×

ஒரே நாடு ஒரே அடையாள அட்டை திட்டத்தில் மாணவர்களின் விவரங்களை பதிவிடக்கோரி எஸ்எம்எஸ்: பெற்றோர் அதிர்ச்சி

சென்னை: ஒரே நாடு, ஒரே அடையாள அட்டை என்ற திட்டத்தில் மாணவர்களின் சுயவிவரங்களை பதிவிடக்கோரி பள்ளிகள் மாணவ-மாணவிகளின் பெற்றோர் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகின்றது.
ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற வரிசையில் பள்ளி மாணவர்களுக்காக ஒரே நாடு, ஒரே அடையாள அட்டை என்ற திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் மாணவ-மாணவிகளுக்கு தனித்துவமான ஒரு எண் வழங்கப்படும். இதற்கு தானியங்கு நிரந்தர கல்வி கணக்குப் பதிவு(ஏ.பி.ஏ.ஏ.ஆர்.) என்று பெயரிடப்பட்டுள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு ஒன்றிய அரசு அறிமுகம் செய்து வந்த ‘புதிய தேசிய கல்விக் கொள்கை’யில் இந்த திட்டம் இடம்பெற்றுள்ளது. அதன் அடிப்படையில் தற்போது இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒன்றியய அரசு முயற்சித்து வருகிறது. இது தொடர்பான அறிவிப்பை அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு சமீபத்தில் அனுப்பி இருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட சில பள்ளிகள் இந்த திட்டத்துக்கான பணிகளை தொடங்கி இருக்கிறது. அதன்படி, பள்ளிகள் மாணவ-மாணவிகளின் பெற்றோர் எண்ணுக்கு இதுதொடர்பாக குறுஞ்செய்தியை அனுப்பி வருகின்றனர்.

அந்த குறுஞ்செய்தியில் இணைக்கப்பட்ட விண்ணப்ப லிங்கில் சென்று மாணவர்களின் சுயவிவரங்களை பதிவிட தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், மாணவர்களின் கல்வி விவரங்களும், கூடுதல் திறமைகளும், ஆதார் அட்டையில் உள்ள அடிப்படை தகவல்களும் இடம்பெறும் வகையில் விண்ணப்பங்கள் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த திட்டம் சென்றடையுமா என்பதற்கு பள்ளிக்கல்வித் துறைதான் பதில் அளிக்க வேண்டும் என கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

The post ஒரே நாடு ஒரே அடையாள அட்டை திட்டத்தில் மாணவர்களின் விவரங்களை பதிவிடக்கோரி எஸ்எம்எஸ்: பெற்றோர் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Chennai ,One Nation ,
× RELATED ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ கூட்டம்: மேற்குவங்க முதல்வர் திடீர் புறக்கணிப்பு