×

காஷ்மீரில் 7 மணி நேரம் பாக். ராணுவம் துப்பாக்கி சூடு: திருமணங்கள் நிறுத்தம், வீடுகள் சேதம்

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் வீரர்கள் நேற்று திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார்கள். நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு தொடங்கிய பாகிஸ்தான் வீரர்களின் துப்பாக்கி சூடு நேற்று அதிகாலை 2.45மணி வரை சுமார் 7 மணி நேரம் நீடித்தது. எல்லையில் உள்ள இந்திய நிலைகள், பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புக்களை குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கி சூட்டினால் 10க்கும் மேற்பட்ட திருமண விழாக்கள் பாதிக்கப்பட்டது.

சிலர் கடைசி நேரத்தில் திருமணத்தில் மாற்றங்களை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர். சில இடங்களில் துப்பாக்கி சூட்டிற்கு அஞ்சி, விழாவிற்கு வந்தவர்கள் திரும்பி சென்றனர். பல இடங்களில் திருமண விருந்து பாதியில் நின்றது. துப்பாக்கி சூட்டில் பல வீடுகள் சேதமடைந்தது. பாகிஸ்தானின் துப்பாக்கி சூட்டில் வீரர் மற்றும் பெண் ஒருவர் என இரண்டு பேர் காயமடைந்தனர். உடனடியாக மீட்கப்பட்ட இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பாகிஸ்தான் வீரர்களின் துப்பாக்கி சூட்டிற்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர்.

The post காஷ்மீரில் 7 மணி நேரம் பாக். ராணுவம் துப்பாக்கி சூடு: திருமணங்கள் நிறுத்தம், வீடுகள் சேதம் appeared first on Dinakaran.

Tags : Kashmir ,New Delhi ,India-Pakistan ,Jammu and ,Pakistan ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்பக் கோளாறால் உலகம்...