×

கற்றல் அடைவு திறனாய்வு தேர்வுக்கு 29,775 கள ஆய்வாளர்களுக்கு பயிற்சி பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தகவல் வரும் 3ம் தேதி 7.42 லட்சம் மாணவர்கள் எழுதும்

வேலூர், அக்.29: தமிழகம் முழுவதும் வரும் 3ம் தேதி 7.42 லட்சம் மாணவர்கள் எழுதும் மாநில கற்றல் அடைவு திறனாய்வு தேர்வுக்காக 29,775 கள ஆய்வாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக கற்றல் அடைவு திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு, அவர்களின் கற்றல் நிலையைக் கண்டறிந்து தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் இந்தாண்டு 3,6,9 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு மாநில கற்றல் அடைவு திறனாய்வு தேர்வு வரும் 3ம் தேதி நடைபெறவுள்ளது.
இத்தேர்வை மாநிலம் முழுவதும் 27 ஆயிரத்து 47 பள்ளிகளில் இருந்து மொத்தம் 7.42 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.

இந்தத் தேர்வு கண்காணிப்பு பணிக்காக பி.எட், எம்.எட். பயிற்சி மாணவர்கள் உள்பட 29,775 கள ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கடந்த வாரம் ஆய்வுக்கான பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், 20 பள்ளிகளுக்கு ஒருவர் வீதம் மொத்தம் 1,356 வட்டார ஒருங்கிணைப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு தமிழ், கணக்கு ஆகிய பாடங்களில் மட்டும் வினாக்கள் இடம்பெறும். ஆங்கில வழிக்கல்வி எனில் ஆங்கிலம், கணக்கு பாடங்களில் கேள்விகள் இருக்கும். வினாக்கள் முந்தைய வகுப்புகளில் பாடத்திட்டம் அடிப்படையில் கேட்கப்படும். அதாவது, 3ம் வகுப்புக்கு 1, 2ம் வகுப்பு பாடத்திட்டம், 6ம் வகுப்புக்கு 1 முதல் 5ம் வகுப்பு வரையான பாடத்திட்டம், 9ம் வகுப்புக்கு 1 முதல் 8ம் வகுப்பு பாடத்திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்த வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post கற்றல் அடைவு திறனாய்வு தேர்வுக்கு 29,775 கள ஆய்வாளர்களுக்கு பயிற்சி பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தகவல் வரும் 3ம் தேதி 7.42 லட்சம் மாணவர்கள் எழுதும் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Tamil Nadu ,
× RELATED வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில்...