×

முத்துக்கள் முப்பது: அருளை அள்ளித்தரும் ஐப்பசி

நன்றி குங்குமம் ஆன்மிகம்

முத்துக்கள் முப்பது

ஐப்பசி அன்னாபிஷேகம் 28-10-2023

எஸ். கோகுலாச்சாரி

முன்னுரை

சர சர’’ என சாரலும் தூறலும் அடிக்கும் மாதம். மனதை மகிழ்விக்கும் மங்கலப் பண்டிகைகள் நிறைந்த மாதம். உறவும் நட்பும் கூடிக் குதூகலிக்கும் மாதம். உணர்வுகள் பக்தியில் விஞ்சித் தோய்ந்து செய்யும் உபவாசங்களும் பூஜைகளும் நிறைந்த மாதம். நீராடலின் சிறப்பை எடுத்துரைக்கும் மாதம். இந்த மாதத்தில் நாம் செய்யும் வழிபாடுகளால், நீர்நிலைகள் நிரம்பும். தனம் தானியங்கள் பெருகும். இல்லத்திலும் பூமியிலும் செழிப்பும் வளமையும் கூடும் இப்படிப் பல பெருமைகள் கொண்ட ஐப்பசி மாதத்தின் அற்புதங்களை முப்பது முத்துக்களாகக் காண்போம்.

1. மாதத்தின் பெயரைச் சொல்வதே பெரும் புண்ணியம்

ஐப்பசி மாதம் பிறந்து விட்டது. இது அற்புதமான மாதம். சித்திரை தொடங்கி ஐப்பசி 7வது மாதமாகும். ஐப்பசி என்பது மழைக்காலம். அடை மழை மாதம் என்பார்கள். தட்சணாயன காலத்தில் வருகின்ற சரத்ருதுவின் இரண்டாவது பகுதி மாதம் இது. இதற்குப் பிறகு ஹேமந்த ருது வந்துவிடும். கோடை முடிந்து, குளிர் வெப்பம் நிலவுகின்ற இந்த மாதத்தில் அற்புதமான ஆன்மிகப் பண்டிகைகளை நாம் பல காலமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். நாம் நம்முடைய தினசரி பூஜையிலே சங்கல்பம் செய்கின்ற பொழுது, மாதத்தின் பெயரை நாள்தோறும் சொல்லி சங்கல்பம் செய்ய வேண்டும். என்ன பொருள் என்றால், மாதத்தின் பெயரைச் சொல்வதே பெரும் புண்ணியத்தைத் தரும்.

2. துலா மாதப் பிறப்பு

காலக்கணக்கில் ஏழாவது மாதம் இது. துலா மாதம் என்று சொல்வார்கள். இந்த மாதத்தின் குறியீடு துலாக் கோல். இருளும், பகலும், உஷ்ணமும், குளிர்ச்சியும் சமமாக இருக்கக்கூடிய மாதம். விசு (விஷு) காலம் என்றால் பகல் பொழுதும் இரவுப் பொழுதும் சம அளவாய் இருக்கும் ஒரு நாள். காலச்சக்கரத்தின் ஏழாவது ராசியான துலா ராசி, இந்த மாதத்திற்குரியது. இந்த ராசி மண்ட லத்தில் சித்திரை, சுவாதி, விசாகம் எனும் மூன்று நட்சத்திர மண்டலங்கள் உண்டு. சித்திரையின் நான்காவது பாதத்தில் சூரியன் பிரவேசிக்கும் நாள் தான் துலா மாதப் பிறப்பு என்று சொல்லப்படுகின்ற ஐப்பசி மாதப் பிறப்பு.

3. விஷு புண்ய காலம்

தமிழ் மாதங்கள் 12ல் சித்திரை, ஆடி, ஐப்பசி, தை ஆகியவை பிரம்மாவுக்கு உரியவை. வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி ஆகியவை மகா விஷ்ணுவுக்கு உரியவை. ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகியவை சிவனுக்குரியவை. பிரம்மாவுக்குரிய சித்திரை, ஐப்பசி, ஆடி, தை மாதம் பிறக்கும் காலங்கள் விஷுபுண்ய காலம் எனப்படும். அதிகாலை மூடிய கண்ணுடன் வந்து “கண்ணாடி மூலமாக” தெய்வத்தையும், பணம், வெள்ளரிபழம், ஆரஞ்சு, வாழை, பறங்கிக்காய் மற்றும் தேங்காய் காய்கறிகள் எல்லாவற்றையும் பார்ப்பார்கள். சித்திரைக்கு சிறப்பு என்றாலும் மற்ற விஷூ காலங்களிலும் செய்யலாம். இதற்கு “விஷூக்கனி நோட்டம்” என்பார்கள். அதோடு தெய்வதரிசனம் செய்வார்கள்.

4. இதே ஐப்பசி மறுபடியும் வரப்போவதில்லை

ஐப்பசி மாதத்தின் சிறப்புகளைக் கருதுகின்ற பொழுது, ஒரு சில விஷயங்களை நாம் மிகவும் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். காலம் என்பது ஒரே மாதிரியாக இருந்தாலும், அவை ஒரே மாதிரி அல்ல. உதாரணமாக சென்ற வருடமும் ஐப்பசி வந்தது, இந்த வருடமும் வந்திருக்கிறது, அடுத்த வருடமும் வரும்; ஆனால், நம்மைப் பொறுத்த வரைக்கும், ஒவ்வொரு ஐப்பசிக்கும் ஒவ்வொரு விசேஷம் உண்டு. எத்தனைக் கோடி ஆண்டுகள் ஆனாலும், இதே ஐப்பசி மறுபடியும் வரப்போவதில்லை என்பதை நாம் கருதிக் கொள்ள வேண்டும்.

5. காலத்தைக் கொண்டாட வேண்டும்

வான் நிலை மாறும். கோள்நிலை மாறும். நம் நிலையும் மாறும். எனவேதான் காலத்தைக் கொண்டாட வேண்டும் என்று பெரியவர்கள் சொன்னார்கள். காரணம் காலம் தான் நம் வாழ்வைத் தீர்மானிக்கிறது. காலம் தான் நம் முடைய வாழ்க்கை. காலம்தான் நம்முடைய உயிர். எனவே தான் உயிர் போய் விட்டது என்று சொல்வதை, ‘‘காலமாகிவிட்டார்’’ என்கிற சொல்லினாலே குறிப்பிடுகின்றோம். காரணம் காலங்கள் தான் பருவநிலையை தீர்மானிக்கின்றன. அந்த பருவ நிலையை ஒட்டித்தான் மனிதனின் செயல்பாடுகளான விவசாயம், கோயில்பண்டிகைகள் போன்ற அனைத்தும் அமைந்திருக்கின்றன. இப்படிக் காலத்தை அனுசரித்து வாழ்வதன் மூலமாக மனிதனுடைய வாழ்க்கை செம்மை பெறுகிறது. முழுமை அடைகிறது. அவன் மனிதனாக பிறந்ததன் பயனை அடைகின்றான்.

6. இன்னும் 60 வருடங்கள் காத்திருக்க வேண்டும்

இப்பொழுது இந்த ஐப்பசியின் சிறப்பை நாம் சற்று சிந்தித்துப் பார்ப்போம். இது அறுபது வருடங்களில் சோபகிருது வருடத்தில் வந்திருக்கும் ஐப்பசி. மறுபடி சோபகிருது வருட ஐப்பசியை நாம் சந்திக்க வேண்டும் என்று சொன்னால், 60 வருடங்கள் காத்திருக்க வேண்டும், கலி பிறந்து 5124 ஆம் ஆண்டில் வரும் ஐப்பசி. இனி இந்த வருடம் மறு படியும் வராது. கோள் நிலையை கவனித்துப் பார்த்தால், துலா ராசியில் நுழையும் சூரிய பகவான் அங்கே பலமிழந்து நீசம் அடைகின்றார். ஆனால் இந்த ஆண்டு அவர் பலம் பெறுகிறார். கிரகங்களின் தலைவனான ஆத்ம காரகன் பலம் பெரும் ஐப்பசி இது.

7. ‘‘நாளைப் பார்;கோளைப்பார்’’

துலா ராசிக்கு உரிய சுக்கிரன் சூரியனுக்குரிய சிம்ம ராசியில் இருக்கிறார். எனவே சூரியனுக்கும் சுக்கிரனுக்கும் பரிவர்த்தனை யோகம் ஏற்படுகிறது. ராகுவை விட்டு விலகிய குரு பகவான், தன்னுடைய சுப பார்வையை சூரியன் மீது நேருக்கு நேர் செலுத்துகிறார் என்பதால் சூரியனின் நீசத்தன்மை பெருமளவு குறைகிறது. குருவுக்கு இடம் கொடுத்த செவ்வாய், சூரியனோடு இருக்கிறார். குரு மங்கள யோகமும் ஏற்படுகிறது.

‘‘நேரத்திற்கு நேரம் நன்றாக இருக்கிறது’’ என்பது போல, ஐப்பசி மாதத்திற்கு இந்த ஆண்டு பூரண சுபத்துவம் ஏற்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சென்ற ஆண்டு கேது துலா ராசியில் இருந்து, சூரியனுக்கு கிரகண தோஷத்தை ஏற்படுத்தினார். இந்த ஆண்டு கேது விலகி விட்டார் என்பது இன்னும் சிறப்பு. ‘‘நாளைப் பார்; கோளைப்பார்’’ என்பார்கள். இந்த இரண்டும் பார்க்கின்ற பொழுது, ஐப்பசி மாதம் இந்த ஆண்டு அற்புதமாக இருக்கிறது.

8. வைணவத்தில் ஐப்பசி

ஐப்பசி மாதத்திற்கு அதிதேவதை பத்மநாபன். சக்கரம், சங்கம், வாள், வில் என்னும் ஆயுதங்கள் உண்டு. இவருடைய ஸ்தானம் என்பது மனம் தான். சகல உலகங்களுக்கும் காரணமான திருநாபிக்கமலத்தை உடையவன். வெற்றியும், கருணையும் போன்ற சௌர்யாதி குணங்களை உடையவன். இந்த ஐப்பசி மாதம் தான் மகாலட்சுமி பாற்கடலில் தோன்றிய மாதம். ஐப்பசி மாதம் தான் ராமன் அயோத்திக்கு திரும்பிய மாதம். கண்ணன் நரகாசூனை வதை செய்த மாதம். தன்வந்திரி பகவானின் அவதார மாதம். இப்படி பல சிறப்புக்கள் உண்டு.

9. சைவத்தில் ஐப்பசி

வைணவத்தில் மட்டுமல்ல சைவத்திற்கும் ஐப்பசி மாதம் மிக உயர்ந்த மாதம். ஐப்பசி மாத பௌர்ணமியில் தான் எல்லா சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. திருமூலர், நெடுமாறனார், இடங்கழி நாயனார், சக்தி நாயனார், மெய்கண்ட நாயனார், பூசலார், ஐயடிகள் காடவர்கோன் முதலிய பல நாயன்மார்களின் குரு பூஜை தினம் அனுஷ்டிக்கும் மாதம். இந்த ஆண்டு ஐப்பசியில் தான் சரஸ்வதி பூஜை, விஜயதசமி எல்லாம் வருகிறது. முருகனுக்கு உரிய சிறப்பான உற்சவமான கந்த சஷ்டியும் இந்த மாதத்தில் தான் வருகிறது. இப்படி அனைத்து தெய்வங்களுக்கும் உரிய பண்டிகைகள் நிறைந்த மாதம் ஐப்பசி.

10. எத்தனை எத்தனை பண்டிகைகள்?

ஐப்பசி மாதத்தில் எத்தனை எத்தனை பண்டிகைகள், தெரியுமா? ஐப்பசியில் கடைபிடிக்கப்படும் விரதங்கள் வாழ்க்கையில் உயர்வையையும் மேன்மையையும் கொடுக்கின்றன என்பது நம்பிக்கை. துலாம் மாதமான ஐப்பசி மாதத்தில் என்னென்ன விசேஷங்கள் இருக்கின்றன என்று பார்க்கலாம். ஐப்பசி, விஷு புண்ணிய காலம், துலா ஸ்நானம், ராதா ஜெயந்தி, தன்வந்திரி ஜெயந்தி, நரக சதுர்த்தசி ஸ்நானம், தீபாவளி, லட்சுமி குபேர பூஜை. கேதார கௌரி விரதம், கந்த சஷ்டி விரதம், யமத்துவிதியை. சஷ்டி, சூரசம்காரம் ஐப்பசி, அட்சய நவமி. அன்னாபிஷேகம், துலா ஸ்நான பூர்த்தி.

11. இந்திரா ஏகாதசி

ஐப்பசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி ‘‘இந்திரா ஏகாதசி’’ என்று அழைக்கப்படுகிறது. இந்திரா ஏகாதசியில் விரதமிருந்தால் நாம் செய்த பாவம் மட்டுமின்றி நம் முன்னோர்களின் பாவங்களும் நீங்கும். தேய் பிறையில் வரும் துவாதசி, கோவத்ச துவாதசி ஆகும். அன்றைய தினம், மாலை நேரத்தில் பசுவையும், கன்றையும், உணவு கொடுத்து, பூஜித்து வழிபட்டால், வீட்டில் பெண்களும் குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி ‘‘பாபாங்குசா’’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் ஏகாதசி விரதத்தை கடைபிடித்தால் வறுமை அகலும், பசிப்பிணி நீங்கும், பாவவிமோசனம் பெறலாம்.

12. ஐப்பசி அன்னாபிஷேகம்

ஐப்பசி மாதம் (28.10.2023) வரக்கூடிய பௌர்ணமி அன்று வருடந்தோறும் சிவனின் லிங்க திருமேனிக்கு அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கர்ப்ப கிரகத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு சமைத்த சாதங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. நாம் உண்ணுவதற்கு உணவளித்த சிவனுக்கு நன்றி கூறும் விதமாக இந்த அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

எல்லா சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடை பெற்றாலும் பெயர் பெற்ற தலமான தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயங்களில் சிறப்பாக வழிபாடு செய்யப்படுகிறது. சிறப்புவாய்ந்த அன்னாபிஷேக வழிபாட்டில் கலந்துக்கொண்டு இறைவனின் பரிபூரண அருளைப் பெற்று நமது குறைகளை நீக்கி பேறு அடையலாம். ஐப்பசி 11 பௌர்ணமி நாளில் சந்திர கிரகணம் நிகழ்கிறது.

13. துலா காவேரி ஸ்நானத்தின் மகிமை

ஐப்பசி ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் மாதமும் ஆகும். ஐப்பசி முதல் தேதி முதல் காவேரி நீராடலுக்கு சிறப்பு. புனிதமான ஐப்பசி மாதத்தில் அனைத்து புனித நதிகளும், தமிழகத்தில் ஓடும் தெய்வீக நதியான காவிரி நதியில் சங்கமிப்பதாக ஐதீகம். ஜோதிட ரீதியாக, துலாம் ராசி நவ கிரகங்களில் “சுக்கிரன்” பகவானின் ஆதிக்கத்திற்குரிய ராசியாகும். காவிரி நதிக்கு நடுவே இருக்கும் ரங்கம் எனப்படும் திருவரங்கத்தில் வீற்றிருக்கும் “ஸ்ரீரங்கநாதர்” சுக்கிர பகவானின் அம்சம் நிறைந்தவராவார். இவருக்கு காவிரியில் நீராடும் துலா ஸ்நானம் என்ற நிகழ்வும் இம்மாதத்தில் மேற்கொள்ளப்படுகிறது. மாதம் முழுதும் நீராடலாம்.

அன்ய க்ஷேத்ரே க்ருதம் பாபம் புண்யக்ஷேத்ரே விநச்யதி |
புண்ய க்ஷேத்ரே கிருதம் பாபம் வாரனாச்யாம் விநச்யதி |
வாரனாச்யாம் க்ருதம் பாபம் கும்பகோனே விநச்யதி |
கும்பகோனே க்ருதம் பாபம் காவேரி ஸ்நானே விநச்யதி |

என்று காவேரி ஸ்நானத்தின் மகிமையை வேதம் போற்றுகிறது. இந்தச் ஸ்லோகத்தின் பொருள் இதுதான். “புண்ணிய தலம் அல்லாத ஒரு இடத்தில் செய்த பாவம் புண்ணிய தலத்துக்குச் சென்று இறைவனை தரிசிப்பதால் தீரும். புண்ணிய தலங்களில் தவறிப் போய் பாவம் செய்து விட்டால், அந்தப் பாவம் வாரணாசி என்று அழைக்கப்படும் காசியில் போய் கங்கையில் குளித்தால் தீர்ந்துவிடும். கங்கையிலே செய்த பாவமானது கும்பகோணம் என்னும் திவ்ய தலத்திலே தீரும். கும்பகோணத்திலும் தெரியாமல் பாவம் செய்யும்படி நேர்ந்துவிட்டால், அந்த பாவத்தைத் தீர்க்க ஒரே வழி, காவிரி ஸ்நானம் மட்டுமே”.

ஐப்பசி மாதக்கடைசி நாள் கடைமுகம் என்று அழைக்கப்படுகிறது. ஐப்பசி கடைசி நாளன்று மேற்கொள்ளப்படும் புனித நீராடலை “கடை முழுக்கு” என்பர். ஐப்பசி மாதம் கடைசி நாளில் காவிரியில் முழுகி, மயூர நாதரை வழிபட்டால் நன்மை உண்டாகும். நம்முடைய பாவங்கள் கரைந்தோடும்.

14. துலா காவேரி செய்ய வேண்டிய இடங்கள்

துலா காவேரி செய்ய வேண்டிய இடங்கள் சில காவேரி மஹாத்மியத்தில் உள்ளன. தலைக்காவேரி, நீவா, ராமபுரம், ஸ்ரீரங்கம், திருவானைக்கா, சப்தஸ்தானம், திருவையாறு, புஷ்பாரண்யம், திருச்சாய்க்காடு, திருவெண்காடு, மாயூரம், சாயாவனம், கும்பகோணம், திருவிடைமருதூர், திருஇந்தளூர் முதலிய இடங்களில் ஸ்னானம் செய்து, தான தர்ம முன்னோர்களை செய்பவர்கள் சகல சௌபாக்கியங்களையும் பெற்று தீர்க்க ஆயுளுடன் வாழ்வார்கள்.

திருச்சியில் உள்ள குணசீலத்தில் அகண்ட காவிரியில் நீராடி தரிசனம் செய்பவர்கள் அனைத்து நோய்களும் நீங்கி இன்புறுவர். திருவரங்கத்தில் அம்மா மண்டபத்தில் நீராடி திருவரங்கனை (யானை மீது தங்க குடத்தில் காவேரி தீர்த்த அபிஷேகம்) தரிசிப்பவர்கள், குடந்தையில் நீராடி ஆராவமுதனை தரிசிப்பவர்கள், மாயவரத்தில் நீராடி பரிமள ரங்கநாதனை தரிசிப்பவர்கள் சகல பாவங்களும் நீங்கப் பெற்று நீண்ட ஆயுளோடு அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அடைவார்கள்.

15. துலா ஸ்நானம் செய்ய முடியாதவர்கள் என்ன செய்யலாம்?

துலா ஸ்நானம் செய்ய முடியாதவர்கள் தங்கள் வீடுகள் அல்லது இருப்பிடத்தில் சூரியன் உதிக்கும் முன்னால் நீராட வேண்டும். தங்கள் வீட்டில் உள்ள சுத்தமான தண்ணீரில் காவிரி நதியை வணங்கி ஆவாகனம் செய்ய வேண்டும். பகவானுடைய ஸ்தோத்திரங்களைச் சொல்ல வேண்டும். சங்கல்பம் செய்து கொண்டு ‘‘இந்த தண்ணீரையே காவிரி நதியாக பாவித்து நீராடுகின்றேன். துலா மாதத்தில் காவேரி ஸ்நானம் செய்த பலனை அளிக்க வேண்டும்’’ என்று பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். கோயிலுக்குச் சென்று, ஒரு அகல் விளக்கில் பசு நெய் விட்டு, புதிய திரிபோட்டு ஏற்றி வைக்க வேண்டும். இயன்ற அளவு தானத்தைச் செய்ய வேண்டும்.

16. திருமால் ஆலயங்களில் தீபாவளியும், ஊஞ்சல் உற்சவமும்

ஐப்பசியில் தீபாவளி பண்டிகை விசேஷம். நரகாசுரன் என்னும் அசுரனை சத்ய பாமையோடு கண்ணன் வதம் செய்த பொழுது, அவனுக்கு கொடுத்த வரத்தின் படி, ஐப்பசி மாத தேய்பிறை சதுர்த்தசி விடியல் காலை நேரம், தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது. அன்று வீட்டில் நாம் பட்டாசுகள் வெடித்து, புது ஆடைகள் தரித்து, இனிப்புகள் பலகாரங்கள் செய்து, குதூகலமாகக் கொண்டாடுகின்றோம். எல்லாத் திருமால் ஆலயங்களிலும், அன்றைக்கு, காலை திருவிளக்குகள் (தீப +ஆவளி) சமர்ப்பித்து, புதுப் பரிவட்டங்கள் (ஆடைகள்) சாத்தி, எல்லா சன்னதிகளிலும் உள்ள மூர்த்திகளுக்கும் திருமஞ்சனம் நடைபெறும். அன்றைக்கு மட்டும் புது ஆடைகள் சாத்திய பிறகு தான் காலை சந்தி (பூஜை) நடைபெறும். ஐப்பசி மாதத்தில் பெரும்பாலான திருமால் ஆலயங்களில் டோலோற்சவம் எனப்படும் ஊஞ்சல் உற்சவம் பிரசித்தமாக நடைபெறும்.

17. கந்த சஷ்டி

“சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, சுப்ரமணியருக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை” என்பார்கள். தீராத பிரச்னைகளை தீர்த்து வைக்கக் கூடியவர் முருகப் பெருமான். எனவே, முருகப் பெருமானுக்கு உகந்த கந்த சஷ்டியில் விரதமிருந்து வழிபடுகின்றோம். கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை கொண்டாடும் ஒரு விழா. சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி வரை உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும். கந்தனை வணங்கினால் கடன் பிரச்சினைகள் நீங்கும். எதிரிகள் தொல்லை ஒழியும்.

18. கந்த சஷ்டி

ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் பிரதமை தொடங்கி சஷ்டி வரை உள்ள ஆறு நாட்கள் கந்த சஷ்டி விழா கொண்டாடப் படுகின்றது. முருகப் பெருமான், சூரபத்மனை வதம் செய்து மயிலாகவும், சேவலாகவும் ஆட்கொண்ட தலமான திருச்செந்தூர் தலத்தில் மட்டும் சூரசம்ஹாரத்திற்கு மறுநாள் நடக்கும் முருகன் – தெய்வானை திருக்கல்யாணத்திற்கு பிறகே விரதம் நிறைவு செய்யப்படுகிறது. இந்த தலத்தில் கந்தசஷ்டி விழாவானது 12 நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது.

19. ஐப்பசி அட்சய நவமி

ஐப்பசியில் அட்சய நவமி (செவ்வாய்க் கிழமை, நவம்பர் 21, 2023) வருகிறது. அட்சய நவமி தினமானது சத்ய யுகத்தின் ஆரம்பம் என்று நம்பப்படுகிறது, அதனால் அது ‘சத்ய யுகாதி’ என்று அழைக்கப்படுகிறது. தொண்டு மற்றும் நன்கொடைகள் போன்ற தர்ம காரியங்கள் செய்ய இது ஒரு நல்ல நாள். இந்நாளில் செய்யும் புண்ணியம் அக்ஷயமாக (குறையாமல்) இருக்கும், அட்சய நவமி நாளில் மதுரா-பிருந்தாவனத்தை சுற்றி வருவது (பரிக்கிரமா) மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.

நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் இந்து பக்தர்கள் மதுரா, பிருந்தாவன் மற்றும் கோவர்தன் ஆகிய இடங்களுக்குச் சென்று, இந்த அம்ல நவமியின் புனித நாளில், அதிகபட்ச பலன்களைப் பெறுவதற்காக சுற்றுவட்டம் (பரிக்கிரமா) செய்கின்றனர். புராணங்களின்படி, கிருஷ்ணர் பிருந்தாவன்-கோகுலத்தின் தெருக்களை விட்டு மதுராவுக்குச் சென்றதாக நம்பப்படுகிறது. கிருஷ்ணர் தனது கடமைகளை நிறைவேற்றுவதற்காக தனது பயணத்தைத் தொடங்கிய நாள் இது. இந்நாளில் நெல்லி மரத்தை வணங்குவது சிறப்பு. ‘அட்சயம்’ என்றால் வளரக்கூடியது என்று பொருள். இன்று உபவாசமிருந்து இறைவனை வழிபட, குறைவில்லாத செல்வம் பெருகும்.

20. லலிதா பஞ்சமி

ஐப்பசி மாதம் அனுஷ்டிக்கப்படும் விரதங்களில் ஒன்று லலிதா பஞ்சமி. தசமஹாவித்யா என்னும் பத்துவிதமான சக்திகள் இந்த பிரபஞ்சத்தின் அனைத்து விதமான செயலுக்கும் மூலகாரணமாக விளங்குகிறது. ஓர் மஹாசக்தி தனது நிலையில் பத்துவிதமாக பிரிவடைவது தசமஹாவித்யா. இதன் ஒரு வடிவம் தான் லலிதா என்று திருநாமத்தோடு உள்ள வடிவம் சோடசி என்றும் திரிபுரசுந்தரி என்றும் அழைப்பதுண்டு ஐப்பசி வளர்பிறை பஞ்சமி தினம் உபாங்க லலிதா விரதம் என்று கடைபிடிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு லலிதா பஞ்சமி 2023 அக்டோபர் 19ஆம் தேதி வருகிறது. அக்டோபர் 19ஆம் தேதி விடி காலை 1.12 முதல் அக்டோபர் மாதம் 20ஆம் தேதி காலை 12.32 வரை இந்த பஞ்சமி விரதத்தை இருக்கலாம் சிலர் தொடர்ந்து எட்டு நாட்கள் இருப்பார்கள். இந்த நாளில் லலிதா சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்வார்கள். ஆலயங்களுக்கு சென்று தினசரி விளக்கேற்றி அம்பாளை வெளிப்படுவார்கள். அர்ச்சனை, ஆராதனைகள் செய்வார்கள். தானங்கள் செய்வார்கள்.

21. ‘அஷ்ட மகாவிரதங்கள்’

சாமானியர்கள், இல்லறத்தில் இருந்துகொண்டு நித்திய வழிபாடு செய்வது கடினம். எனவேதான், சில குறிப்பிட்ட நாள்களை நிர்ணயித்து, அதற்கான வழிபாட்டு முறை களையும் வகுத்திருக்கின்றனர் நம்பெரியோர்கள்.

அவ்வாறு அவர்கள் வகுத்துக்கொடுத்திருக்கும் விரதங்களுள் முக்கியமானவை ‘அஷ்ட மகாவிரதங்கள்.’ அஷ்டமகாவிரதங்கள், சிவபெருமானைப் போற்றும் விரதங்கள். கார்த்திகை சோமவார விரதம், கார்த்திகை உமா மகேஸ்வர விரதம், மார்கழி திருவாதிரை விரதம், தை மாத சூல விரதம், மாசிமாத மகாசிவராத்திரி விரதம், பங்குனி உத்திரத் திருக்கல்யாண விரதம், வைகாசிமாத அஷ்டமி ரிஷப விரதம் மற்றும் ஐப்பசி மாத கேதார கௌரி விரதம் ஆகிய எட்டு விரதங்களுமே மகா விரதங்கள் என்று போற்றப்படுவன. இவற்றுள், கேதார கௌரிவிரதம் மிகவும் முக்கியமானது.

22. கேதார கௌரி விரதம்

ஒருமுறை, சிவபெருமானும் பார்வதி தேவியும் கயிலாயத்தில் இருந்தபோது, பிருங்கி முனிவர் தரிசனம் செய்ய வந்தார். அப்போது பிருங்கி, சிவ பெருமானை மாத்திரம் வலம்வந்து நமஸ்கரித்தார். மகரிஷி, சக்தியாகிய தன்னை விடுத்து சிவத்தை மட்டும் நமஸ்கரிப்பது ஏன்? என்று பார்வதி தேவி சிவபெருமானிடம் கேட்டாள். அன்னையின் கேள்வியின் பொருள் அறிந்த அப்பனும், இந்த உலகிற்கு ‘சிவன் இல்லையேல் சக்தி இல்லை’ எனவும் ‘சக்தியில்லையேல் சிவம் இல்லை’ என்பதை உணர்த்தவும் திருவுளம் கொண்டார்.

ஈசன் மனத்தில் நினைத்ததை உள்ளூர உணர்ந்த அன்னை, கயிலாயத்திலிருந்து நீங்கினாள். ‘கேதாரம்’ என்னும் மலைச் சாரலுக்குச் சென்று அங்கு தங்கி, ஈசனை லிங்க வடிவமாய்ப் பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தாள் பார்வதி தேவி. புரட்டாசி வளர்பிறை அஷ்டமி அன்று தன் பூஜையைத் தொடங்கி, தொடர்ந்து 21 நாள்கள் கடுமையான விரதம் மேற்கொண்டாள் கௌரி. அன்னையின் தவம் கண்டு மனம் கனிந்த ஈசன், உமையின் முன்தோன்றினார்.

23. அர்த்தநாரீஸ்வரராகக் காட்சி

‘‘சர்வ ஜகன்மாதாவான நீ வேண்டுவது என்ன?’’ என்று கேட்டார். அப்போது அன்னை ஈசனை வணங்கி, ‘‘இந்த உலகில் ஆண்களும் பெண்களும் சமம் என்பதை உணர்த்த, உலகின் முதலோனான தாங்கள், தங்களில் பாதியை எனக்குத் தரவேண்டும்’’ என்று வேண்டிக்கொண்டாள். ஈசனும் அன்னையின் வேண்டுகோளுக்கிணங்கி, தன் இடப்பாகத்தை அம்மைக்கு வழங்கி அர்த்த நாரீஸ்வரராகக் காட்சிகொடுத்தார்.

மனம் மகிழ்ந்த அன்னை, ‘தான் மேற்கொண்ட விரதமே தனக்கு இந்த வரத்தை வழங்கியது’ என்பதை உணர்ந்து, ‘இந்த விரதத்தை சுமங்கலிப் பெண்கள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்’ என்றும் ‘அவ்வாறு மேற்கொள்ளும் சுமங்கலிப் பெண்களுக்கு, தீர்க்க சுமங்கலி பாக்கியமும் கணவனை விட்டுப் பிரியாத ஆனந்த வாழ்வும் ஸித்திக்கும்’ என்றும் ஆசீர்வதித்தார். அன்று முதல் கேதார கௌரி விரதம் இந்தப் பூவுலகில் முதன்மையான விரதமாகப் போற்றப்பட்டு கடைப் பிடிக்கப்பட்டுவருகிறது. ‘இந்த விரதத்தைத் தொடர்ந்து கடைப் பிடிப்பவர்கள், அனைத்து செல்வங்களையும் பெற்று வாழ்வார்கள்’ என்றும், ‘பிரிந்திருக்கும் தம்பதியர் இந்த விரதத்தை மேற்கொள்ள, விரைவில் சேர்ந்துவாழும் பாக்கியம்
உண்டாகும்’ என்றும் கூறுகிறார்கள்.

24. தன்வந்திரி

திருமால் தன்வந்திரியாக அவதரித்த நாள் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக உள்ள திரயோதசி நாளாகும். இந்த தினத்தை தன்வந்திரி ஜெயந்தியாக ‘‘தன்திரேயாஸ்’’ என்று வடமாநில மக்கள் அனுஷ்டிக்கின்றனர். திருமாலின் 24 அவதாரங்களில் 17-ஆவது அவதாரமாக தன்வந்திரி அவதாரம் விளங்குகிறது. தன்வந்திரி பகவான் கற்பனைக்கு எட்டாத அழகுடன், திருக்கரங்களில் சங்கு, சக்கரம், அட்டைப்பூச்சி, அமிர்தகலசம் ஆகியவற்றை ஏந்தி நின்றார்.

அவர்தான் தன்வந்திரி என்ற தெய்வீக மருத்துவர். மருத்துவக் கலையின் முதல்வரான இவரை வேண்டியே தேவர்கள் அமரவாழ்வைப் பெற்றனர். மனிதர்களுக்கு நோய் நொடிகள் அவரவர் கர்மவினைப்படி வந்து தான் தீரும். இதிலிருந்து நம்மை தன்வந்திரி வழிபாடு ஒன்றே காப்பாற் றவல்லது. மருத்துவக் கடவுளான தன்வந்திரி பகவானின் கதையைப் படித்து அவரை முறைப்படி வழிபட வேண்டும். இவரை வழிபட்டால் நோய்நொடிகள் நீங்குவதோடு ஆரோக்கியமும் உண்டாகும். ரங்கம் ரங்கநாதர் கோயிலில் தன்வந்திரிக்கு சந்நதி உள்ளது. இன்னும் பல இடங்களிலும் உண்டு.

25. தனத்திரயோதசி

தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்னால் வரக்கூடிய நாளை தன திரயோதசி என்று சொல்வார்கள் நமக்கு பணத்தை வாரி வழங்கக்கூடிய மகாலட்சுமியையும் குபேரனையும் வணங்க வேண்டிய நாள். அந்த நாளில் எமதர்மராஜனுக்கு நன்றி தெரிவித்து ஆரோக்கியத்தை பிரார்த்திக்க வேண்டும். தனத்திரயோதசி நாளில் லட்சுமி பூஜை செய்வதால் ஏழு தலைமுறைக்கும் செல்வம் பெருகும். அன்று இரவு முழுவதும் விளக்கு ஏற்றி வைப்பதால் எம பயம் தீரும். அந்த விளக்கு எமதீபம் என்று அழைக்கப்படுகிறது. இன்று தங்கம் வாங்கினால் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை. அப்படி வாங்கும் தங்கத்தை தனலட்சுமியின் முன் வைத்து பூஜை செய்வார்கள். வசதி குறைவானவர்கள் வெள்ளி, புதிய பாத்திரங்கள், பித்தளை, புடவை வாங்கலாம்.

26. ஐப்பசி தேய்பிறை பிரதோஷம்

ஐப்பசி தேய்பிறை பிரதோஷ தினம் விசேஷமானது. இந்த தினத்தில் தான் யமராஜன் தன் சகோதரி யமுனையின் வீட்டிற்குச் சென்று ஆசிகள் வழங்கி, பல பரிசுகள் கொடுக்க யமுனையும் மனம் மகிழ்ந்து, தனது சகோதரனுக்குப் பரிசுகளும் இனிப்புகளும் கொடுக்கிறாள். இத்திருநாளில் வடநாட்டுப் பெண்கள், தங்கள் சகோதரர்களைச் சந்தித்து, அவர்களின் நெற்றியில் திலகமிட்டு வாழ்த்துகிறார்கள். சகோதர பாசத்தை வளர்க்கும் இந்த விழாவை, எமனுக்குப் பிடித்த விழா என்று புராணங்களும் போற்றுகின்றன. வெள்ளிக்கிழமை பிரதோஷ நேரத்தில் தீபம் ஏற்றி வழிபட யம பயம் போகும். சிலர் எம துவிதியை நாள் அன்று சகோதரிகளை சென்று பார்த்து பரிசுகள் தருவதுண்டு.

27. ஐப்பசியும் முதல் ஆழ்வார்களும்

நமது தொன்மையான சமய மரபின் அடி வேர் ‘‘நான்கு வேதங்கள்” தான் இந்த வேதங்களின் தமிழ் வடிவங்கள் தான் வைணவ வழிபாட்டு நூலான நாலாயிர திவ்ய பிரபந்தமும், சைவர்களின் வழிபாட்டு நூலான தேவார திருவாசகங்களும். வைணவத்தின் அடிப்படை தமிழ் வேத நூலான, நாலாயிர திவ்ய பிரபந்தத்தை அருளிச்செய்தவர்கள், ஆழ்வார்கள்; ஆழ்வார்கள் பன்னிருவர். அதில் முதல் மூன்று ஆழ்வார்கள் அவதாரம் செய்த மாதம் ஐப்பசி மாதம்.

பொய்கையாழ்வார், ஐப்பசி மாதம் திருவோணத்திலும், பேயாழ்வார் ஐப்பசி மாதம் அவிட்டத்திலும், பூதத்தாழ்வார் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்திலும் அவதரித்தனர். அவர்கள் இயற்றிய நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் முதல் மூன்று நூல்கள் முதல் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி, மூன்றாம் திருவந்தாதி என்று வழங்கப்படுகிறது. எல்லா திருமால் ஆலயங்களிலும் இந்த ஆழ்வார்களின் அவதார விழா சிறப்பாகக் கொண்டாடப்படும். (ஐப்பசி சதயத்தில் பிறந்தவர் மாமன்னர் ராஜராஜசோழன். தஞ்சை பெரிய கோயிலில் சதயவிழா சிறப்பாக நடைபெறும்).

28. ஐப்பசி பூராடம்

விஷ்வக்சேனர் அவதார நாள் ஐப்பசி பூராடம். சைவத்தில் விநாயகரை போல், வைணவத்தில் இவர் தான் முக்கியம். இவர் பூஜை இல்லாமல் எந்த பூஜையும் தொடங்க முடியாது. சேனாதிபதி ஆழ்வான், என்று பல பெயர்களில் அழைக்கப்படும் இவரை முன்னிட்டு பெருமாளை வணங்க வேண்டும். இவர் தான் நித்தியசூரிகளுக்கு எல்லாம் தலைவர். எம்பெருமானுடைய சேனைக்கு தலைவர். அதனால் சேனை முதலிகள் என்று கூறுகிறோம். ஆதிஷேசன், கருடன் எல்லாம் நித்தியசூரிகள். அவர்களுக்கு எல்லாம் இவர் தலைவர்! எம்பெருமானின் சேஷ பிரசாதத்தை முதலில் கொள்பவராதலால், இவருக்கு சேஷாசநர் என்ற திருநாமமும் உண்டு. கோயிலின் வடக்கு புறத்தில் தெற்கு பார்த்தபடி இவர் சந்நதி இருக்கும். இவரையும் துவாரபாலகர்களை சேவித்து விட்டு பெருமாளை சேவிப்பது தான் முறை.

29. ஐப்பசி அசுவினி

அசுவினி நட்சத்திரம் 27ல் முதல் நட்சத்திரம். அது இருக்கும் மேஷ ராசிக்கு நேர் எதிர் ராசி ஐப்பசி மாதத்தைக் குறிப்பிடும் துலா ராசி. இந்த துலா மாதத்தில் தான் (அசுவினியில்) திருமூலர் குரு பூஜை நடைபெறுகிறது. திருமூலர் சேக்கிழார் சுவாமிகளால் பெரிய புராணத்தில் பாடப்பட்ட அறுபத்து மூன்று நாயன் மார்களில் ஒருவர். பதினெண் சித்தர்களுள் ஒருவர். இவர் சிறந்த ஞானியாய் விளங்கியவர். திருமூலர் வரலாற்றை நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதியில் சுருக்கமாய்க் கூறுகிறார். இவர் அருளிய திருமந்திரம் 3000 பாடல்களைக் கொண்டது.

இதனைச் சைவத்திருமுறை பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாய்த் தொகுத்துள்ளனர்.

ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந்தான்
ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந் தானுணர்ந் தேட்டே

என்னும் திருப்பாடலைத் தொடங்கி ஓராண்டுக்கு ஒரு திருப்பாடலாக, மூவாயிரம் ஆண்டுகள் இவ்வுலகில், சிவயோக நிலையில் அமர்ந்திருந்து மூவாயிரம் திருப்பாடல்கள் அருளிச் செய்தார். எல்லாம் வல்ல பரம்பொருள் அன்பே உருவானவர் என்பதை, தம் பாடல் மூலம் விளக்குகிறார். அப்பாடல் பின் வருமாறு

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே

30. ஐப்பசி திருவோணம்

திருவோணம் பெருமாளுக்குரிய நட்ஷத்திரம். இந்த நட்சத்திரத்தில் நம் பிள்ளையின் திருவருளால், திருவரங்கத்திலே வடக்குத் திருவீதிப் பிள்ளைக்குத் திருக்குமாரராய்த் தோன்றியவர் பிள்ளை லோகாசாரியர். கி.பி 14ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வடக்கிலிருந்து வந்த மாலிக்கபூர் படையெடுப்பால் திருவரங்கம் பெரிதும் பாதிக்கப்பட்ட போது, அரங்கநாத கோயில் உற்சவரான நம்பெருமாளை அந்நியரிடம் காக்க வேண்டி திருவரங்கத்தைவிட்டு வெளியேறியவர்.

தன்னுடைய 106 ஆம் அகவையில் மதுரை அருகே யானை மலை கிராமத்தினருகே உள்ள ஜோதிஷ்குடி எனுமிடத்தில் கி.பி 1311ல் பரம பதமடைந்தார். ஒவ்வொரு மாதமும் யானை மலை (மதுரை) அடிவாரத்திலுள்ள இவர் அதிஷ்டானத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஐப்பசி திரு வோணத்தில் (23.10.2023) ஆயிரக்கணக்கில் கூடி வழிபாடு நடத்துவார்கள். இவரின் பதினெட்டு படைப்புகள் பொதுவாக அஷ்டதச (18) ரகசியம் என வைணவர்களால் அழைக்கப்படுகிறது.

ஐப்பசி மூலம்

வைணவ ஆசார்யர்கள் பரம்பரையில் கடைசியாக அவதரித்தவர் மணவாள மாமுனிகள். ஆதிசேஷனுடைய அவதாரமாகவும், பகவத் இராமானுசரின் அவதாரமாகவும் அவதரித்தவர். அவர் அவதரித்தது, நம்மாழ்வார் அவதரித்த ஆழ்வார் திருநகரில் (திருக்குருகூர்), ஐப்பசித் திங்கள் ‘‘மூல’’ நட்சத்திரத்தில். மாமுனிகளின் இயற்பெயர் ‘‘அழகிய மணவாளர்’’ என்பது. அரங்கன் அருள் ஆணையிட, நம்மாழ்வாரின் திருவாய்மொழியின் சாரார்த்தங்களையெல்லாம் ஒரு வருடகாலத்தில் திருவரங்கம் பெரிய கோயிலில் விரித்துரைத்தவர். அவர் தம் காலக்ஷேபம் முடிவடையும் நாளான, சாற்றுமறை தினத்தன்று, அரங்கன் அவருக்கு சீர்கள் பல தந்து, தவிர, அரங்க நாயகமென்ற ஐந்து வயது அர்ச்சகப்பிள்ளையுருவாய் வந்து,

ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
யதீந்த்ரப் பிரணவம் வந்தே ரம்யஜா மாதரம் முனீம்

என்று அவரைப்புகழ்ந்து, ஒரு தனியனும் அருளிச்செய்தான். தென்கலை வைணவ மரபில், இந்த ஸ்லோகத்தை ஓதி விட்டே மற்றைய பாசுரங்கள் எல்லாம்ஓத வேண்டும். மணவாள மாமுனிகளுக்குத் திருவாய்மொழியின் மீது கொண்டிருந்த ஆசையால், ‘‘திருவாய்மொழி நூற்றந்தாதி’’ என்னும் அற்புதப் பிரபந்தத்தை அருளிச்செய்தார். இன்னும் பல நூல்களை இயற்றினார். ஐப்பசியின் சிறப்புக்கு இப்படி பலப்பலச் சொல்லலாம். மேலும் உள்ள சிறப்புக்களை, பின் ஒரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

தொகுப்பு: எஸ். கோகுலாச்சாரி

The post முத்துக்கள் முப்பது: அருளை அள்ளித்தரும் ஐப்பசி appeared first on Dinakaran.

Tags : S. Gokulachari ,Sara Saralum ,
× RELATED முத்துக்கள் முப்பது: கால(ன்) பயம் நீக்கி ஆயுள் அதிகரிக்கும் கால பைரவர்