து, கடந்த மாதம் இந்த வழக்கில் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கும் கைது செய்யப்பட்டார்.

மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் இரு தினங்களுக்கு முன் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவு வெளியான ஒரு மணி நேரத்தில், இதே வழக்கில் முதல்வர் கெஜ்ரிவால் நவம்பர் 2ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. இந்த நிலையில் சம்மனை திரும்பப் பெற வேண்டும் என்று அமலாக்கத்துறைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் சம்மன் அனுப்பியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், அமலாக்கத்துறை சம்மன் சட்டவிரோதம், அரசியல் உள்நோக்கம் கொண்டது. ஒன்றிய பாஜக அரசின் தூண்டுதல் காரணமாகவே தனக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.4 மாநில தேர்தல் பிரச்சாரத்திற்கு தாம் செல்வதை தடுக்கவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆகவே அமலாக்கத்துறை தனக்கு அனுப்பிய நோட்டீசை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கடிதத்தால் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக மாட்டார் என தெரிகிறது. இதனிடையே மத்திய பிரதேசத்தின் சிங்ராலியில் நடக்கும் தேர்தல் பிரச்சாரத்திற்கு பஞ்சாப் முதல்வருடன் செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

The post ஒன்றிய பாஜக அரசின் தூண்டுதல் காரணமாகவே எனக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சாடல்!! appeared first on Dinakaran.

Tags : Union BJP government ,Delhi ,Chief Minister ,Kejriwal Chatal ,New Delhi ,Arvind Kejriwal ,Enforcement Directorate ,Chief Minister Kejriwal Chatal ,
× RELATED ஒன்றிய பாஜக அரசை கண்டித்து பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்