×

முத்துக்கள் முப்பது: கால(ன்) பயம் நீக்கி ஆயுள் அதிகரிக்கும் கால பைரவர்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

எஸ். கோகுலாச்சாரி

1. முன்னுரை

ஒரு மாதத்தில் இரண்டு பருவங்கள் உண்டு. ஒவ்வொரு பருவங்களும் 15 திதிகளைக் கொண்டது. இதில் எட்டாவது திதி மிகச் சிறப்பு வாய்ந்தது. அஷ்டமி என்று சொல்வார்கள். இந்த அஷ்டமி என்பது எல்லா கடவுள்களுக்கும் உரியது. பெருமாளுக்கு உரிய அஷ்டமி திதியை கோகுலாஷ்டமி என்று கொண்டாடுகிறோம். துர்க்கைக்கு உரிய அஷ்டமி திதியை துர்காஷ்டமி என்று கொண்டாடுகின்றோம். அதுபோல் சிவபெருமானுக்கு உரிய அஷ்டமி திதியை கால பைரவ அஷ்டமி என்று மிகச் சிறப்பாக அனுசரிக்கிறோம். இந்த நாளில் விரதம் இருந்து சிவபெருமானை வணங்குவது சாலச் சிறந்த நன்மையைத் தரும்.

2.எட்டு என்றால் கஷ்டமா?

பொதுவாகவே எட்டு என்கிற எண் கஷ்டத்தைத் தருகின்ற எண்ணாக நாம் கருதுகின்றோம். அஷ்மி திதியில் எந்த சுப காரியங்களும் செய்யப்படுவது இல்லை. ஆனால் ஆன்றோர்கள் இந்த அஷ்டமி திதியை புனித நாளாகக் கருதுகின்றனர். எட்டு என்பது உண்மையில் மிகச்சிறந்த எண். எட்டாததையும் எட்ட வைக்கும் எண். ஆன்மிகத்தில் மிக உயர்ந்த எண். மகாலட்சுமி எட்டு தோற்றங்களில் காட்சியளிப்பதால் அஷ்ட லட்சுமி என்று சொல்லுகின்றோம். செல்வங்களை அஷ்ட ஐஸ்வரியங்கள் என்று சொல்லுகின்றோம். சித்திகளை அஷ்ட மகா சித்திகள் என்று சொல்லுகின்றோம். எனவே ஆன்மிகத்தில் மிக உயர்ந்த இடத்தை பிடித்த அஷ்டமி திதியில் இறைவனை வணங்குவதன் மூலமாகவும் விரதம் இருப்பதன் மூலமாகவும் நம்முடைய கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்துவிடும்.

3.பாவங்கள் தீர்க்கும் கார்த்திகை அஷ்டமி

இந்த நாட்களில் காலையில் சிவபெருமானையும் மாலையில் சூரிய அஸ்தமன வேளையில் பைரவரையும் சென்று வழிபட வேண்டும். அங்கு நடக்கும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொள்ள வேண்டும். இப்படி தரிசனம் செய்வதன் மூலமாக நமக்கு மிகச்சிறந்த நன்மைகள் கிடைக்கும். சனியினுடைய தோஷங்கள் விலகும். ஆயுள் தோஷங்களும் விலகும். ஆயுள் விருத்தி உண்டாகும். சுபகாரியத் தடைகள் தூள் தூளாகும். கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமியை கால பைரவ அஷ்டமி என்று அழைக்கின்றோம். கால பைரவ அஷ்டமி, பாவங்களை எல்லாம் தீர்ந்து விடும்.

4.ஆயுள் விருத்தி ஏற்பட சம்புகாஷ்டமி

ஒவ்வொரு அஷ்டமிக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. சனாதன அஷ்டமி விரதம் இருந்தால் நவகிரக தோஷம் விலகும். வறுமை போகும். சதாசிவ அஷ்டமியில் விரதம் இருந்தால் மனக்குழப்பங்கள் தீரும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பகவதாஷ்டமி விரதம் இருந்தால் கடன் சுமை நீங்கிவிடும். சிவனடியார்களுக்கு செய்த பாவங்கள் போய் விடும். நீலகண்டாஷ்டமி விரதம் இருந்தால் எல்லாத் துறைகளிலும் நிலையான வெற்றி கிடைக்கும். கல்வி கேள்விகளில் முன்னேற்றம் ஏற்படும். அதிகஸ்தானு அஷ்டமி விரதம் சகல ஐஸ்வரியங்களையும் கொண்டு வந்து சேர்க்கும். ஸ்தாணு அஷ்டமியால் விஷபயம் நீங்கும். சம்புகாஷ்டமி விரதம் இருந்தால் ஆயுள் தோஷங்கள் நீங்கி ஆயுள் விருத்தி ஏற்படும். பெற்றோர்களுக்கு செய்த அபவா தங்கள் நீங்கிவிடும்.

5.எந்த போட்டிகளிலும் வெற்றி பெறலாம்

ஈஸ்வராஷ்டமி விரதம் இருந்தால் சகோதர பகை நீங்கும். கைலாச பதவி கிடைக்கும். ருத்ராஷ்டமி விரதம் பொருள் வரவைத் தரும் வறுமையைப் போக்கும். கால பைரவ அஷ்டமி கோபத்தைக் கட்டுப்படுத்தும். கோபத்தினால் ஏற்படும் பாவங்களை விலக்கும். சங்கராஷ்டமி விரதம் இருந்தால் தொழில் விருத்தி ஏற்படும். தொழில் பகை விலகும். தொழில் செய்யும்போது ஏற்படும் பாவங்கள் போய்விடும். தேவ தேவாஷ்டமி விரதமிருந்தால் மனதில் அச்சமே இருக்காது. கால(ன்)பயம் விலகும்.

உத்தியோகத்தில் பதவி சம்பளம் முதலியவை ஓங்கும். மகேஸ்வராஷ்டமி விரதம் இருந்தால் எந்த போட்டிகளிலும் வெற்றி பெறலாம். முன்னேற்றம் ஏற்படும். திரியம்பகாஷ்டமி விரதம் இருந்தால் குடும்பத்தில் ஏற்படும் சுபத் தடைகளை விலக்கும். திருமண யோகம் கூடிவரும். எம பயம் நீங்கி ஆயுள் விருத்தி ஏற்படும். இந்நாட்களில் காலை சிவ துதியைச் சொல்ல வேண்டும். மாலை சூரியன் அஸ்தமனமாகும் வேளையில் காலபைரவரை தரிசனம் செய்ய வேண்டும்.

6.பைரவர் யார்?

சிவபெருமான் உருவத்திலும், அருவத்திலும், அருஉருவத்திலும் காட்சி தருவார். இதனை அருவம், உருவம், அருவுருவம் என்றும், பலவாறாக சைவர்கள் அழைக்கின்றனர். அவருடைய திருமேனி வடிவங்கள் 64 என்பர். 64 திருமேனி வடிவங்களில் ஒன்று வைரவர் எனப்படும் பைரவர். ஆனந்த பைரவராக உலகைப் படைக்கிறார். கால பைரவர் ஆக உலகைக் காக்கிறார். காலாக்கினி பைரவராக உலகை பிரளய காலத்தில் ஒடுக்குகின்றார். சிவனுக்கு ரிஷப வாஹனம் இருப்பது போல பைரவருடைய வாகனமாக நாய் அமைந்திருக்கிறது. அதனால் நாய்களுக்கு பைரவர் என்ற பெயர் உண்டு.

7.பஞ்சகுண சிவ மூர்த்திகளில் உக்ர மூர்த்தி

வக்கிரம், சாந்தம், வசீகரம், ஆனந்தம், கருணை முதலிய குணங்களை பஞ்ச குணம் என்கிறோம். இந்த குணங்களின் அடிப்படையில் சிவனது ஐந்து மூர்த்தர்கள் வகைப்படுத்தப்படுதலை பஞ்சகுண சிவமூர்த்திகள் என்கிறார்கள் சைவர்கள்.

1.உக்ர மூர்த்தி – பைரவர்
2.சாந்த மூர்த்தி – தட்சிணாமூர்த்தி
3.வசீகர மூர்த்தி – பிட்சாடணர்
4.ஆனந்த மூர்த்தி – நடராசர்
5.கருணா மூர்த்தி சோமாசுகந்தர்

8.அட்ட பைரவர்கள்

அட்ட பைரவர்கள் என்பவர்கள் எண் திசைகளுக்கு ஒன்றென விளங்கும் எட்டு பைரவர்கள் ஆவார். சில கோயில்களில் பைரவிகளுடன் இணைந்து தம்பதி சகிதமாகவும் இந்த பைரவர்கள் காட்சிதருகிறார்கள்.

யார் யார் இந்த பைரவர்கள். அவர்கள் பெயர் என்னென்ன…

1. அசிதாங்க பைரவர்
2. ருரு பைரவர்
3. சண்ட பைரவர்
4. குரோதன பைரவர்
5. உன்மத்த பைரவர்
6. கபால பைரவர்
7. பீக்ஷன பைரவர்
8. சம்ஹார பைரவர்
சிவனுக்கு அட்ட வீரட்ட தலங்கள் உண்டு. அதைப்போல அஷ்ட பைரவ தலங்களும் தமிழ்நாட்டில் பிள்ளையார்பட்டி அருகில் உண்டு.

9.கால பைரவர்

பைரவரை சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்ர பைரவர் என்றெல்லாம் அழைக்கின்றார்கள். கால பைரவர், சிவ பெருமானின் ருத்திர ரூபமாக சொல்லப்படுபவர்; சிவன் கோயிலின் வடகிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர்; பன்னிரு கைகளுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியும் திகம்பர ரூபமாய்க் காட்சி தருபவர். கால பைரவர் சனியின் குருவாகவும், பன்னிரண்டு ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், நவக்கிரகங்களையும், காலத்தையும் கட்டுப்படுத்துபவராகவும் கூறப்படுகிறார். கார்த்திகை மாதத்தில் வரும் அஷ்டமிதான் காலபைரவாஷ்டமி.

10.காலபைரவாஷ்டமி என்ன செய்ய வேண்டும்?

காலபைரவாஷ்டமி நாளில் சிவன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த பூஜைகளில் கலந்து கொண்டால் மன அழுத்தம், பயம் நீங்கி, தைரியமும் தன்னம்பிக்கையும், வீரியமும் வேகமும், உண்டாகி, சகல சௌபாக்கியங்களும் அடைவார்கள். சிவபெருமான் அபிஷேகப்பிரியன். சிவ அம்சம் பைரவர் என்பதால், கால பைரவருக்கு சந்தன அபிஷேகம் சிறப்பானது. உக்ர மூர்த்தியான இவரின் கோபம் தணிக்க சந்தனம் அபிஷேகம் செய்ய வேண்டும் என்பார்கள். கருப்பு அல்லது சிவப்பு வஸ்திரம் சாத்தி, சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடலாம். மிளகு தீபமும் நல்லெண்ணெய் தீபமும் சிறப்பானது.

11.முத்தொழிலையும் ஆற்றுபவர்

பைரவர் என்ற பெயர் ஏன் வந்தது என்று பார்க்க வேண்டும். பைரவர் என்கிற பெயர் பீரு என்ற சொல்லை அடிப்படையாகக் கொண்டது. பீரு என்றால் பீதி, அச்சம் என்று பொருள். எதிரிகளுக்கு பீதியைத் தரக் கூடியவர். ஆனால் அதே நேரம் தன்னை அண்டிய பக்தர்களுக்கு அபயம் தந்து அருள்பாலிப்பவர். மேலும் பைரவர் என்ற சொல்லுக்கு படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழிலையும் ஆற்றுபவர் என்ற பொருளும் இருக்கிறது. உலகத்தை எல்லாம் அழித்து, தன்னுள் ஒடுக்கிக் கொள்பவர் என்கிற பொருளும் உண்டு. இந்த முத்தொழிலையும் முறையே பரணம், ரமணம், வமனம் என்று சொன்னார்கள். பரணம் என்பது படைப்பு. ரமணம் என்பது காத்தல். வமனம் என்பது அழித்தல்.

12.சிவனா? சிவாம்சமா?

பைரவர் சிவனுடைய அம்சமாகவும் சொல்வது கொண்டு. சிவனே பைரவராக இருப்பதாகவும் சொல்வது உண்டு. சிவன் பல்வேறு காரணங்களுக்காக தன்னுடைய அம்ச மூர்த்தியாக பல பைரவர்களைப் படைத்து உலகில் அனுப்பி பல்வேறு தொழில்களைச் செய்ய வைப்பதுண்டு. ஒரு கட்டத்தில், உலகியலில் உள்ள சிக்கல்கள் அளவு கடந்து போகும் பொழுது அல்லது சாதுக்கள் மிக மிகத் துன்பப்படும் பொழுது அவர் பைரவராக தோன்றுவார். அசுர சக்திகள் வேறு எந்த சக்தியாலும் கட்டுப்படுத்த முடியாதபடி ஓங்கி நிற்கும்போது சிவபெருமானே பைரவராக வந்து அவற்றையெல்லாம் அழித்து மக்களை காக்கிறார். வஜ்ரம் போல மக்களுக்கு பாதுகாப்பாக விளங்குகிறார் என்பதால் அவரை வஜ்ரமூர்த்தி அல்லது வைரவ மூர்த்தி என்றும் அழைப்பதுண்டு.

13.பைரவரே காவலர்

பொதுவாகவே ஒரு ஊர் இருந்தால் அதற்கு ஒரு காவல் தெய்வம் இருக்கும். அதைப்போலவே ஒரு திருக்கோயில் இருந்தால் அந்தத் திருக்கோயிலைக் காப்பதற்கு ஒரு காவல் தெய்வம் இருக்கும். ஆறு, குளம், கடல், ஏரி முதலிய தீர்த்தங்கள் பொங்கி பிரவகித்து நாட்டை அழித்து விடாமல் காப்பதற்காக ஒரு காவல் தெய்வம் உண்டு. இப்படி இயற்கையின் சீற்றத்தை அளவுக்கு மீறாமல் பார்த்துக் கொண்டு, ஊரையும் திருத்தலங்களையும், தீர்த்தங்களையும் காப்பதால் இவருக்கு ஊர்க்காவலர் என்றும் தீர்த்த காவலர் என்றும் திருத்தல காவலர் என்றும் அழைப்பதுண்டு. வடவழியில் தீர்த்த பாலகர், ஷேத்திரபாலகர் முதலிய சொற்களாலும் இவர் குறிப்பிடப்படுவது உண்டு.

14.பைரவரின் வீரத்தோற்றம்

வீரத்தோடும் தீரத்தோடும் உக்கிரத்தோடும் கொண்ட தோற்றம் என்பதால் இவரை எப்பொழுதும் உக்கிர பாலகன் என்றும் அழைப்பார்கள். ஒரு சமயத்தில் இருக்கக்கூடிய சில தெய்வ மூர்த்த அமைப்புக்கள் மற்றொரு சமயத்தோடு பொருத்திப் பார்ப்பதை ஒப்பாய்வு செய்தல் என்பார்கள். அந்த அடிப்படையில் சைவ சமயத்தில் உள்ள பைரவரின் வரலாற்றையும் தோற்றங்களையும் அவருடைய உக்கிரத்தையும் அதற்கு நிகரான பெருங்கருணையையும் பார்க்கின்ற பொழுது வைணவத்தில் நமக்கு திடீரென்று ஆவிர்பவித்த நரசிம்ம மூர்த்தியின் தோற்றம் நினைவுக்கு வரும். பேராற்றல், பெரும் கருணை, உக்கிரமான தோற்றம் இவற்றைப் பார்க்கும்போது இப்படித் தோன்றும்.

15.நரசிம்ம மூர்த்தியும் பைரவரும்

உக்கிரமாக இருக்கின்ற பொழுது உக்கிர நரசிம்மர் என்று அழைப்பது போலவே பைரவரின் உக்கிர தோற்றத்தை வைத்து உக்கிர பைரவர் என்று அழைப்பார்கள். அதே சமயம் யோகிகளுக்கு ஞானத்தைத் தருவதால் நரசிம்மரை யோக நரசிம்மர் என்று அழைப்பது போலவே, பைரவரையும் யோக பைரவர் என்ற நிலையில் பார்ப்பதும் உண்டு. பஞ்சபூதங்களையும் காப்பவராக விளக்குவதால் பூத பைரவர் என்றும் அவரைச் சொல்லுவார்கள்.

தட்சிணாமூர்த்தியை போல ஞானத்தை அன்பர்களுக்கு அள்ளி அள்ளி வழங்குவதால் ஞானபைரவர் என்றும் அழைப்பது உண்டு. எத்தகைய தோஷங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் நீக்கி, சகல ஐஸ்வரியங்களையும் வாரி வாரிக் கொடுக்கும் வல்லமை பெற்றவர் பைரவர். பைரவர் தோற்றத்தைப் பற்றி சைவம் அல்லாத பிற சமயங்களான ஜயினம் பௌத்தம் சாத்த கௌமாரங்களிலும் செய்திகள் உண்டு.

16.பைரவ தீபம்

சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் நிறைவு வழிபாடு பைரவருக்கு நடைபெறும் ஒவ்வொரு மாதமும் வருகின்ற தேய்பிறை அஷ்டமி தினத்தில் பைரவர் கோயிலுக்கு (அதாவது சிவாலயத்தில் உள்ள பைரவர் சந்நதிக்குச் சென்று) வணங்கி வழிபாடு நடத்துவதன் மூலமாக எல்லையில்லாத நன்மைகளைப் பெறலாம். அன்று பைரவர் சந்நதியில் பிரத்தியேகமாக தீபம் ஏற்ற வேண்டும்.

அந்த தீபத்துக்கு பைரவ தீபம் என்றே பெயர். சிறு துணியில் மிளகை சிறு மூட்டையாகக் கட்டி நல்லெண்ணெய் அகல் தீபத்தை ஏற்றி வழிபட எல்லா வளமும் பெருகும். தேங்காய் மூடியில் நெய் நிரப்பி தீபம் ஏற்றி வழிபடலாம். அதேபோல் பூசணிக்காயை மத்தியில் இரண்டாகப் பிளந்து அதனுள் எண்ணெய் அல்லது நெய் நிரப்பி தீபம் ஏற்றி வழிபடலாம். இதை முறையாக பெரியோர்களிடம் கேட்டுச் செய்ய வேண்டும். இந்த தீபத்தின் வெளிச்சத்தில் அச்சம் விலகி ஓடும் மனதில் தெளிவும் தைரியமும் பிறக்கும் பிறகு வெற்றி தானே வந்தடையும்.

17.காசியில் பைரவர்

தீபம் என்றால் திருவண்ணாமலை ஞாபகத்துக்கு வருவது போல, பைரவர் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது காசி. காசியில் உள்ள மிகப் பழமையான சிவன் கோயில் காசி கால பைரவர் கோயில். ‘‘கால’’ என்ற சொல் மரணத்தையும் விதியையும் குறிக்கிறது. கால பைரவரைக் கண்டு விதியும் அஞ்சும். மரணமும் நெருங்காது. காசியில் உள்ள கால பைரவர் கோயிலின் வைரவ தரிசனம் அருமையாக இருக்கும். வெள்ளி முகம் கொண்ட காலபைரவர் மிக விரிந்த கண்களுடனும், பெரிய மீசையுடனும், முழங்கால் அளவு நீண்ட கரங்களுடனும் காட்சி அளிப்பார். கண்களில் உக்கிரமும் கருணையும் ஏக காலத்தில் பிரதிபலிக்கும்.

அவருக்கு அருகிலே அவரது வாகனமாக நாய் இருக்கும். இதே கோயிலின் பின் பகுதியில் சேத்திரபால பைரவர் தரிசனம் கிடைக்கும். ஒருவர் காசியில் வாழ வேண்டும் என்றால் இவருடைய அனுமதி வேண்டும். காசிக்குத் சென்றவர்கள் இரவு கால பைரவ பூஜை பார்க்காமல் திரும்புவதில்லை. கால பைரவர் காசி நகரத்தின் சேனாதிபதி. காசியில் இறந்தவர்களுக்கு யமபயம் கிடையாது. பிரம்மாவின் சிரசு கபாலமாக மாறி, பிரமஹத்தி தோஷத்திற்கு பைரவர் சக்தி ஆளாகி முடிவில் காசி மாநகர எல்லையில் கால் வைத்தபோது சிவபெருமான் காட்சி தந்து பிரமஹத்தி தோஷத்தை நீக்கி காசிமாநகர காவல் தெய்வமாக எழுந்தருள அருள்புரிந்தார். காசி மாநகர எல்லையில் எட்டு திக்கிலும் அஷ்ட பைரவர்கள் எழுந்தருளி எல்லையை பாதுகாக்கின்றனர்.

18.காசி கறுப்புக் கயிறு

காசி அனுமன் காட்டில் உருபைரவர் ரிஷப வாகனத்தில் தென்கிழக்கு மூலையிலும், ஸ்ரீதுர்க்கை கோயிலில் சண்ட பைரவர் மயில் வாகனத்தில் தெற்கு மூலையிலும், விருத காலர் கோயிலில் அன்ன வாகனத்தில் கிழக்கு மூலையில் அசி தாங்க பைரவரும், லாட் பஜாரில் கபால பைரவர் யானை வாகனத்தில் வடமேற்கு திசையிலும், ஸ்ரீகாமாட்சி ஆலயத்தில் கருட வாகனத்தில் குரோதன பைரவர் தென்மேற்கு திசையிலும், பீமசண்டியில் குதிரை வாகனத்தில் உன்மத்த பைரவர் மேற்கு திசையிலும், திரிலோசன சங்கமத்தில் வடகிழக்கு திசையில் சம்ஹார பைரவர் நாய் வாகனத்திலும், பூத பைரவர் சிங்க வாகனத்தில் வடக்கு திசையில் பீஷண பைரவர் ஆகிய அஷ்ட பைரவரும் அஷ்ட திக்கிலும் எழுந்தருளி ஆட்சி செய்கின்றார்கள். காசி மாநகரம் வந்தாலும், எல்லையை விட்டு வெளியே சென்றாலும் காசி கால பைரவர் முன் அனுமதி பெற்றே வெளிவர வேண்டும். காசியில் இறந்தால் யம பயம் கிடையாது காசி கறுப்பு கயிறு எமபயம் நீங்கி வாழ வைக்கின்றது.

19.நாய் வாகனம்

நம்முடைய சமய மரபில் ஒவ்வொரு தேவதைக்கும் ஒவ்வொரு வாகனம் இருக்கிறது. அநேகமாக உலகத்தில் உள்ள அத்தனை உயிருள்ள, உயிரற்ற பொருள்களையும் (சர, அசர) இறைவன் அன்போடு நேசிக்கிறான் என்பதைக் குறிக்கும் தத்துவம் தான் இந்த வாகனத் தத்துவம். சிறிய உருவமான எலி (மூஞ்சூறு) தொடங்கி மிகப்பெரிய உருவமான யானை வரை பல்வேறு பிராணிகளும் இறைவனுக்கு வாகனமாக அமைந்திருக்கின்றன. மனித ரல்லாத பூத வாகனமும் உண்டு. இயற்கை ஒளிகளான சந்திர சூரியர்கள் (சந்திர பிரபை, சூரிய பிரபை) கூட வாகனம் தான். ஏன் தாவர இனமான கற்பக விருட்சம் கூட (இறைவனுக்கு வாகனமாக இருப்பதை பார்க்கின்றோம். ஆனால் கால பைரவருக்கு நாய் வாகனமாக இருக்கிறது.

20.காரணம் என்ன?

பெரும்பாலும் அடியவர்கள் இறைவனிடம் தங்களைப் பற்றி குறிப்பிடும் பொழுது ‘‘நான் யானையாக இருக்கிறேன்’’ பூனையாக இருக்கிறேன் என்றெல்லாம் குறிப்பிடுவதில்லை. நாயாக இருக்கிறேன் என்றுதான் குறிப்பிடுகின்றார்கள். நாயினும் கடையேன் என்று தன்னை மாணிக்கவாசக சுவாமிகள் கூறிகொள்கிறார் நாயேன், நாயடியேன், அடிநாயினேன், ஊர்நாயின் கடையேன் என்று திரும்ப திரும்ப தன்னைக் கீழ்ப்படுத்திக் கொள்கிறார் திருவாசகத்தில் 67 இடங்களில் நாயேன் என்று பாடியுள்ளார். நன்றி உணர்ச்சிக்காகப் பாராட்டப்பட்டாலும் விலங்குகளில் மிகக் கீழானதாகக் கருதப்படுவது நாய்.

இறைவனை மிக உயர்ந்தவனாகவும், தன்னை மிகத் தாழ்ந்தவனாகவும் கூறிக் கொள்வது பக்தர்களின் இயல்பு. மணிவாசகர் தன்னை மனிதரில் மிகத் தாழ்ந்தவன் என்று சொல்லிக் கொள்வதோடு நிற்காமல் நாயேன் என்றும் நாயினும் கடையேன் என்றும் இகழ்ந்து கொள்கிறார். சிவபுராணம் (60வது அடி) நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே “நான் என்னும் செருக்கு முற்றிலும் ஒழிந்து விட்ட அவரது மனநிலையை இதிலிருந்து உணரமுடிகிறது. மகா விசுவாசம் என்பதற்கு அடையாளமாக நாய் இருக்கிறது. எஜமானனை விட்டு அது விலகுவதில்லை. அதைப்போல இந்த ஆன்மா எஜமானனாகிய பரமாத்மாவை விட்டு விலகுவதில்லை. இதற்கு அடையாளமாக தான் பைரவருக்கு நாய் வாகனமாக இருக்கிறது.

21.பாடகச்சேரி ஸ்வாமியும் பைரவ வழிபாடும்

பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிறந்து வலங்கைமானுக்கருகில் உள்ள பாடகச்சேரியில் வாழ்ந்தவர். வள்ளலார் அருள் பெற்றவர். மக்களின் பசிப்பிணி, உடற்பிணி தீர்க்கும் பணியோடு கோயில்களைச் சீரமைக்கும் பணிகளையும் ஆற்றியவர். இவர் சீரமைத்த கோயில்களில் கும்பகோணத்தில் உள்ள கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் முக்கியமானதாகும். இவர் திருவொற்றியூரில் சமாதி அடைந்தார். பைரவ வழிபாட்டை முறையாக நிறைவேற்றி மக்களுக்கு நல்வாழ்வு அளித்தவர்.

சித்த மரபில் வந்த இப்பெருமான் நாய்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் இடையே எந்த வேறுபாட்டையும் காணாதவர். நாம் மனிதர்களுக்கு உணவிடுவதைப் போலவே இவர் நாய்களுக்கு முழு வாழை இலையைப் போட்டு சாதம், சாம்பார், ஸ்வீட், அப்பளம், பாயசம் என அனைத்து உணவு வகைகளையும் அன்புடன் பரிமாறி அனைத்து நாய்களையும் அழைப்பார். இவர் உணவு பரிமாறும் வரை எந்த நாயும் அன்னதானம் நிகழும் இடத்தில் தென்படாது.

வாழை இலையில் உணவு பரிமாறி முடிந்தவுடன் இவர் கால பைரவரை பிரார்த்தித்த பின் ஒவ்வொரு நாயாக வந்து மனிதர்களைப் போலவே இலையின் முன் அமர்ந்து கொள்ளும். ஒவ்வொரு முறையும் குறைந்தது 300 நாய்களுக்குக் குறையாமல் அன்னதானம் அளிப்பது வழக்கம். இவ்வாறு அனைத்து இலைகள் முன்பும் நாய்கள் அமர்ந்த பின் சுவாமிகள் அன்புடன் உணவை ஏற்குமாறு அந்த நாய்களை வேண்டுவார். அதன் பின்னரே இவர் அழைத்த பைரவ மூர்த்திகள் உணவை அமைதியாக ஏற்பர்.

22.பைரவ முகூர்த்தம்

24 நிமிடங்கள் கொண்டது ஒரு நாழிகை. நான்கு நாழிகைகள் சேர்ந்தது அதாவது ஒன்றரை மணி நேரமே ஒரு முகூர்த்தம் எனப்படும். இடத்தைப் பொறுத்தும், காரியத்தைப் பொறுத்தும் முகூர்த்தத்தின் கால அளவு மாறுபடும் என்பது உண்மையே. சன்னியாசி என்பவர் ஒரு பசு மாடு பால் கறக்கும் நேர அளவிற்குத்தான் ஒரு வீட்டின் முன்பு பிச்சை யாசிப்பதற்காக நிற்கலாம் என்பது சன்னியாச முகூர்த்தம்.

கோதூளி முகூர்த்தம் என்பது பசு மாடுகள் காலையில் புல் மேய்வதற்காக செல்லும் நேரமாகும். எனவே இத்தகைய முகூர்த்தங்களுக்கு இத்தனை மணி, நிமிடம் என்ற கால வரையறையை நிர்ணயிக்க முடியாது. பிரம்ம முகூர்த்தம் என்பது விடியற் காலையில் மூன்றரை மணி முதல் ஐந்தரை மணி வரைக்கும் உள்ள நேரமாகும். அபிஜித் முகூர்த்தம் என்பது நண்பகல் நேரமாகும். இதுவும் கால தேச மாறுபாடு உடையதே. இத்தகைய முகூர்த்த நேரத்தின் இடையில்தான் சித்தர்கள் கணக்கிடும் அமிர்த நேரம் என்ற சித்த முகூர்த்தங்கள் அமைகின்றன. சூரிய உதயத்திற்கு முன்னும் பின்னும் உள்ள நான்கு நிமிட நேரமே பைரவ முகூர்த்தம் என்று வழங்கப்படுகின்றது.

உதாரணமாக, ஒரு நாள் காலை சூரிய உதயம் 6 மணி 12 நிமிடம் என்று வைத்துக் கொண்டால் சூரிய உதயத்திற்கு முன்னால் உள்ள நான்கு நிமிடங்களும் சூரிய உதயத்திற்குப் பின் உள்ள நான்கு நிமிடங்களும், அதாவது 6 மணி 8 நிமிடத்திலிருந்து 6 மணி 16 நிமிடம் வரை உள்ள எட்டு நிமிட நேரமே பைரவ முகூர்த்தம் என்று சித்தர்களால் வரையறுக்கப்பட்டுள்ளது. இது எல்லாவிதமான சித்திகளையும் நன்மைகளையும் தரக்கூடியது என்று சொல்கிறார்கள்.

23. தர்மக் கொடி பைரவ மூர்த்திகள்

வால் பகுதி கொடியைப் போல் மேல் பகுதியில் வளைந்திருக்கும் வாகனங்களை உடைய பைரவ மூர்த்திகள் தர்மக் கொடி பைரவ மூர்த்திகள் என்று அழைக்கப்படுகின்றனர். பதவி, செல்வாக்கு, பணம், ஆரோக்கியம் போன்ற நிலைகளில் உயர் நிலையிலிருந்து விதி வசத்தால் தாழ்ந்த நிலையை அடைந்தவர்கள் வழிபட வேண்டிய மூர்த்தியே தர்மக் கொடி பைரவ மூர்த்தி ஆவார். தங்கள் பதவியை இழந்து சிலர் வாடும் போதும் எதிர்பாராத துன்பங்களைச் சந்திக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்படும் போதும் வழிபட வேண்டிய மூர்த்தியே, தர்மக்கொடி பைரவர் ஆவார், மன அமைதியையும் தன்னம்பிக்கையையும் அளிக்க வல்லது தர்மக் கொடி பைரவ மூர்த்தி வழிபாடாகும்.

24. ஆடபீஜ பைரவ மூர்த்தியும் மகபீஜ பைரவ மூர்த்தியும்

பைரவ மூர்த்திக்கு இடது புறம் பார்க்கும் வண்ணம் வாகனம் அமைந்த மூர்த்தி ஆடபீஜ பைரவ மூர்த்தி என்றும், பைரவ மூர்த்திக்கு வலப் புறம் பார்க்கும் வண்ணம் அமைந்த வாகனத்தை உடையவர் மகபீஜ பைரவ மூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் மகபீஜ பைரவ மூர்த்திகளை செவ்வாய், வியாழக்கிழமைகளில் வழிபடுவதால் நற்சந்ததிகள் கிட்ட வாய்ப்புண்டு.

இரத்தச் சோகை, கர்ப்பப்பை கோளாறுகள் போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்ட தம்பதிகள் ஆடபீஜ பைரவ மூர்த்திகளை வெள்ளிக்கிழமைகள் தோறும் வணங்கி வழிபடுவதால் நற்குணம் மிக்க குழந்தைகளைப் பெற இறைவன் அருள் புரிவார். வாகனம் ஏதுமின்றி அருள்புரியும் பைரவ மூர்த்திகளும் உண்டு. இவர்கள் சுதர்ம சக்கர பைரவ மூர்த்திகள் என்று அழைக்கப் படுகின்றனர். நல்ல தகுதிகளைப் பெற்றிலிருந்தாலும் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்புகள் கிட்டாமல் உள்ளோர் இத்தகைய பைரவ மூர்த்திகளை வணங்கி வழிபடுவதால் தகுதிகளுக்கு ஏற்ற நல்ல வேலைகள் அமையும்.

25.ருத்ரம் புகழும் பைரவர்

சிவனை லிங்க ரூபமாக வழிபடுகிறோம். பைரவரையோ பன்னிரு கைகளுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் தரித்தும், சூலாயுதம் ஏந்தி, பாசக் கயிறு கொண்டு, அங்குசம் போன்ற ஆயுதங்களைத் தாங்கிய திருமேனியாக வழிபடுகிறோம். ஆலயங்களில் கிழக்கு அல்லது மேற்கு நோக்கி சிவபெருமான் எழுந்தருள்வார். பைரவரோ அனைத்து ஆலயங்களிலும் வடக்கு நோக்கியே நின்றருள்வார்.

பைரவரின் பிரதான வாகனம் நாய். ருத்ரம் என்னும் வேத பாகம் ஈசனை ‘நாய்களின் தலைவன்’ என்று புகழ்வது பைரவ ரூபத்தையே. பஞ்ச குணங்களில் பைரவர் வக்கிர குணத்தின் அம்சமானவர். பகைவரை அழிக்கும் ருத்ரமூர்த்தியாக விளங்கும் பைரவரை வழிபட பகைமுற்றிலும் மறையும். பைரவரை வழிபடுவதன் மூலம் சனியினைக் குளிர்வித்து அவர் பார்வையால் ஏற்படும் கெடுபலன்களை நற்பலன்களாக மாற்றிவிட முடியும்.

26.பைரவ காயத்ரி மந்திரங்கள்

ஜாதகத்தில் 6ம் இடம் கெட்டுவிட்டால் பகையும் நோயும் கடனும் வளரும். எட்டாம் இடம் கெட்டுவிட்டால் ஆயுள் தோஷம் ஏற்படும். சனி செவ்வாயின் தீய ஆதிக்கம் அந்த இடங்களுக்கு இருந்தால் வெட்டு, குத்து, என்று பயங்கரமாக இருக்கும். எதிரிகளிடம் இருந்து காத்துக் கொள்ள, தினமும் பைரவர் காயத்ரி மந்திரங்களை சொல்லி வரலாம். பைரவரை முறைப்படி பக்தி சிரத்தையுடன் வணங்கி வர, தீராத வினைகள் எல்லாம் தீர்ந்து விடும்.

1.ஒம் ஷ்வானத் வஜாய வித்மஹே!
சூல ஹஸ்தாய தீமஹி!
தன்னோ பைரவ: ப்ரசோதயாத்!!

2.ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே ஸ்வாந வாஹாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்

3.ஓம் திகம்பராய வித்மஹே தீர்கதிஷணாய தீமஹி தந்நோ பைரவ: ப்ரசோதயாத்

இந்த மந்திரங்களை ஜெபிப்பதாலும், அஷ்டமியில் பைரவரை வழிபடுவதாலும் சகல கிரக தோஷங்களும் நீங்கும். தடைகள் விலகும். பொய் சொல்லுதல், அடுத்தவர் குடும்பத்தைக் கெடுத்தல், பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளுதல், ஒழுக்கக் குறைவாக இருத்தல், பிறர் சொத்துக்களை அபகரிக்க நினைத்தல், முதலிய குற்றங்களோடு பைரவ வழிபாடு செய்தால், அது செய்பவர்களுக்கே வினையாக முடியும். பைரவரின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். எனவே பைரவ வழிபாடு என்பது எச்சரிக்கையோடும், ஒழுக்கத்தோடும் செய்ய வேண்டிய வழிபாடு ஆகும்.

27.அதிசய வழிபாடு

மத்திய பிரதேசம் உஜ்ஜயினியில் ஒரு வித்தியாசமான காலபைரவர் காட்சி தருகின்றார். பஞ்சாங்கியில் நின்று கடுந்தவம் செய்து சிவபெருமானிடம் பற்பல விசேஷமான வரங்களைப் பெற்ற அந்தகாசுரனை அழிக்க தன்னுடைய அம்சமான பைரவரை உருவாக்கினார் சிவ பெருமான். இந்தக்கதையிம் தத்துவம் இதுதான். சிவனிடம் வரம் பெற்று இருந்தாலும் கூட அதை தவறாகப் பயன்படுத்தும் பொழுது சிவபெருமானே உக்கிரமாக வடுவெடுத்து அந்தத் தீமையை அழிக்கிறார் அசுரனின் ஆணவத்தை அழிக்க சிவபெருமான் பைரவராக தோற்றம் எடுத்த நாள் தான் கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி.

அந்த தோற்றம் உஜ்ஜயினியில் உள்ள இந்த திருக்கோயிலில் உள்ளது. பைரவருக்கு என்ன விசேஷம் என்றால் மற்ற கோயில்களைப் போல பைரவர் காட்சி தராமல் மிகப் பெரிய தலையுடன் காட்சி தருகின்றார். இங்கே பைரவருக்கு மலர் மாலைகள், கருப்பு கயிறு, தீபங்கள் இவற்றோடு மதுபானமும் படைக்கப்படுகிறது. இந்தத் தலத்தில் பைரவரின் வாகனமாக நாய் இருக்கிறது சனிக்கிழமைகளில், நாம் கோயில் குளத்தில் மீன்களுக்கு பொரி போடுவது போல இங்கு வரும் பக்தர்கள் நாய்களுக்கு உணவு வழங்குகின்றார்கள்.

28.ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர்

கேட்பவர்களுக்கு கேட்ட வரங்களைத் தரும் பைரவர் திகம்பரராக இருந்தாலும் கூட அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தரக்கூடிய ஆற்றல் படைத்தவர். அதனால் தான் அந்த காலத்தில் அரசர்கள் தங்களுடைய கஜானா அறையில் பைரவரை பிரதிஷ்டை செய்தனர். செல்வத்தை ஆகர்ஷணம் செய்து அளிப்பவர் என்பதால் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் என்பார்கள். சொர்ண அட்சய பாத்திரத்தை ஏந்தி இருப்பவர். சகல சித்திகளையும் அருள்பவர். பொன்னிறமாக பிரகாசிக்கும் ஸ்வர்ணா என்கின்ற ஸ்வர்ண பைரவியை மடிமீது நிறுத்திக் கொண்டவர். இவரை வணங்கினால் செல்வங்கள் பெறலாம். வறுமை இல்லாத வாழ்க்கையைப் பெறலாம் என்பார்கள்.

29.விபத்துகளை நீக்குபவர் பைரவர்

விபத்து என்பது திடீர் ஆபத்துக்கள். அதை எதிர்பார்க்க முடியாது. அந்த ஆபத்துக்களை தீர்ப்பவர் பைரவர். சாலைகளில் வருகின்ற ஆபத்தை நீக்குபவர் என்பதால் இரவு பயணம் செய்கின்றவர்கள் இவரை வழிபட்டு செல்கின்றார்கள். தேய்பிறை அஷ்டமியில் இவரை வழிபட்டால் காணாமல் போன பொருட்களை திரும்பப் பெறலாம் என்ற நம்பிக்கையும், வியாபாரம் தொழில் லாபகரமாக இருக்கும் என்கிற நம்பிக்கையும் இருக்கிறது.

சில பைரவர் கோயில்களில் தந்திர பூஜைகளும் செய்யப்படும். சீர்காழியில் உள்ள சட்டநாதரும், திருவெண்காடு தலத்தில் கோலோச்சும் ஸ்ரீஅகோர மூர்த்தியும் பைரவ அம்சம் என்று போற்றுகிறார்கள் நெல்லையப்பர் கோயிலில் அருள்புரியும் பைரவர், ஆறு கரங்களுடன் பல ஆயுதங்கள் தாங்கி, சாந்த முகத்துடன் காட்சி தருகிறார். காசியில் இருக்கும் அதே அமைப்பில் ஈரோடு அருகே அவல்பூந்துறை அருகே ராட்டை சுற்றிப் பாளையம் என்ற பகுதியில், கால பைரவர் கோயில் உள்ளது. இதனை மக்கள் தென்னகத்து காசி என்றே அழைக்கிறார்கள்.

இந்த பைரவர் கோயிலில் 39 அடி உயரமும், 18 அடி அகலமும் கொண்ட பிரமாண்ட பைரவர் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார். உடுக்கை, வேல், சூலம், அட்சயபாத்திரம் தாங்கி, தனது வாகனமான நாயுடன் அருள் பாலிக்கிறார். ‘உலகிலேயே மிக உயரமான பைரவர் சிலை’ இது. காஞ்சிக்கு அருகில் பிரம்ம தேவர் வழிபட்ட பைரவர் கோயில் உள்ளது. உருத்திரமேரூருக்கு அருகில் உள்ள சில மலைகளிலும், திருக்கழுகுன்றத்துக்கு அருகில் உள்ள செம்பாக்கம் மலை மீதும் பைரவருக்கு சந்நதிகள் இருக்கின்றன.

30.என்ன மலர்கள்? என்ன நிவேதனம்?

பெரும்பாலும் பைரவருக்குரிய வழிபாட்டு நேரம் நள்ளிரவாகும். தூக்கத்தை விட்டு இவரை வழிபாடு செய்தால் துக்கம் விட்டு போகும். பைரவருக்குப் பிடித்த புஷ்பங்கள் தாமரை பூ மாலை, வில்வ மாலை, தும்பைப் பூ மாலை, சந்தன மாலை, செவ்வரளி, மஞ்சள் நிற மலர்கள், மற்றும் வாசனை மலர்கள். பல்வேறு விதமான வாசனை திரவியங்களான புனுகு, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ இவற்றையெல்லாம் சேர்த்து சந்தனக் காப்பு செய்வது விசேஷமான பலனைத் தரும்.

பால், தேன், பன்னீர், அபிஷேகம் சிறப்பான அபிஷேகங்கள் ஆகும். நிவேதனமாக சக்கரைப் பொங்கல், தயிர்சாதம், தேன், செவ்வாழை, வெல்ல பாயசம், அவல் பாயசம், நெய்யில் சுடப்பட்ட உளுந்து வடை, பால் மற்றும் பல்வேறு விதமான பழ வகைகளை வைத்து வழிபடலாம். முறையான பூஜை செய்ய வேண்டும் என்பது கூட இரண்டாம் பட்சம் தான் ஆபத்து வருகின்ற நேரத்தில் இவரை அழைத்தால் ஓடோடி வருவார். ஆனால் சிரத்தையோடு அழைக்க வேண்டும்.

The post முத்துக்கள் முப்பது: கால(ன்) பயம் நீக்கி ஆயுள் அதிகரிக்கும் கால பைரவர் appeared first on Dinakaran.

Tags : Kumkum Anmikam S. Gokulachari ,
× RELATED சுக்கிரன் ராசியில், குரு சுகத்தைத் தருவாரா..?