×

இஸ்ரோவுக்கு மைல்கல்லாக அமையும் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்: 4 மணி நேரத்தில் இலக்கை அடையும் 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்

இந்திய விண்வெளித் துறையின் தந்தை என்றழைக்கப்படுபவர் விஞ்ஞானி விக்ரம் சாராபாய். இவர்தான் இஸ்ரோவை உருவாக்கியவர். இவரது நினைவாகத் தான் அண்மையில் விண்ணுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 3 திட்டத்தில் இடம்பெற்றிருந்த லேண்டருக்கு ‘விக்ரம் லேண்டர்’ என பெயர் வைக்கப்பட்டிருந்தது. அமெரிக்கா, ரஷ்யா போன்ற மேலை நாடுகள் மட்டுமே விண்வெளித் துறையில் சாதித்துக் கொண்டிருந்ததை பார்த்த விக்ரம் சாராபாய், இந்தியாவும் இத்துறையில் சாதிக்க வேண்டும் என விரும்பினார். 1962ல் அப்போதைய இந்திய பிரதமரான நேருவின் ஒப்புதலோடு விண்வெளி ஆராய்ச்சிக்கான தேசிய கமிட்டி ஒன்றை ஆரம்பித்தார் விக்ரம் சாராபாய். இந்த கமிட்டியில் டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாமும் இடம் பெற்றிருந்தார். 1969 ஆகஸ்டில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பெங்களூருவை தலைமை இடமாக கொண்டு இஸ்ரோ நிறுவப்பட்டது. 1972 ஜூனில் விண்வெளி ஆணையம், விண்வெளி துறை ஆகியவை அமைக்கப்பட்டன. 1972 செப்டம்பரில் இத்துறையின் கீழ் இஸ்ரோ கொண்டு வரப்பட்டது.

1975 ஏப்ரல் 19ல் தான் இந்தியா தனது முதல் செயற்கைக்கோளை உருவாக்கியது. இதற்கு இந்திய வானியலாளரான ஆரியப் பட்டாவின் பெயரே சூட்டப்பட்டது. ஆரம்பத்தில் நம்மிடம் ராக்கெட்டுகள் இல்லாத காரணத்தால், பிற மேலை நாடுகளையே நாம் சார்ந்திருந்தோம். நமது முதல் செயற்கைக்கோளான ஆரியப்பட்டா மற்றும் அதை தொடர்ந்து இஸ்ரோ அனுப்பிய பாஸ்கரா போன்ற செயற்கைக்கோள்கள் சோவியத் யூனியனின் ராக்கெட் மூலமாகவே விண்ணில் ஏவப்பட்டது. இதைத் தொடர்ந்து ‘தகவல் தொழில்நுட்பத்திற்கென தனி செயற்கைக்கோள் இருக்க வேண்டும்’ என எண்ணிய இந்திய விஞ்ஞானிகள் ஆப்பிள் (Apple) என்னும் செயற்கைக்கோளை உருவாக்கி, ஐரோப்பிய யூனியனின் ராக்கெட் மூலமாக அதை விண்ணில் செலுத்தினர். இதைத் தொடர்ந்து இஸ்ரோவை விரிவாக்கம் செய்ய இந்திய அமைச்சரவை ஒப்புதலளிக்கவே, டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் நாசாவின் பல விண்வெளி ஆராய்ச்சித் தளங்களுக்கு சென்று அவற்றை பார்வையிட்டார். இந்தியா திரும்பிய கலாம், இந்தியாவின் சொந்த தயாரிப்பு ராக்கெட்டுகளான எஸ்எல்வி, பிஎஸ்எல்வி போன்றவற்றை தயாரிக்கும் திட்டத்தை தொடங்கினார்.

ஆரம்பத்தில் பல தோல்விகளை சந்தித்தாலும் கூட இந்தியா தனது சொந்த தயாரிப்பு ராக்கெட்டுகளை வெற்றிகரமாக இஸ்ரோவின் மூலமாக தயாரித்து முடித்திருந்தது. மேலும் சென்னையை அடுத்த ஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுதளம் ஒன்றையும் அமைக்கும் பணிகளையும் இஸ்ரோ ஆரம்பித்திருந்தது. 1979 ஆகஸ்ட் 10ல் ஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்திலிருந்து ‘ரோகிணி’ என்னும் சிறிய ரக செயற்கைக்கோளை சுமந்தபடி, இந்தியாவின் எஸ்எல்வி ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்த அந்த தருணம் ஒவ்வொரு இந்தியனுக்கும் முக்கியமான தருணமாக இருந்தது. 1990களின் ஆரம்பத்தில் போலார் சேட்டிலைட் லாஞ்சிங் வெகிக்கிள் என்றழைக்கப்படும் பிஎஸ்எல்வி ராக்கெட்டுகளை இந்தியா வெற்றிகரமாக சோதித்துப் பார்த்தது அமெரிக்கா போன்ற உலக நாடுகள் மத்தியில் பொறாமையை உருவாக்கியிருந்தது. ஏனென்றால் பிஎஸ்எல்வி தொழில்நுட்பமானது எஸ்எல்வி தொழில்நுட்பத்தை விட மிகவும் மேம்பட்டது மற்றும் துல்லியமானது. 2017 பிப்ரவரி 15ல் இந்த பிஎஸ்எல்வி C37 என்ற ராக்கெட் மூலமாகத் தான் ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தி உலக சாதனை படைத்தது இஸ்ரோ.

இந்தியாவின் முதல் ராக்கெட் ஏவுதளம் அமைக்க கன்னியாகுமரி பகுதியைத்தான் தேர்வு செய்துள்ளனர். ஆனால் மக்கள் அடர்த்தியாக இருப்பதால் அந்த பகுதியில் அமையும் திட்டம் கைவிடப்பட்டது. அப்போது ஒன்றிய அமைச்சர்கள், விஞ்ஞானிகள் பெரும்பாலானவர்கள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்ததால் ஹரிகோட்டாவிற்கு இந்த திட்டம் கொண்டு செல்லப்பட்டது. இந்தியாவில் ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் தற்போது இரு ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளது. நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டும், பாதுகாப்பு நலன் கருதியும் 3வது ஏவுதளம் அமைப்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது. தற்போது நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் உள்ள மகேந்திரகிரியில் ராக்கெட்டை விண்ணில் செலுத்த கிரையோஜெனிக் இன்ஜினில் திரவ எரிபொருளை நிரப்பியும், கேரளாவில் இருந்து திட எரிபொருளை நிரப்பியும் ஹரிகோட்டாவிற்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் பொருட்செலவு அதிகரிக்கிறது.

இதை தவிர்க்க பூமத்திய ரேகையின் மிக அருகே அமைந்துள்ள தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைத்தால் இஸ்ரோவிற்கு காலமும், பணமும் மிச்சமாகும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கை தற்போது நிறைவேறி இருக்கிறது. 3வது ராக்கெட் ஏவுதளம் அமைக்க உகந்த இடமாக பூமத்திய ரேகைக்கு மிக அருகில் இருக்கும் குலசேகரன்பட்டினம் பகுதியைத் தேர்வு செய்தனர். இதனையடுத்து வருவாய்த்துறையினர் இஸ்ரோ விஞ்ஞானிகள் கொடுத்த வரைபடத்தின் அடிப்படையில் உடன்குடி யூனியனுக்குட்பட்ட மாதவன்குறிச்சி, சாத்தான்குளம் யூனியனுக்குட்பட்ட பள்ளக்குறிச்சி, படுக்கப்பத்து ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் மரங்கள், வீடுகள், வழிபாட்டு தலங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு நில எடுப்பு பணிகள் 90 சதவீதத்திற்கு மேலாக முடிவடைந்து, சுமார் 2,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. ராக்கெட் ஏவுதளம் அமையவிருக்கும் பகுதியில் விரைவில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் துவங்கப்பட உள்ளது. நிலம் கையகப்படுத்தப்பட்டதற்குரிய இழப்பீடு பணமும் உரிய நபர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து இஸ்ரோ சார்பில் ‘இந்த இடம் இந்திய விண்வெளி துறையின் இஸ்ரோவிற்கு சொந்தமானது, அத்துமீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள்’ என அறிவிப்பு பலகை எழுதி வைத்துள்ளனர். தொடர்ந்து அளவீடு செய்யப்பட்ட இடங்களில் யாரும் உள்ளே செல்லாத வண்ணம் கம்பி வேலி அமைத்துள்ளனர். நாட்டின் வளர்ச்சிக்கு சிறிய ராக்கெட் தான் மிகப்பெரிய தேவை. மிகப்பெரிய வணிகமும் அதில் தான். இன்று ராக்கெட் இல்லையென்றால் தகவல் தொழில்நுட்பம், வானிலை என உலகே இல்லை. குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமையும் பட்சத்தில் உலகில் மற்ற நாடுகளை விட மிகவும் லாபகரமானதாகும். ராக்கெட் ஏவுதளம் அமையும் போது உதிரிபாகங்கள் தயாரிக்கக் கூடிய நிறுவனங்கள் இந்த பகுதியை சுற்றியே நிறுவப்பட வாய்ப்புள்ளது. உலகில் எங்குமே இல்லாத சிறப்பு அம்சங்கள் குலசேகரன்பட்டினத்தில் உள்ளது. இதன் மூலம் சர்வதேச நாடுகளால் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் ஈர்க்கப்படும்.

இங்கு விமான நிலையம் அமைய வாய்ப்புள்ளதுடன் துறைமுகம், கல்வி நிறுவனங்கள் என வளர்ச்சி பெறும். இதன் மூலம் தொழில் வளம் பெருகுவதுடன், உள் கட்டமைப்புகள் பெருகும். இங்கு நிறுவப்படுவது மிகவும் பாதுகாப்பானது. கூடுதல் தொழில்நுட்பங்களை உள்ளடக்கியது. ஒரே இடத்தில் தயாரிப்பு, பரிசோதனை, ஆய்வு, விண்ணுக்கு அனுப்புதல் என அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றது குலசேகரன்பட்டினம். ஹரிகோட்டா சதுப்பு நிலமாக இருப்பதால் கவுன்டவுன் குறைந்தது 2 நாட்கள் கொடுக்கப்படுகிறது. குலசேகரன்பட்டினத்தில் அமைக்கப்படும் ராக்கெட் ஏவுதளம் நவீன முறையில் அமைக்கப்படுகிறது. இங்கிருந்து விண்ணில் செலுத்தினால் சுமார் 4 மணி முதல் 5 மணி நேரத்தில் குறிப்பிட்ட தொலைவிற்கு சென்று விடும். நெல்லை மாவட்டம், மகேந்திரகிரியில் தான் ராக்கெட் ஏவுவதற்கு தேவையான 90 சதவீதத்திற்கு மேலான பணிகள் நடக்கிறது.

குலசேகரன்பட்டினத்தில் ஏவுதளம் அமையும் போது மகேந்திரகிரியிலிருந்து ராக்கெட்டிற்கு தேவையான பாகங்களை பல நூறு கிமீ தூரம் கொண்டு செல்ல வேண்டியதில்லை. குலசேகரன்பட்டினம் மகேந்திரகிரியில் இருந்து 50 கிமீ தூரத்திற்குள் தான் உள்ளது. இதனால் பயண தொலைவு குறைவதுடன், செலவும் குறையும். மேலும் சர்வதேச விண்வெளி சட்டத்தின் படி ஒரு நாட்டில் இருந்து இயக்கப்படும் செயற்கைகோள், அடுத்த நாட்டின் வழியாக செல்லக் கூடாது என்பது விதி. ஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் ஏவும் போது அண்டை நாடான இலங்கை வழியே செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதை தவிர்க்க சுற்றுப்பாதையை மாற்றுவதால் கூடுதல் செலவு ஏற்படுகிறது. ஆனால் குலசேகரன்பட்டினத்திலிருந்து ஏவப்படும் ராக்கெட்கள் இலங்கையை தவிர்த்து நேராக சுற்றுப்பாதையை அடைவதால் கூடுதல் செலவு, நேரம் மிச்சமாகும். குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்தால் நேரடியாக 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பும், 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் முதற்கட்டமாக கிடைக்கும் என நம்பப்படுகிறது. இதன் மூலம் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பலர் வேலை தேடி வெளியூர் செல்வது குறையும். அதனைச் சார்ந்த தொழில்கள், ஏரோநாட்டிக்கல் தொழிற்கூடம் அமையும். உடன்குடி, திருச்செந்தூர், நாசரேத், சாத்தான்குளம், மெஞ்ஞானபுரம், திசையன்விளை என பல பகுதிகளில் தொழில்கள் பெருகும். இதன் மூலம் மக்களின் பொருளாதாரம் உயரும். அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுவதுடன் மணப்பாடு, குலசேகரன்பட்டினம் பகுதிகள் சுற்றுலாத்தலமாக மாறும். திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்கோயில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் மேலும் பிரசித்தி பெற்று சர்வதேச அளவில் பேசப்படும். உலக நாடுகளின் கவனத்தை இந்த பகுதி பெறும். இதன் மூலம் பெரிய முதலீட்டாளர்கள் இதனையொட்டிய பகுதியில் தொழிற்கூடங்கள் அமைக்க முன்வருவர்.

தூத்துக்குடி முத்துக்குளியல், துறைமுகத்திற்கு என பெயர் பெற்றிருந்த காலம் போய் நாட்டின் வளர்ச்சியில், பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கும் நிலை வெகுதொலைவில் இல்லை. குறிப்பாக கிழக்கு கடற்கரை சாலையின் கடற்கரையோரத்தில் பழையகாயலில் சிர்கோனியம், உடன்குடி அனல்மின்நிலையம், துறைமுகம், கூடங்குளம் அணுமின்நிலையம் ஆகியவை அமைந்துள்ளது. தற்போது குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமையவிருக்கிறது. இதன் மூலம் நாட்டின் தென்கோடியில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம் தற்போது உலக நாடுகளின் தனிகவனத்தை ஈர்த்துள்ளது.

* ஆயிரம் ஏக்கர் நிலம்?

தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) சார்பில் சுமார் ஆயிரம் ஏக்கர் நிலம், ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்துவதாக பொதுமக்கள், விவசாயிகளிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்காக உடன்குடி சுற்றுவட்டார பகுதிகளில் சில இடங்களில் குறியீடுகள் செய்யப்பட்டதாகவும், விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளதாகவும் தகவல் பரவியது. இதனையடுத்து விவசாயிகள், பொதுமக்கள், சமூகஆர்வலர்கள் தொடர்ந்து கூட்டம் போட்டு பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர். வருவாய்த்துறை அதிகாரிகள் விவசாயிகள் பொதுமக்களுடன் கலந்து பேசி ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்திற்கு எந்த நிலமும் கையகப்படுத்தப்படவில்லை. அதற்குரிய எந்த திட்ட அறிக்கைகளும் வரவில்லை என அதிகாரிகள் கூறினர்.

* குடியிருப்புகளுக்கு மாற்று இடம்

இஸ்ரோவிற்கு நிலம் கையகப்படுத்துவதில் உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட கூடல்நகர் மட்டுமே குடியிருப்பு பகுதிகள். இங்கு 27 குடியிருப்புகளும் அகற்றப்பட்டு அவர்களுக்கு மாற்றுப்பகுதி அளிக்கப்படுவதுடன் வீடுகள் கட்டி கொடுக்கப்படுவதற்கான பணிகளும் அசுர வேகத்தில் நடந்து வருகிறது. இதேபோன்று சாத்தான்குளம் தாலுகாவிற்குட்பட்ட பள்ளக்குறிச்சி, படுக்கப்பத்து பகுதிகளில் குடியிருப்புகள் பகுதிகள் ஏதும் இல்லாத நிலையில் போதிய அளவு அரசு புறம் போக்கு நிலங்கள் மற்றும் பயன்பாடற்ற நிலையில் அதிகளவில் நிலங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் குடியிருப்பு பகுதிகள் ஏதும் காலியாகாது எனவும் கூறி வருகின்றனர்.

* தூத்துக்குடி சர்வதேச விமான நிலையமாக மாறும்

குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுத்தளம் அமைந்தால் தூத்துக்குடி விமான நிலையம் சர்வதேச விமான நிலைய அந்தஸ்து பெறும். சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டு, அனைத்து அடிப்படை வசதிகளும் தன்னிறைவடையும். ஒன்றிய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள் அமையும்.

* தொழிற்கூடங்கள் உருவாகும்

ஏற்கெனவே இந்தப் பகுதியில் உடன்குடி அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமையும் பட்சத்தில் துறைமுகம் சார்ந்து பல தொழில் நிறுவனங்கள் பெருகும். இதன் காரணமாக புதிய உதிரிபாக தொழிற்கூடங்கள் அமையும். இதன் மூலம் பொருளாதார ரீதியாக இப்பகுதியில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என நம்பப்படுகிறது.ஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் ஏவினால் சுற்றுப்பாதையில் செல்ல இலங்கையை சுற்றி செல்ல வேண்டும். குலசேகரன்பட்டினம் ஏவுதளத்தில் இருந்து செலுத்தினால் நேராக செல்லலாம் என்று மேப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

The post இஸ்ரோவுக்கு மைல்கல்லாக அமையும் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்: 4 மணி நேரத்தில் இலக்கை அடையும் 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் appeared first on Dinakaran.

Tags : ISRO ,Vikram Sarabhai ,Dinakaran ,
× RELATED நிலவின் தென்துருவப் பகுதியில்...