×

ஆந்திராவில் சிக்னலுக்காக நின்றிருந்தபோது பயங்கரம் 2 ரயில்கள் மோதி 19 பேர் பலி: 200க்கும் மேற்பட்டோர் படுகாயம்

திருமலை: ஆந்திராவில் சிக்னலுக்காக நின்றிருந்த ரயில் மீது மற்றொரு ரயில் மோதிய விபத்தில் 19 பேர் பலியாகினர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து காகுளம் மாவட்டம் பலாசாவுக்கு செல்லும் பயணிகள் ரயில்(எண்-08532) நேற்று இரவு 7.10 மணி அளவில் விஜயநகரம் மாவட்டம் கொத்தவலசா மண்டலம் கண்டகப்பள்ளியில் சிக்னலுக்காக நின்றிருந்தது. அப்போது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ராயகட்டாவுக்கு செல்லும் சிறப்பு விரைவு ரயில்(எண்-08504) நின்றிருந்த பலாசா பயணிகள் ரயிலின் பின்பக்கம் மோதியது. இதில் விரைவு ரயிலின் 4 பொதுப்பெட்டிகள் தடம் புரண்டது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி பயணிகள் கதறி துடித்தனர். இதுகுறித்து தகவலறிந்த விஜயநகரம் மாவட்ட போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும் விசாகப்பட்டினம், அனகாப்பள்ளி மாவட்டங்களில் இருந்து மீட்பு பணிக்காக 14 ஆம்புலன்ஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கிடையில் விஜயநகரம் மாவட்ட கலெக்டர் நாகலட்சுமி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள், ரயில்வே அதிகாரிகள் உள்ளிட்டோர் அங்கு சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். மேலும் சம்பவ இடத்தில் வருவாய்த்துறை அமைச்சர் சத்தியநாராயணா அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிலையில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், மீட்பு பணிகளை தீவிரப்படுத்தி உரிய விசாரணை நடத்தவும் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் உத்தரவிட்டுள்ளார். நேற்றிரவு 10 மணி வரையிலான நிலவரப்படி, 50க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ்களில் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் 19 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். தடம் புரண்ட 4 ரயில் பெட்டிகளும் பொதுப்பெட்டிகள் என்பதால், தொழிலாளர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் பயணித்திருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என தெரிகிறது.

The post ஆந்திராவில் சிக்னலுக்காக நின்றிருந்தபோது பயங்கரம் 2 ரயில்கள் மோதி 19 பேர் பலி: 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Terror 2 trains ,Andhra Pradesh ,Thirumalai ,Terror 2 ,
× RELATED தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட பல...