×

உத்தர பிரதேசத்தில் நடந்த பயங்கரம்; காதல் திருமணம் செய்த ஜோடி படுகொலை: பெற்றோரே அரங்கேற்றிய ஆணவக் கொலை

ஈட்டா: உத்தர பிரதேசத்தில் காதல் திருமணம் செய்த புதுமண தம்பதியை, ஊர் மக்கள் முன்னிலையில் பெண் வீட்டார் கழுத்தை அறுத்து படுகொலை செய்தனர். உத்தர பிரதேசம் மாநிலம் ஈட்டா மாவட்டம் ஜைத்ரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட காதியா சுஹாக்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தீபக் குமார் (23). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய சிவானி குமாரியும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். லோதி-ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் ஒரே பகுதியில் வசித்து வந்தவர்கள் ஆவர்.

இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் எதிர்ப்பையும் மீறி கடந்த டிசம்பர் மாதம் 11ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய இருவரும், பிரயாக்ராஜில் உள்ள ஆர்ய சமாஜ் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்து வெளியே தங்கியிருந்த நிலையில், குடும்பத்தினர் அழைத்ததால் கடந்த சனிக்கிழமை சிவானி மட்டும் தனது பெற்றோர் வீட்டுக்குத் திரும்பினார். ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியளவில் தனது மனைவியைச் சந்திக்க தீபக் குமார் அங்கு சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த சிவானியின் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் இருவரையும் உருட்டுக்கட்டையால் தாக்கினர். அலறல் சத்தம் கேட்டு அங்கு கூடிய பொதுமக்கள் முன்னிலையிலேயே கூர்மையான ஆயுதத்தால் இருவரின் கழுத்தையும் அறுத்து கொடூரமாகக் கொலை செய்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு பயந்து ஓடிய தீபக் குமாரை விரட்டிச் சென்று கொன்றதுடன், அவரது உடலை பக்கத்து வீட்டின் மேற்கூரையில் வீசிச் சென்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து உடல்களைக் கைப்பற்றினர். சிவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், தீபக் குமார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷியாம் நாராயண் சிங் கூறுகையில், ‘இந்த இரட்டைக்கொலை தொடர்பாக சிவானியின் தந்தை அசோக் குமார், தாய் விட்டோலி தேவி மற்றும் சகோதரி ஷில்பி ஆகியோரை கைது செய்துள்ளோம். தலைமறைவாக உள்ள சகோதரர்கள் சதீஷ் மற்றும் ஜாபர் சிங் ஆகியோரைத் தேடி வருகிறோம். பாரதிய நியாய சம்ஹிதா சட்டப்பிரிவு 103(1) மற்றும் 191 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார். தனது கண்முன்னே மகனையும், மருமகளையும் கொடூரமாகக் கொன்றதாகத் தீபக் குமாரின் தந்தை ராதேஷியாம் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Uttar Pradesh ,Etah ,Khadiya Suhakpur ,Jaitra ,police station ,Etah district ,Uttar Pradesh… ,
× RELATED தொழில்நுட்பக் கோளாறால் உலகம்...