×

பூங்குழலாள்‌ அபிராமி கடைக்கண்களே

நன்றி குங்குமம் ஆன்மிகம்

அபிராமி அந்தாதி- சக்தி தத்துவம்

“யாமம் வயிரவர்
ஏத்தும் பொழுது’’

ஸ்ரீவித்யா தந்திர சாஸ்திரத்தில் இது முக்கிய கலைச் சொல். இது உபாசகன் வழிபாடு செய்ய வேண்டிய காலத்தை குறிக்கிறது. உமையம்மையை வழிபாடு செய்பவர்களுக்கு நேரடியாக அவளே அருளை தராமல் அவளின் பரிவார தேவதைகளை கொண்டே மானுடர் விரும்பும் அனைத்து தேவைகளையும் பெற்று மகிழலாம். ‘அணங்கே அணங்குகள் நின் பரிவாரங்கள்’ (81) என்பதனால் அறியலாம். ஸ்ரீவித்யா உபாசனையில் இந்த பரிவார தேவதைகளை முதன்மையாக கொண்டு வழிபாடு செய்தால் வாழ்வியலையும், முதன்மை தேவதையை வழிபாடு செய்வதால் முக்தியையும், இரண்டையும் வழிபாடு செய்தால் ஞானத்தையும் பெறலாம். மேலும், ஒவ்வொரு பெண் தேவதைக்கும் ஒரு ஆண் தேவதை உண்டு. இந்த ஆண் தேவதையே அனைத்தையும் சாதித்து தரும்‌. ஆனால், ஆண்தேவதையானது உமையம்மையை பூசிப்பதனால் மட்டுமே அருளும்.

அதுபோல், ஆண் தேவதையை வழிபாடு செய்தால் ஒரு பெண் தேவதையை முன்நின்று அருளும். அது ஆண்தேவதையை பூசிப்பதால் மட்டுமே தன்னை பூசிக்காவிட்டாலும் முன்நின்று அருளும். இது ஸ்ரீவித்யா பூசனையின் ரகசியம்.இதையே ‘துணைவருடன்’ (28) என்பதனால் அறியலாம். அந்த வகையில்  வித்யா உபாசகர்களுக்கு ஆண் தேவதையாக அமைபவர் பைரவர் ஆவார். இந்த பைரவரே ஸ்ரீவித்யா மந்திரத்தை ஜெபம் செய்தால் சாதகனுக்கு உமையம்மையின் உத்தரவின் பெயரில் அனைத்து நலன்களையும் அனுபவ சாத்தியப்படுத்துவார். அதை மனதில் கொண்டே “வயிரவர்’’ என்கிறார். “ஏத்தும் பொழுது’’ என்பதனால் இரவு நேரத்தையே குறிக்கின்றார். “யாமம்” என்பதனால் இதனை நன்கு அறியலாம்.

ஸ்ரீவித்யா உபாசனை செய்பவர்களுக்கு இரவு நேரத்தில் பைரவர் தோன்றி சாதகன் உமையம்மையிடம் கேட்ட அனைத்தையும் நிறைவேற்றுவார் என்பதையே இந்த பாடல் வரி விளங்குகிறது. மேலும், இரவு நேரத்தில் வழிபாடு என்பது காளிக்கே பெரும்பாலும் நடைபெறும். அந்த காளி வழிபாட்டின் போதே பைரவர் தோன்றி அருள்வார். திரிபுரை என்று காளிக்கும் பெயர். தாயின் வயிற்றில் உள்ள கருவையும், வாழும் போதும், இறந்த பின்னும் மயானத்திலும் காளியே காக்கிறாள் கருவுடல், பரு உடல், பாருடல் என்ற மூன்று உடலை காப்பதனால் திரிபுரை என்று பெயர். இந்த காளி தேவியானவள் யாமம் என்ற நடு இரவில் வழிபாடு செய்யத் தக்கவள். இவ்வுலக வாழ்வு தொடர்பான அனைத்தையும் தரவல்லவள்.

அதையே மறைமுகமாக யாமத்தில் வழிபாடு செய்வதால் யாமளை என்றும் அழைக்கப்படுகிறாள். ‘கோமள யாமளை’ (70) என்பதனால் நன்கு அறியலாம். ‘கொம்பிருக்க’ (71) என்பதனால் தண்டத்தை கையிலே கொண்ட கால வடிவத்தை சூட்டும் பைரவரை காலபைரவர் என்று குறிப்பிடுவர். இவர் கையில் வைத்திருக்கும் தண்டம் எம தர்ம ராஜா கையில் வைத்திருக்கும் தண்டம் ‘இழைக்கும் வினைவழியே அடும் காலன்’ (33) அனைவரையும் வினைக்கேற்ப தண்டிப்பார். உமையம்மையின் அருளால் காலபைரவர் அக்காலனை ஒடுக்கி உபாசகனை காத்து அருள்வார். உபாசகனுக்கு கர்ம வசத்தால் கிடைக்காத பயனையும் தன் அருளால் தருவார். இது ஸ்ரீவித்யா உபாசனையை பற்றிய வழிபாட்டு செயல்முறை விளக்கமாகும். அதனால்தான் “யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது’’ என்கிறார்.

“எமக்கென்று வைத்தசேமம் திருவடி’’ “எமக்கு” என்பதனால் அபிராமிபட்டர் தனக்கு என்பதை குறிப்பிட்டாலும், இந்த இடத்தில் உபாசனை நெறியில் உபதேசம் எடுத்துக் கொண்டது முதல் ஒவ்வொரு உபாசகனும் செய்ய வேண்டியது ஐந்து முக்கிய கடமைகள். அந்த கடமைகளை செய்வதனால் தோன்றிய அனுபவத்தையே “எமக்கு” என்கிறார். ஆகமம் இதை பஞ்சாட்சரம் என்கிறது. குரு ஞானம், பூஜை, ஜபம், பாவனா, ஆசரணசாரம் இவைகளின் வழி தோன்றிய அனுபவமானது ஆகமங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி உள்ளதா? உள்ளது என்றால் மட்டுமே இது சாத்தியமாகும். இல்லை என்றால் அனுபவ சாத்தியப்படாது. அதைத்தான் “எமக்கு’’ என்கிறார் இதை ஒரு உதாரணத்தால் மேலும் விளங்கிக் கொள்ளலாம்.

ஒரு வகுப்பில் உள்ள ஐம்பது மாணவர்களுக்கும் ஆசிரியர் எந்தவிதமான ஏற்றத்தாழ்வும் இன்றி ஒரே மாதிரியாக பாடம் கற்பிக்கிறார். ஆசிரியரின் எண்ணம் மாணவர்கள் அனைவரும் அதை கற்று தேர்ச்சியடைய வேண்டும் என்பதே. மாணவர்கள் அனைவரும் அவரவரின் முயற்சி, பயிற்சியினால் எழுதிய தேர்வில் வெவ்வேறு விதமான மதிப்பெண்களை பெற்றனர். ஒரே மாதிரி ஆசிரியர் பாடம் எடுத்தபோதும், பயின்ற மாணவர்களின் மதிப்பெண் வேறுபட்டது. அதற்கு அவரவரின் தனிப்பட்ட முயற்சியே.

இந்த மதிப்பெண் மாறுபாட்டிற்கு காரணம், மாணவர்களே அன்றி ஆசிரியர் அல்ல. அதுபோல், உமையம்மை அனைவருக்கும் அருளை வாரி வழங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவளாகவே இருந்தும், அது உபாசகன் சார்ந்தே வேறுபட்டு அமைகிறது. உமையம்மையை சார்ந்ததல்ல. அதில்தான் முதன்மையாக இருப்பதை அவர் சூட்டிக் காட்டுகின்றார். ஒவ்வொரு உபாசகனுக்கும் தேவதையானது தனி அடையாளம் கொடுக்கும். அந்த தனி அடையாளத்தை பெற்றால் உபாசனை சித்தியாகிவிட்டது என்று பொருள். ‌“சித்தி’’ என்றால் அனுபவத்தையே குறிக்கும். பட்டருக்கு உமையம்மை அருள் கொடுத்து ஆண்டு கொண்டதை காட்டி, நாம் வழிபாட்டில் செய்ய வேண்டிய முறையையும், செய்ய கூடாதவற்றையும் தன் அனுபவத்தால் பதிவு செய்கிறார். இவை அனைத்தையும் மனதில் கொண்டே “எமக்கென்று வைத்த சேமம் திருவடி’’ என்கிறார்.

“செங்கைகள் நான்கு” என்பதனால் சிற்ப சாஸ்திரத்தின் படி நான்கு கைகளை கொண்டவளாய் உமையம்மையின் கைகளை அமைக்க வேண்டும். இந்த பாடலை பொறுத்தவரை, திரிபுரை என்ற தேவியின் கையில் பஞ்ச பாணமும், கரும்பு வில்லும் தாங்கி இன்னும் இரண்டு கைகளில் தாமம் என்னும் கயிறும், கடம்பு என்ற மலரையும் ஏந்தியவளாக இருக்க வேண்டும் என்று பட்டர் குறிப்பிடுகின்றார். பொதுவாக சிற்ப சாஸ்திர முறைப்படி முதலில் எந்த ஆயுதம் சொல்லப்படுகிறதோ அதை வலக்கையிலும் இரண்டாவதை இடக்கையிலும் அமைக்க வேண்டும். அந்த வகையில் கயிறு, கடம்பமலர், பஞ்சபாணம் என்னும் மலர்கொத்து, கரும்பு என்றும் அமைக்க வேண்டும்.

கீழ் கைகளை அங்கை என்றும், மேல் இரண்டு கைகளை செங்கை என்றும் குறிப்பிடுவது வழக்கம். இந்த கையில் உள்ள பொருள் சார்ந்தே உமையம்மையின் செயல் திறனை குறிப்பிட வேண்டும் என்கிறது சிற்பம். அந்த வகையில், உமையம்மையானவள் தாமம் என்ற கயிறு தாங்கினால் அது ஆசைகளை நிறைவேற்றும், இதை ‘ராக ஸ்வரூப பாஷாட்யா’ என்பதனால் அறியலாம்‌. கடம்ப மலர் தாங்கினால் வெற்றியின் அடையாளம். உலகின் எட்டுத் திக்கிலும் சென்று வெற்றி கொண்டவள். மதுரையில் உள்ள மீனாட்சி இதை அந்த கோயிலில் உள்ள எட்டு யானைகள் தாங்குவது போல் உள்ளதை கொண்டு அறியலாம். வெற்றியின் அடையாளமாக கடம்பமலரையே சாக்த ஆகமங்கள் கூறுகிறது. மதுரை கடம்பவனம் என்பதை கொண்டு அறியலாம்.

மேலும், படைபஞ்சபாணம் என்பதனால் மெய், வாய், கண், மூக்கு, செவி இவைகளை மகிழ்விப்பாள். இவைகளுக்கு வளமுட்டுபவள் என்றும் இதை ‘பஞ்தன்மத்ர சாயக’ என்ற சஹஸ்ர நாமத்தினால் அறியலாம். கையில் கரும்பை தாங்கி இருப்பதால் ஐம்புலன்களையும் இயக்கும் மனதை கொண்டிருக்கிறாள் ‘மனோ ரூபக்ஷு கோதண்டா’ என்ற சஹஸ்ர நாமத்தால் அறியலாம். இவ்வுலக வாழ்க்கைக்கு தேவையான புலன் வழி பெறப்படும் நல்ல அறிவையும், மனதின் வழி பெறப்படும் ஆனந்தத்தையும், புலன்களின் கட்டுப்பாட்டையும், அதனால் மனதை அடக்கி வெற்றி கொள்ளும் ஆற்றலையும், தன்னை வழிபடுபவர்க்கு அருள்பவள் என்று பொருள். அதையே ஒரே சொல்லில் “செங்கைகள் நான்கு’’ என்கிறார்.

“ஒளி செம்மை அம்மை’’என்பதனால் தாயாக கருதி வழிபட வேண்டும். தாயாக கருதி தியானம் செய்வதால் நாம் உபாசனையில் செய்யும் சிறுசிறு தவறுகளை மன்னிக்கவும், உபாசகன் கேட்கும் முன்னமே தானே முன்வந்து அருள்பவளாயும், காலதாமதமின்றி விரைவில் அருள்பவளாயும், மிகவும் அண்மையிலேயே இருந்து அவ்வப்போது தோற்றத்தை காட்டி உபாசனையில் நம்பிக்கையை காட்டி அதனால் அவரவர்கள் நல்லவை தீயவைகளை அறிவுக்குட்படுத்தி செம்மையுற செய்வதால் “ஒளி செம்மை அம்மை’’ என்றார். மேலும், ஸ்ரீவித்யா உபாசனையில் உமையம்மை ஒன்பது நிறங்களில் தியானிக்கப்படுகிறாள். ஒவ்வொரு நிறத்திலும் தியானிப்பதனால் அந்த உமையம்மையின் அருளின் பலன் மாறுபடுகிறது.

அபிராமி பட்டரோ, ஒன்பது நிறங்களிலும் தியானித்து உள்ளார். நவரத்தின கற்களை அமைத்து ஸ்ரீசக்கரத்தில் வழிபாடு செய்பவர் ஒன்பது வித பலனையும், ஒருங்கே பெறலாம் என்கிறது பூஜா பத்ததி நூல்கள். ‘கோமள வல்லி’ (96), ‘வயிரக் குழை’ (78), ‘உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம்’ (1) என்பதனால் இதை அறியலாம்.

மேலும், `யாமளை’ (71), ‘நீலி, (8) காளி, (77) ‘பச்சை வண்ணமும்’ (70) ‘கலந்த பொன்னே’ (46), ‘மின்னாயிரம் கூடி’ (55), ‘உதிக்கின்ற செங்கதிர்’ (1), சொற்கள் எல்லாம் உமையம்மையின் நிறத்தை குறித்து கூறுவதையே. இப்பாடலில், “செம்மை” என்ற சிவப்பு நிறத்தை கூறுகின்றார். சிவப்பு நிறத்தில் உள்ள உமையம்மை ராஜச குணம் உடையவளாய், விரைவாய், அருள்வாள், இருப்பாள் என்கிறது. உரியின் மேல் நின்று பாடுவதால் இரவிலேயே விரைவில் நிலவு தோன்ற வேண்டும் என்று பாடுவதால் “ஒளி செம்மை அம்மை’’ என்கிறார்.

தொகுப்பு: முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

The post பூங்குழலாள்‌ அபிராமி கடைக்கண்களே appeared first on Dinakaran.

Tags : Boonguzhalal ,Abhirami ,Kumkum ,Anmigam ,Abhirami Anthadi ,Shakti Tattva ,Tantra ,
× RELATED குழந்தைகளின் புரதச்சத்து குறைபாட்டை தவிர்க்கும் கொண்டைக்கடலை…