ஊட்டி, நவ.1: குன்னூர் நகராட்சியின் மாதாந்திர கூட்டம் நேற்று நடைபெற்றது. நகராட்சி தலைவர் ஷீலா கேத்ரின் தலைமை வகித்தார். துணை தலைவர் வாசிம் ராஜா, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஏக்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து வார்டு உறுப்பினர்களும் தங்களின் பகுதியில் உள்ள அடிப்படை தேவைகள் குறித்தும், நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் பேசினர். நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் முடிக்கப்பட்ட பணிகள் குறித்து அதிகாரிகள் பேசினர்.
இறுதியாக நகராட்சி துணை தலைவர் வாசிம் ராஜா பேசுகையில்,‘‘சுற்றுலா தலங்களில் முக்கிய பகுதியாக உள்ள குன்னூரில் மலைப்பாதையில் அடிக்கடி சுற்றுலா வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகிறது. சமீபத்தில் மரப்பாலம் பகுதியில் தனியார் சுற்றுலா பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர். சுற்றுலா வரக்கூடிய மக்கள் இது போன்று எதிர்பாராத விபத்துகளில் சிக்கி உயிரிழப்பது நீலகிரி மாவட்ட மக்கள் மத்தியில் பெறும் மன வருத்தத்தை ஏற்படுத்தி வருகிறது.
எனவே, தேசிய நெடுஞ்சாலைத்துறையுடன், குன்னூர் நகராட்சி இணைந்து குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் தேவையான இடங்களில் எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைக்கவும், தடுப்பு சுவர்களை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். இத்தீர்மானத்திற்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
The post குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் தடுப்புகள், அறிவிப்பு பலகை அமைக்க தீர்மானம் appeared first on Dinakaran.