×

ரூ.394 கோடியில் கிளாம்பாக்கம் நவீன பேருந்து நிலையம் தயார்: முதல்வர் பங்கேற்கும் விழா மேடையை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு.! ஒட்டுமொத்த பணிகளை விரைவில் முடிக்க உத்தரவு

கூடுவாஞ்சேரி: ரூ.394 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கிளாம்பாக்கம் நவீன பேருந்து நிலையத்தை முதல்வர் திறந்து வைக்கும் விழா மேடை பகுதியை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று காலை ஆய்வு செய்தார். ஒட்டுமொத்த பணிகளையும் விரைவில் முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காகவும், தென்மாவட்டங்களுக்கு சென்று வரும் பயணிகளின் வசதிகளுக்காகவும், சென்னை, வண்டலூர் அடுத்த ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் உள்ள கிளாம்பாக்கத்தில் 110 ஏக்கர் நிலப்பரப்பில் 86 ஏக்கரில் ரூ.394 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் தலைமையில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று காலை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அனைத்துத்துறை அதிகாரிகளையும் அழைத்து வருகிற 15ம் தேதி முதல் 20ம் தேதிக்குள் அனைத்து பணிகளையும் முடிக்கவேண்டும் என கண்டிப்புடன் கூறினார்.

பின்னர், பேருந்து நிலையத்தை திறந்து வைப்பதற்காக வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழா மேடை அமைக்கப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். எந்த அசம்பாவிதமும் நடக்காத வகையில், 3000 பேர் மட்டுமே பங்கேற்கும் வகையில் இருக்கை அமைக்க ஏற்பாடு செய்யுங்கள் என அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். இதையடுத்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:சரியான முறையில் திட்டமிடப்படாமல் 2019ல் ரூ.300 கோடி நிதி ஒதுக்கி 86 ஏக்கர் நிலப்பரப்பில் பேருந்து நிலையம் அமைக்கும் பணி தொடங்கி நடந்து வந்தது. இதனால் பேருந்து நிலைய திறப்பு விழா தள்ளிப்போனது. திமுக ஆட்சிக்கு வந்ததும் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காகவும், பருவ மழை முன்னெச்சரிக்கை முன்னிட்டும் பயனாளிகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை செய்து தரவும் முழு வீச்சில் திட்டமிடப்பட்டு கூடுதலாக ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டு தற்போது பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் ரூ.17 கோடி நிதி ஒதுக்கப்பட்டு ஜிஎஸ்டி சாலையின் 2 பகுதிகளிலும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதுபோல் ஜிஎஸ்டி சாலையின் குறுக்கே 2 நாட்களில் இரவோடு இரவாக ராட்சத ரெடிமேட் மழைநீர் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பயனாளிகளின் வசதிக்காக பொழுதுபோக்கு பூங்கா பேருந்து நிலையம் திறந்ததும் மக்கள் பயன்பாட்டிற்குவிடப்படும். பேருந்து நிலையத்தில் மற்றொரு புதிய நுழைவாயில் இன்னும் 40 நாட்களுக்குள் நிறைவு செய்யப்படும். இதில் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளன. ஆம்னி பேருந்துகளுக்கென்று தனியாக பேருந்து நிலையம் அமைக்கும் பணி முடிச்சூரில் முடிக்கப்படும். ஒட்டுமொத்த பணிகளையும் வருகிற நவம்பர் மாதம் 15ம்தேதி முதல் 20ம்தேதிக்குள் முடிக்கவேண்டும் என்று அனைத்து துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் விரைவில் திறந்து வைப்பார். இவ்வாறு கூறியுள்ளார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் 2024 புத்தாண்டு தினத்தில் திறக்கப்படலாம் அல்லது பொங்கல் பண்டிகை தினத்தன்று திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post ரூ.394 கோடியில் கிளாம்பாக்கம் நவீன பேருந்து நிலையம் தயார்: முதல்வர் பங்கேற்கும் விழா மேடையை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு.! ஒட்டுமொத்த பணிகளை விரைவில் முடிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Klampakkam ,Modern Bus Station ,Minister ,P. K. Sekarbaba ,Mudravancheri ,Klambakkam modern bus station ,Glampakkam ,Dinakaran ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...