×

ஊத்துக்கோட்டை அருகே பரபரப்பு பட்டா வழங்கிய விவகாரம் தொடர்பாக இரு தரப்பினர் இடையே மோதல்: கல்வீச்சில் 2 போலீசாருக்கு காயம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே வீட்டுமனை பட்டா கொடுத்த இடத்தில் குடிநீர் பைப் லைன் உடைந்ததாக, இரு தரப்பினர் இடையை மோதல் ஏற்பட்டது. இதில் நடைபெற்ற கல்வீச்சில் இன்ஸ்பெக்டர் உட்பட 2 போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. ஊத்துக்கோட்டை அருகே லட்சிவாக்கம் ஊராட்சி காலனி பகுதியில் 180க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் வீட்டுமனை பட்டா கேட்டு கடந்த வருடம் போராட்டம் நடத்தியதின் பலனாக 43 பேருக்கு அருகில் உள்ள பெரம்பூர் கிராமத்தில், தோப்பு புறம்போக்கு நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டாவை வருவாய்துறையினர் வழங்கினர்.

மேலும் இடத்தை அளவீடு செய்து கொடுக்கவில்லை என்றதால், பின்னர் இடத்தையும் அளவீடு செய்து கொடுத்தனர். ஆனால் குடிசை போட அனுமதி மறுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த லட்சிவாக்கம் பகுதி மக்கள் நேற்று முன்தினம் முதல் வீட்டுமனை பட்டா கொடுத்த இடத்தில் சமையல் செய்து போராட்டம் நடத்தி வந்தனர்.  இந்நிலையில் வீட்டுனைபட்டா கொடுத்த இடத்தில் இருந்து பெரம்பூர் கிராமத்திற்கு செல்லும் குடிநீர் குழாயை மர்ம நபர்கள் யாரோ சிலர் உடைத்து விட்டனர். இதையறிந்த பெரம்பூர் பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு வந்து குடிநீர் பைப்பை யார் உடைத்தது என கேட்டு லட்சிவாக்கம் பகுதி மக்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் வாக்குவாதம் கைகலப்பாகி ஒருவரையொருவர் கல்வீசி தாக்கிக்கொண்டனர். இதையறிந்த ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் சத்தியபாமா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது நடந்த கல்வீச்சில் இன்ஸ்பெக்டர் சத்தியபாமா மற்றும் ஆயுதபடை பெண் காவலர் கீதா உள்ளிட்ட 2 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து பெரம்பூர் மக்கள் அருகில் உள்ள பஸ் நிறுத்தம் அருகில் ஊத்துக்கோட்டை – பெரியபாளையம் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த திருவள்ளூர் ஏடிஎஸ்பி மீனாட்சி சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் நள்ளிரவு 11.30 மணி வரை பரபரப்பு ஏற்பட்டது. மேலும் காயமடைந்த போலீசார் ஊத்துக்கோட்டை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மேலும் அங்கு பதட்டம் ஏற்படாமல் இருக்க பெரம்பூர் கிராமத்தில் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

* கலெக்டர் அலுவலகம் முற்றுகை
ஊத்துக்கோட்டை அருகே பெரம்பூர் கிராமத்தில் வசித்து வரும் ஒரு தரப்பு மக்கள் நேற்று திருவள்ளூர் கலெக்டர் பிரபு சங்கரை சந்தித்தனர். அப்போது அவர்கள் கலெக்டரிடம் கூறியதாவது: எங்கள் ஊராட்சியில் லட்சிவாக்கம் பகுதி மக்களுக்கு, ஊத்துக்கோட்டை வருவாய் துறையினர் தவறான தகவல் கொடுத்து வேறு சமூகத்தினருக்கு பட்டா கொடுத்தனர். இதனால் எங்களுக்கும் அவர்களுக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறது.

அவர்களுக்கு வேறு இடத்தில் பட்டா கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் எங்களது ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை ஒப்படைத்து விடுகிறோம் எனக் கூறி மனு கொடுத்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 100க்கும் மேற்பட்ட மக்கள் போராட்டம் நடத்தினர். இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

The post ஊத்துக்கோட்டை அருகே பரபரப்பு பட்டா வழங்கிய விவகாரம் தொடர்பாக இரு தரப்பினர் இடையே மோதல்: கல்வீச்சில் 2 போலீசாருக்கு காயம் appeared first on Dinakaran.

Tags : Uthukottai ,Oothukottai ,
× RELATED ஊத்துக்கோட்டையில் மீன் அங்காடி இல்லாமல் வியாபாரிகள் திண்டாட்டம்