×

சென்னையில் ரூ.10,150 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: உத்தரகாண்ட் முதல்வர் முன்னிலையில் கையெழுத்து

சென்னை: சுகாதாரம், எரிசக்தி துறைகள் தொடர்பான பல்வேறு தொழில் குழுக்களுடன் ரூ.10,150 கோடிக்கு அதிகமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி முன்னிலையில் சென்னையில் கையெழுத்தானது. உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் வரும் டிசம்பர் மாதம் உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. மாநாடு தொடர்பாக உத்தரகாண்ட் மாநிலம் சார்பில் சென்னையில் முதலீட்டாளர்கள் சந்திப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுற்றுலா, சுகாதாரம், கல்வி, மருந்து மற்றும் விவசாயம் உள்ளிட்ட துறைகளின் முதலீட்டாளர்களுடன் அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி கலந்துரையாடினார். உத்தரகாண்ட் அமைச்சர்கள் சத்பால் மகராஜ், சவுரப் பஹுகுணா, முதல்வரின் தனிச்செயலாளர் மீனாட்சி சுந்தரம் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் நிருபர்களை சந்தித்த முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறியதாவது : சுகாதாரம், மருந்து மற்றும் எரிசக்தி துறைகளில் முதலீடுகளை ஈர்க்க கவனம் செலுத்தப்படுகிறது. மேலும் அரசு சார்பில் ஏற்கனவே லண்டன், பர்மிங்ஹாம், துபாய், அபுதாபி உள்ளிட்ட நாடுகளிலும் டெல்லி உள்ளிட்ட நகரங்களிலும் முதலீட்டாளர்கள் சந்திப்புகள் நடைபெற்றுள்ளது. இவற்றின் மூலம் இதுவரை ரூ.54,550 கோடி மதிப்பிலான முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் அரசு கையெழுத்திட்டுள்ளது, 2.5 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்ய உத்தரகாண்ட் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும் உத்தரகாண்ட் அரசானது அனைத்து மாநிலங்களுடன் தொடர்ப்பில் உள்ளது.

முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. துபாய் மற்றும் அபுதாபியில் ஆயிரக்கணக்கான கோடி மதிப்பிலான முதலீடுகள் தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இது தவிர பல முன்மொழிவுகளும் பெறப்பட்டுள்ளன. மற்ற நகரங்களிலும் முதலீட்டாளர்களுடன் உரையாடல்கள் மற்றும் ரோட்ஷோக்கள் நடத்தப்படும். சுகாதாரம், எரிசக்தி துறைகள் தொடர்பான பல்வேறு தொழில் குழுக்களுடன் ரூ.10,150 கோடிக்கு அதிகமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.தமிழ்நாட்டிற்கும் உத்தரகாண்டிற்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உள்ளது. தென் இந்தியாவின் புனித தலமாக ராமேஸ்வரம் உள்ளது. அதேபோல் வட இந்தியாவின் புனித தலமாக உத்தரகாண்ட் ஹரித்துவார், ரிஷிகேஷ் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே, ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மூலம் ரூ.1000 கோடி, சுகாதாரத் துறையில் ரூ.1000 கோடி, உயர்கல்வியில் முதலீடு செய்ய எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்துடன் ரூ.600 கோடி, ஹெலிபோர்ட் மற்றும் எரிசக்தி துறையில் ரெபெக்ஸ் குழுமத்துடன் ரூ.500 கோடி, அரோமா பூங்காவிற்காக என்ப்லா மூவி குழுமத்துடன் ரூ.250 கோடி, சுற்றுலாத் துறையில் முதலீடு செய்வதற்காக மில்டெக்ஸ் குழுமத்துடன் ரூ.100 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலில் கையெழுத்தானது. அதனை தொடர்ந்து சர்வோதயா குழும மருத்துவமனைகளுடன் ரூ.1,000 கோடி, அப்போலோ மருத்துவமனையுடன் ரூ.500 கோடி, கிராப்ட் ஸ்மித் இந்தியாவுடன் ரூ.1,000 கோடி, இன்பினிட்டி குளோபல் நிறுவனத்துடன் ரூ.4,000 கோடி, டிபிசிஐயுடன் ரூ.200 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post சென்னையில் ரூ.10,150 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: உத்தரகாண்ட் முதல்வர் முன்னிலையில் கையெழுத்து appeared first on Dinakaran.

Tags : MoUs ,Chennai ,Uttarakhand ,Chief Minister ,Dinakaran ,
× RELATED பிரபல கல்வி நிறுவனங்களின் நுழைவுத்...