×

தூய்மை பணியாளர்களுக்காக மாநில அளவிலான ஆணையம் உருவாக்க வேண்டும்

*கோவையில் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் பேட்டி

கோவை : கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தூய்மை பணியாளர்களுக்கான நல வாரிய பணிகள் மற்றும் மறுவாழ்வு பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆய்வு கூட்டத்திற்கு பிறகு வெங்கடேசன் நிருபர்களிடம் கூறியதாவது: ஒரு வார காலமாக கோவை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் முடிவுக்கு வந்துள்ளது. இங்கு சம்பள விஷயத்தில் சில குழப்பங்கள் உள்ளது. மாநில குறைந்தபட்ச ஊதியம் தான் கொடுக்க வேண்டும் என்று சொல்லி அரசாங்கம் தெரிவித்து நடைமுறையில் உள்ள நிலையில் மற்றொரு அரசாணையில் தமிழ்நாட்டில் அந்தந்த மாவட்ட கலெக்டர் ஊதியத்தை நிர்ணயம் செய்யலாம் என்பதும் உள்ளது. பொதுப்பணித்துறையினர் ஒரு ஊதியத்தை நிர்ணயிப்பார்கள். தமிழ்நாடு அரசு இந்த ஊதியங்களில் எந்த ஊதியம் குறைவாக உள்ளதோ அதனை கொடுக்கலாம் என தெரிவித்ததால் அதிகாரிகள் குழம்பி உள்ளனர். இது போன்ற குழப்பங்கள் கோவையில் மட்டும்தான் இருக்கிறது. மற்ற மாவட்டங்களில் இல்லை.

பொதுவாக ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் இருக்கும். அதேபோல் மத்திய அரசிடமும் ஊதியம் நிர்ணயம் இருக்கும். எந்த ஊதியம் அதிகமாக உள்ளதோ, அதனை பின்பற்றும்படி ஒன்றிய அரசு தெரிவிக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் இது அப்படியே மாறுபட்டு உள்ளது. எது குறைவாக உள்ளது அதனை தர வேண்டும் என்று கூறுகின்றனர்.

எனவே, அரசாணையை தமிழ்நாடு அரசாங்கம் திரும்ப பெற வேண்டும். மேலும், எந்த ஊதியம் அதிகமாக உள்ளதோ அதனை தமிழ்நாடு அரசாங்கம் வழங்க வேண்டும் என ஆணையத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால் இந்த வேலையை பொறுத்தவரை வேறு யாராலும் செய்ய முடியாது. கொரோனா காலத்திலும் தூய்மை பணியாளர்களின் பணியை யாராலும் மறக்க முடியாது. எனவே தமிழ்நாடு அரசு தற்போது உள்ள அரசாணையை மறுபரிசீலனை செய்து எந்த ஊதியம் அதிகமாக உள்ளதோ அதனை வழங்க வேண்டும்.

பி.எப் தொகையை ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன். தற்போது புதிதாக வந்துள்ள கான்ட்ராக்டர் அந்த 648 ரூபாய் தொகையை தருவதாக தெரிவித்துள்ளார். அதேசமயம் பழைய மாவட்ட கலெக்டர் அறிவித்த 715 ரூபாயை முடிவு செய்தால் அந்தத் தொகையை தர வேண்டும். மேலும், ஆணையம் சார்பில் மூன்று முக்கியமான கோரிக்கைகள் இருக்கிறது. காண்ட்ராக்ட் சிஸ்டத்தையே ஒழிக்க வேண்டும். இந்த காண்ட்ராக்ட் சிஸ்டம் இருப்பதால் தான் தொழிலாளர்களுக்கு சரியாக சம்பளம் இருப்பதில்லை.

விடுமுறை அளிப்பதில்லை. தனிப்பட்ட முறையில் இடமாற்றம் அளிப்பது போன்ற செயல்கள் செய்யப்படுகிறார்கள். அவர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்றே தெரிவதில்லை. எனவே இந்த கான்ட்ராக்ட் சிஸ்டத்திற்கு பதிலாக கர்நாடக பின்பற்றப்படும் டிஎஸ்பி என்ற மாவட்ட பேமென்ட் சிஸ்டம் அல்லது ஆந்திராவில் பின்பற்றப்படும் கான்ட்ராக்ட்ரல் ஒர்க்கர் கார்ப்பரேஷன் என்ற முறையை பின்பற்றலாம். மேலும், தூய்மை பணியாளர்களுக்காக தேசிய அளவிலான ஆணையம் இருக்கும் போது, மாநில அளவிலான ஆணையத்தை உருவாக்க வேண்டும் என்பதை கோரிக்கையாக வைக்கிறோம்.

வெள்ளலூர் குப்பை கிடங்கில் இயந்திரத்திற்குள் சிக்கி படுகாயம் அடைந்துள்ள நபரை நேரடியாக சென்று பார்த்தேன். காண்ட்ராக்டர் பாதிக்கப்பட்டவருக்கு இன்சூரன்ஸ் போடவில்லை என்றால் முழு செலவையும் அந்த காண்ட்ராக்டர் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர் குணமடைந்து திரும்புவதற்கு குறைந்தது இரண்டு வருடங்கள் ஆகும் என மருத்துவர்கள் கூறி உள்ளனர். அந்த இரண்டு வருடத்திற்கான அனைத்து செலவுகளையும் காண்ட்ராக்டர் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும், பாதிக்கப்பட்டவருக்கு ஏதேனும் அரசு வேலை வழங்குவது குறித்தும் மாவட்ட கலெக்டரிடம் பேசி உள்ளேன். மேலும், அந்த சம்பவத்தை எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின் கீழ் கொண்டு வந்தால் அவருக்கு அரசு வேலை கிடைப்பதில் வாய்ப்பு இருக்கிறது.

வெள்ளலூர் குப்பை கிடங்கு இடத்தை பராமரித்து வருபவர்கள் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாநகராட்சி நிர்வாகம் சார்பில் குப்பைகளை அகற்ற எந்தவித அறிவிப்பும் வழங்கப்படாத நிலையில் அவர்கள் அதனை செய்ததாகவும் தகவல்கள் வருகிறது. அது குறித்து மாநகராட்சி கமிஷனரிடம் விசாரிக்கும்படி அறிவுறுத்தி உள்ளேன். சிவகாமியின் சம்பவத்திற்கும் எஸ்.சி., எஸ்.டி., சட்டத்தில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளேன்.

அவ்வாறு செய்தால் உடனடியாக நிவாரணத் தொகை ரூ.6 லட்சம் வழங்கப்படும். தமிழ்நாடு அரசு தற்போது ஒரு ஆணை பிறப்பித்துள்ளது. அதில், தூய்மை பணியாளர்கள் வேலையை விட்டு நீங்கினாலோ அல்லது இறந்து விட்டாலோ அந்த இடத்தை நிரப்புவதற்கு தனியாரிடம் ஒப்படைத்துள்ளது. அதனை நாங்களே எதிர்த்து வருகிறோம். மேலும், இந்த பணிகளை 99 சதவீதம் எஸ்.சி. மக்கள் தான் செய்கின்றனர். இந்த ஆணையால் ஒரு எஸ்.சி. மக்களின் வேலையை பறிப்பதாக அர்த்தமாகி விடுகிறது. அரசு மருத்துவமனை மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தூய்மை பணியாளர்களின் பணிநேரம் குறித்தான கேள்விக்கு, 7 மணியிலிருந்து இரண்டு மணி நேரம் வரை தான் அக்ரிமெண்ட்டிலேயே இருக்கிறது.

ஆனால், நான்கு மணி வரை வேலை செய்வதாக தகவல்கள் வருகிறது. அவ்வாறு செய்ய விடக்கூடாது என மருத்துவமனை முதல்வர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தூய்மை பணியாளர்கள் அனைவரும் கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்துதான் வேலை செய்ய வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறோம். பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தாமல் வேலை செய்தார்கள் என்று தகவல்கள் வந்தால் அந்த தூய்மை பணியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேசமயம் அவர்களுக்கு வழங்கப்படும் கையுறைகளை முழு நேரமும் அணிந்து கொண்டு பணி செய்ய முடியாது. அதற்கு மாற்றாக ஏதேனும் வேறு துணைகளில் அது போன்ற பாதுகாப்பு உபகரணங்களை தயார் செய்வது குறித்து பேசி வருகிறோம். பணியாளர்களை கணக்கு காண்பிக்கும் போது அதிகமாக கணக்கை காண்பிக்கப்படுகின்றனர். ஆனால், களத்தில் குறைவான ஆட்களே இருக்கின்றனர். ஆதாரத்துடன் புகார்கள் இருந்தால் நடவடிக்கை எடுப்பதற்கு பரிந்துரைக்கப்படும். 2021- 2022 வரைக்கும் நான் பொறுப்பில் இருந்தவரை தமிழகத்திலிருந்து ஒரு புகார் கூட வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

பாலியல் புகார்

தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் கூறும்போது, ‘‘கோவை அரசு மருத்துவமனையில் பாலியல் தொல்லை இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் மருத்துவமனை முதல்வரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது மருத்துவமனை முதல்வர் அங்கு பணிபுரியும் பணியாளர்கள் சிலர் மீது குறைகளை தெரிவித்தார். அங்கு ஒரு மேனேஜர் மேல் தான் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே, அவரை நீக்க வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் அறிவுறுத்தி உள்ளேன்’’ என்றார்.

The post தூய்மை பணியாளர்களுக்காக மாநில அளவிலான ஆணையம் உருவாக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : National Cleanliness Workers Commission ,Coimbatore ,Dinakaran ,
× RELATED கோவை அருகே யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு..!!