×

திருவெண்ணெய்நல்லூர் பாதிரியார் கொலை வழக்கில் 2 ஆண்டுக்கு பின் கொலையாளிகள் கைது

விருத்தாசலம், நவ. 1: திருவெண்ணெய்நல்லூர் பாதியார் கொலை வழக்கில் 2 ஆண்டுகளுக்கு பிறகு 2 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். பணத்துக்காக கொலை செய்ததாக போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். சென்னையிலிருந்து விருத்தாசலம் செல்லும் ரயில் பாதையில் திருவெண்ணெய்நல்லூர் அருகே கீரிமேடு பகுதியில் கடந்த 6.10.2021 முதியவர் ஒருவர் தண்டவாளத்தில் இறந்து கிடந்தார். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ஜெயபிரகாஷ் கொடுத்த புகாரின்பேரில் விருத்தாசலம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே சித்தானங்கூரை சேர்ந்த வின்சென்ட் லூயிஸ்(82) என்பதும், பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்று அப்பகுதியில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக இருந்து வந்தது தெரிய வந்தது.

மேலும் பாதிரியார் பயன்படுத்தி வந்த செல்போன் காணாமல் போனதால் போலீசார் செல்போன் சிக்னலை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் செல்போன் தொடர்பில் இல்லை. பின்பு இஎம்ஐ நம்பரை வைத்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் அந்த செல்போனை பெங்களூரை சேர்ந்த ரம்யா என்பவர் பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து பெங்களூர் சென்ற போலீசார் ரம்யாவை விசாரித்ததில் சித்தானங்கூரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் எலக்ட்ரீசியன் அமர்நாத் (28) என்பவர் செல்போனை கொடுத்தது தெரிய வந்தது. அதன்பேரில் நேற்று அமர்நாத்திடம் விசாரித்தபோது அமர்நாத்தும், சித்தானங்கூரைச் சேர்ந்த பூக்கட்டும் தொழிலாளியான கலியன் மகன் சிவா என்ற மாரிமுத்து(32)வும் சேர்ந்து வின்சென்ட் லூயிசை கொலை செய்து தண்டவாளத்தில் போட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் விருத்தாசலம் ரயில்வே காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இருவரும் வின்சென்ட் லூயிசின் தம்பி போஸ்கோ லூயிசின் தோட்டத்தில் வேலை பார்த்து வந்ததும், அப்போது அவர்களுக்கு வின்சென்ட் லூயிஸ் அறிமுகமானதும், வின்சென்ட் லூயிசுக்கு நாக்பூரில் இருந்து பணம் வந்ததால் அந்த பணத்தை திருட திட்டம் தீட்டியதும், சம்பவத்தன்று அமர்நாத், சிவா இருவரும் வின்சன்ட் லூயிஸ் வீட்டிற்கு சென்று பணம் கேட்டு மிரட்டி தாக்கியதும், பின்னர் ரயிலில் இருந்து விழுந்து இறந்ததாக திட்டம் தீட்டி ரயில் தண்டவாளத்தில் போட்டதும், அப்போது அவருக்கு உயிர் இருந்ததால் அவரது தலையில் அடித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாக இருவரும் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

பின்பு இருவரையும் கைது செய்து விருத்தாசலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இரண்டு வருடமாக நிலுவையில் இருந்த வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து துப்பு துலக்கிய திருச்சி ரயில்வே உட்கோட்ட டிஎஸ்பி மகாதேவன், சிதம்பரம் இன்ஸ்பெக்டர் அருண் மற்றும் போலீசாரை, தமிழ்நாடு இருப்புப்பாதை காவல்துறை கூடுதல் இயக்குனர் வனிதா பாராட்டினார். மேலும் திருச்சி ரயில்வே போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் நேற்று விருத்தாசலம் ரயில்வே காவல்நிலையத்திற்கு வந்து போலீசாரை பாராட்டினர்.

The post திருவெண்ணெய்நல்லூர் பாதிரியார் கொலை வழக்கில் 2 ஆண்டுக்கு பின் கொலையாளிகள் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvennainallur ,Vridthachalam ,Thiruvenneynallur ,Bhatiar ,
× RELATED விருத்தாசலம் அருகே ரயிலில் இருந்து...