×

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்கள் 37 பேரை உடனடியாக விடுவிக்க வேண்டும்: ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 37 பேரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தை சேர்ந்த 37 மீனவர்கள் கடந்த 28ம் தேதி மீன்பிடி படகுகளில் மீன்பிடிக்க சென்ற நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யபட்டுள்ளனர். மீன்பிடி தொழிலை தங்களது வாழ்வாதாரமாக கொண்டுள்ள மீனவர்களை இவ்வாறு தொடர்ச்சியாக கைது செய்வது மீனவ சமூகத்தினரிடையே மிகுந்த மன உளைச்சலையும், வேதனையையும் ஏற்படுத்துவதாக உள்ளது. மேலும், இலங்கை கடற்படையினரின் இத்தகைய செயல்கள் தமிழ்நாட்டின் மீனவர்களிடையே மன அழுத்தத்தையும் அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், தமிழ்நாட்டு மீனவர்கள் தங்களது கோரிக்கைகள் ஏற்கப்படாமல் போவதாக உணர்கிறார்கள். நம் மீனவர்களின் உரிமைகளுக்காக ஒன்றிய அரசு மேலும் வலுவாகக் குரல் கொடுக்க வேண்டும்.

மீனவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட வேண்டும் என விரும்புகிறேன். மேலும், வளைகுடா பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாக்க வேண்டும். அதன்படி, இந்த மாதம் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 64 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 10 மீன்பிடிப் படகுகள் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீனவர்கள் இதுபோன்று கைது செய்யப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும், இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது தடையின்றி தொடர்வதை வேதனையுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எனவே, இதற்கு முற்றுப்புள்ளி வைத்திடும் வகையில், இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக உரிய நிலையான தூதரக வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், தமிழ்நாட்டு மக்கள் சார்பில் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

The post இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்கள் 37 பேரை உடனடியாக விடுவிக்க வேண்டும்: ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Sri Lankan Navy ,Chief Minister ,M.K.Stal ,Union External Affairs ,Minister ,CHENNAI ,Union External Affairs Ministry ,Nadu ,
× RELATED தாக்கப்படுவதும், கைதாவதும்...