×

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 3 மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மூன்று மாத காலமாக சம்பளம் வழங்காததை கண்டித்தும் உடனடியாக அதற்கான நிதியை ஒதுக்கிட வலியுறுத்தியும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் மற்றும் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் திருப்போரூர், காட்டாங்கொளத்தூர் ஆகிய பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணி செய்தவர்களுக்கு கடந்த மூன்று மாத காலமாக சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. இதனால், அப்பணியில் ஈடுபட்டவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், மூன்று மாத காலமாக சம்பளம் கொடுக்காமல் இருப்பதற்கு தாமத சம்பள பட்டுவாடா சட்டத்தின்படி இழப்பீட்டு தொகையுடன் சம்பளத்தை சேர்த்து வழங்க வேண்டும். தொடர்ந்து வேலை வழங்கிடவேண்டும், சட்டப்படி 15 நாட்களுக்குள் சம்பளம் வழங்குவதை உத்ரவாதப்படுத்த வேண்டும். ஆண்டுக்கு 200 நாட்கள் வேலையும், ரூ.600 சம்பளம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்போரூர் இந்தியன் வங்கி முன்பு நேற்று முன்தினம் விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் பொன்னப்பன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோரிக்கைகளை விளக்கி வி.தொ.ச மாநில துணைத்தலைவர் கோதண்டன், சிபிஐஎம் ஒன்றிய செயலாளர் செல்வம், மாற்றுத்திறனாளி சங்கத்தின் மாவட்ட தலைவர் வெள்ளி கண்ணன், ஒன்றிய தலைவர் லிங்கன், ஒன்றிய செயலாளர் அருள் ராணி, விதொச ஒன்றிய தலைவர் விக்னேஷ், மாணவர் சங்க மாவட்ட தலைவர் நரேஷ் ஆகியோர் பேசினர். இதேபோன்று, காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு விதொச சார்பில் ஒன்றிய தலைவர் ராமானுஜம் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாவட்ட தலைவர் சண்முகம், சிஐடியு மாவட்டத் தலைவர் சேஷாத்திரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் அரிகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு பகுதி செயலாளர் வேலன் உள்ளிட்ட பலர் பேசினர்.

The post தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 3 மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Mahatma Gandhi ,
× RELATED செங்கல்பட்டு பகுதியில் சாலையில்...