×

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக ஒன்றிய அரசு உறுதி: ஒன்றிய அமைச்சருடனான சந்திப்புக்கு பிறகு டி.ஆர்.பாலு எம்பி பேட்டி

புதுடெல்லி: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக ஒன்றிய அரசு உறுதியளித்துள்ளது என்று ஒன்றிய அமைச்சருடான சந்திப்புக்கு பிறகு டி.ஆர்.பாலு எம்பி கூறினார். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரதமர் மற்றும் வெளியுறவு துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியது மட்டுமில்லாமல் அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ராமேஸ்வரத்தை சேர்ந்த 12 தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், ஒன்றிய இணை அமைச்சர் முரளிதரனை அவரது அலுவலகத்தில் திமுக எம்பி டி.ஆர்.பாலு சந்தித்தார். அப்போது, தமிழக மீனவர்களின் விடுதலை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தின் நகலை வழங்கினார். மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்கள் உள்பட 37 தமிழக மீனவர்களை உடனடியாக இலங்கை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும்’ என்றும் வலியுறுத்தினார். இதையடுத்து டி.ஆர்.பாலு, நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக முதல்வரின் கடிதம் ஒன்றிய அரசுக்கு கிடைத்தது என்றும் அதில் மொத்தம் 64 மீனவர்கள், 10 படகுகளை விடுவிப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஒன்றிய அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

எதிர்காலத்தில் இதுபோன்ற கைது நடவடிக்கை இருக்க கூடாது என்று தமிழக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட இலங்கை அரசுடன் ஒன்றிய அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்களை விடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக பிடிபட்ட படகுகளுடன் அதன் உரிமையாளர்களும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என இலங்கை அரசு புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது. அதனை ரத்து செய்ய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். தமிழக அரசின் கோரிக்கையை துறைசார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்வதாக ஒன்றிய இணை அமைச்சர் தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.

The post இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக ஒன்றிய அரசு உறுதி: ஒன்றிய அமைச்சருடனான சந்திப்புக்கு பிறகு டி.ஆர்.பாலு எம்பி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Union Government ,Sri Lankan Navy ,Balu MP ,Union ,Minister ,New Delhi ,DR ,Union Minister ,Dinakaran ,
× RELATED இலங்கை மீனவர்களை விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ