×

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய ரவுடியை ஜாமீனில் எடுத்த பாஜ மாவட்ட செயலாளர்: கமலாலயம் மீது குண்டு வீசிய வழக்கில் 2 நாட்களுக்கு முன் வெளியே எடுத்தது அம்பலம்

சென்னை: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத்தை, வேறொரு வழக்கில் திருவாரூர் பாஜ மாவட்ட வக்கீல் அணி செயலாளர் ஜாமீனில் எடுத்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தின் முன்பு உள்ள பகுதியில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி பைக்கில் சென்ற ரவுடி கருக்கா வினோத், திடீரென்று பைக்கை நிறுத்தி விட்டு சாலையின் இடதுபக்கம் நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான காம்பவுண்ட் சுவரை ஒட்டிய நடை பாதையில் நின்று கொண்டு அதாவது சர்தார்படேல் சாலையில் இடது பக்கம் திரும்பும் இடத்தில் நின்று ஆளுநர் மாளிகையை நோக்கி 2 குண்டுகளை வீசியுள்ளார்.

அந்த குண்டுகள் சாலையின் நடுவில் விழுந்து வெடித்தது. பின்னர் மேலும் 2 பெட்ரோல் குண்டுகளை வீச முயன்றான். இதைப் பார்த்த போலீசார், அவனை பாய்ந்து சென்று பிடித்தனர். அவனிடம் இருந்த 2 பெட்ரோல் குண்டுகளை பறிமுதல் செய்தனர். இந்தநிலையில், அவன் இரு நாட்களுக்கு முன்னர்தான் ஜாமீனில் வெளியில் வந்துள்ளான் என்ற தகவல் தெரியவந்தது. அதாவது கடந்த ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி நீட் பிரச்னைக்காக பாஜ மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தின் மீது இதே கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசினான். அதில் கைது செய்யப்பட்டு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறையில் உள்ளான். அவனை யாரும் ஜாமீனில் எடுக்காமல் இருந்தனர்.

இந்தநிலையில் பாஜ அலுவலகத்தின் மீது வெடிகுண்டு வீசிய வழக்கில், திருவாரூர் மாவட்ட பாஜ வக்கீல் அணி செயலாளர் முத்தமிழ்செல்வக்குமார், செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து ஜாமீனில் கருக்கா வினோத்தை வெளியில் எடுத்துள்ளார். அந்த வழக்கில் ஜாமீனில் வெளியில் வந்த 2வது நாளில் ஆளுநர் மாளிகை மீது வெடிகுண்டுகளை அவன் வீசியுள்ளான். இதனால், கருக்கா வினோத் ஜாமீனில் வெளியில் வந்த விவகாரத்தில் பல உண்மைகள் மறைந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் அவனை காவலில் எடுத்து விசாரணை நடத்தினால், அவனுக்கு தூண்டுதலாக யாராவது தலைவர்கள் உள்ளார்களா என்பது தெரியவரும் என்று கூறப்படுகிறது.

மேலும், இந்த சம்பவத்தில் பலர் வந்து தாக்குதல் நடத்த முயன்றதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. ஒருவர் மட்டுமே வந்ததற்கான ஆதாரம் உள்ளது என்று டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். இந்த தகவலை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோரும், ஆளுநர் ரவியிடம் நேரில் விளக்கியுள்ளார். அதன்பின்னரும் அவர் கருத்து தெரிவித்துள்ளதால், வெடிகுண்டு விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இது அரசியல் களத்தை சூடாக்கியுள்ளது. குற்றவாளி கருக்கா வினோத்தை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

The post ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய ரவுடியை ஜாமீனில் எடுத்த பாஜ மாவட்ட செயலாளர்: கமலாலயம் மீது குண்டு வீசிய வழக்கில் 2 நாட்களுக்கு முன் வெளியே எடுத்தது அம்பலம் appeared first on Dinakaran.

Tags : Baja district ,Governor's House ,Ambalam ,Kamalalayam ,Chennai ,Rowdy Karukka Vinod ,Tiruvarur Baja district ,Dinakaran ,
× RELATED அண்ணாமலை மீது கிரிமினல் வழக்குபதிவு...