×

ஸ்ரீமாதா முதல் குருவிந்த மணிச்ரேணீ கநத் கோடீர மண்டிதா வரை

ஆதி சக்திக்கு ஆயிரம் நாமங்கள்

லலிதா சஹஸ்ரநாமங்களின் உரை

ரம்யா வாசுதேவன் & கிருஷ்ணா

நாம் லலிதா ஸஹஸ்ரநாமத்தில் ஒவ்வொரு நாமத்தினுடைய பொருளையும் பார்த்துக் கொண்டே வருகின்றோம். இப்போது மீண்டும் இதுவரை பார்த்த நாமங்களை நமக்குள் தொகுத்துக் கொள்வோமா! ஏனெனில், லலிதா சஹஸ்ரநாமம் ஒரு அழகான அலைவரிசையில் வசின்யாதி வாக்தேவதைகளால் வெளிப்பட்டிருக்கின்றன. இந்த நாமங்களை பாராயணம் செய்தலே பிரம்ம வித்யைக்கு ஈடானது. அதனுடைய பொருளையும் தத்துவார்த்தத்தையும் அறிதல் என்பது நம்மை இன்னும் பல படிகள் மேலே செலுத்தும்.

ஹயக்ரீவர் அகத்தியருக்கும், லலிதையான அம்பாள் வசின்யாதி வாக்தேவதைகளுக்கும் இந்த லலிதா சஹஸ்ரநாமத்தை அருளியதைப் பார்த்தோம். இப்போது நாம் இதற்கு முன் உள்ள நாமங்களை சுருக்கமாக பார்த்து புரிந்து கொள்வோம். பிறகு அடுத்தடுத்த நாமங்களை பார்ப்போம்.

1. ஸ்ரீமாதா

ஸ்ரீமாதா என்பதற்குப் பொருள் அன்னை, அம்மா என்பதாகும். இதில் ஸ்ரீமாதா என்றால் சிறப்பு வாய்ந்த அன்னை என்பதாகும். ஸ்ரீமாதா என்றால் சிருஷ்டி கர்த்தா என்று தொடங்கி ஆயிரம் ரகசிய உட்பொருட்கள் நிறைந்துள்ளன. சரி, இதிலிருந்து நான் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? நாம் சொல்லிக் கொண்டிருக்கின்ற இந்த நான் என்பதற்கு இங்கு ஒன்றும் வேலையில்லை. என்னால் அதாவது இந்த நான் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் அந்த அகங்காரத்தால் இங்கு எதையும் உருவாக்க முடியாது.

அது தேவையில்லாது எழுந்து ‘நான் உருவாக்குகிறேன்’. என்னால் இது செய்யப்பட்டது என்று உறுதியாக நம்புகின்றது. நீங்கள் காரியமாற்றுவதுபோல, படைப்பை உருவாக்குவதுபோல ஒரு பிரமையை, இல்லாத ஒரு விஷயத்தை இந்த நான் எனும் அகங்காரம் உருவாக்கி வைத்துள்ளதை நீங்கள் அறிவீர்கள். எங்கு நீங்கள் சிந்திக்கிறீர்களோ அங்கு படைப்பின் ரகசியத்தை நீங்களே மறைத்துக் கொள்கிறீர்கள். அந்த மிகச் சிறிய எண்ணத்தின் அளவேயான படைப்பை மட்டுமே காட்டுகின்றது.

எந்த இடத்தில் எண்ணங்களெல்லாம் ஒழிந்துபோய் மனதை தாண்டிய இடத்தில் நிற்கும்போது உண்மையான படைப்பு நிகழ்ந்து கொண்டேயிருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். அதைச் சொல்லால், எண்ணத்தால் தொடும்போது ஆதிப் படைப்பு மறைகின்றது. அந்த படைப்பை நிகழ்த்திக் கொண்டேயிருக்கும் அந்த மகா சக்திக்குத்தான் ஸ்ரீமாதா என்று பெயர்.

2. ஸ்ரீமஹாராக்ஞீ

லலிதாம்பிகையின் முதல் நாமமான ஸ்ரீமாத்ரே என்பது படைத்தல் என்கிற சிருஷ்டியை குறிக்கும். எது ஒன்று தன்னிலிருந்து எல்லாவற்றையும் சிருஷ்டித்ததோ அதுவே எல்லாவற்றையும் காத்து அருள்கின்றது. அப்படிப்பட்ட காத்தல் எனும் தொழிலைச் செய்பவளான பேரரசிக்கே  மஹாராக்ஞீ என்று பெயர். ராக்ஞீ என்றால் அரசி என்று பெயர். மஹாராக்ஞீ என்றால் பேரரசி என்று பெயர்.

ஸ்ரீமாத்ரே எனும் திருநாமத்தில் சிருஷ்டி என்கிற விஷயத்தைப் பார்த்தோம். இன்னொரு கோணத்தில் சிருஷ்டி என்பது எண்ணத்தால் தொடப்படாத விஷயமாக நிகழ்வது என்றும் பார்த்தோம். இந்தக் கோணத்தில் சிருஷ்டி என்பது ஞான ஸ்பூர்த்தி என்று ஞானிகள் சொல்கிறார்கள். வெறுமே மண், மலை, காடு, உயிர்கள் மட்டுமல்ல. இந்தப் பிரபஞ்சம் எந்த சத்திய வஸ்துவான லலிதை எனும் பிரம்மத்திலிருந்து வெளிவந்ததோ அந்த மூலமே சிருஷ்டி என்கிற ஞான ஸ்பூர்த்தி.

அந்த ஸ்பூர்த்தி என்கிற உருவாக்கும் சக்திக்கே ஸ்ரீமாத்ரே என்று பெயர். இப்போது இங்கு ஸ்ரீமகாராக்ஞீ என்று சொல்லப்படுவதை எப்படி பார்க்கவேண்டுமெனில், அப்படி ஒரு ஜீவனுக்குள் உருவான ஞான ஸ்பூர்த்தியை காக்கிற சக்தியே மகாராக்ஞீ ஆகும்.

3. ஸ்ரீமத் சிம்ஹாஸனேஸ்வரி

யாரால் இந்த உலகம் சிருஷ்டி செய்யப்பட்டதோ அவள் ஸ்ரீமாதாவாகவும், அப்படி சிருஷ்டிக்கப்பட்டதை எவள் ஆள்கிறாளோ அவளே மகாராக்ஞி என்றழைக்கப்படும் மகாராணியாகவும் இருக்கிறாள். இப்போது இந்த ஸ்ரீமத் சிம்ஹாஸனேஸ்வரி என்பதற்கு ஒருவேளை ஆத்ம ஸ்தானத்தை விட்டு ஒரு ஜீவன் வெளியே மனம் என்ற ஒன்றை பற்றிக் கொண்டு, உடம்பு என்பதின் மேல் அபிமானம் கொண்டு விலகும்போது, அப்படி எந்த அகங்காரம் விலகச் செய்கிறதோ அந்த அகங்காரத்தை, அந்த நான் எனும் அகங்காரத்தை ஒரே வெட்டாக வெட்டி அழிக்கின்றாள். இப்படி வெளிப்புறமாக ஓடும் மனதை உள்முகமாக திருப்புவதோடு மட்டுமல்லாமல், வெளிப்புறத்தே ஓடச் செய்யும் சக்தியையும் வெட்டி வீழ்த்துகிறாள்.

4. சிதக்னி குண்ட ஸம்பூதா

இந்த நாமத்தில் சித் என்பது அம்பாளான பிரம்மத்தை குறிக்கின்றது. அக்னி என்பது நெருப்பை குறிக்கின்றது. குண்டம் என்பது வேள்வி நிகழும் வேள்விச் சாலை. வேள்வித்தீயை எரியூட்டி அதனுள் எல்லாவற்றையும் இட்டு நிரப்பிச் செய்யப்படும் இடம். இப்போது இங்கு ஒரு சந்தேகம் வருகின்றது. அம்பாள் என்கிற சிதக்னி தோற்றமும் மறைவும் அற்றவள். ஆனால், இந்த நாமத்தில் சம்பூதா என்கிற வார்த்தை வருகின்றது.

தோற்றமும் மறைவும் அற்றவள் தோன்றினாளா என்றாள் தோன்றவில்லை. எப்போதும் இருப்பவளே. இங்கு இந்த ஜீவனுடைய இந்திரியங்கள் வேள்வியை நிகழ்த்தி அந்த சிதக்னியை தரிசிக்கின்றார்களோ அப்போது அந்த ஜீவனுக்கு தோன்றியதையே இங்கு தோன்றுதல் என்று சொல்கிறார்கள். அப்படி தோன்றுதலையே என்று நாம் தரிசிக்கின்றோமோ. நாம் அது என்று எப்போது உணர்கின்றோமோ அதுதான் ஜெயந்தி. உற்பத்தி ஆதல்.

5. தேவகார்ய ஸமுத்யதா

இப்போது இந்த ஜீவனை மேலேற்ற வேண்டும். தன்னை அறிந்து கொள்ள வேண்டும், தன்னுடைய சொரூபத்தை தெரிந்து கொள்ள வேண்டும். இல்லையெனில், மீண்டும் மீண்டும் இந்த சம்சார சாகரத்தில் வீழ்ந்து கொண்டே இருக்க நேரிடும். அப்போதெல்லாம், அம்பிகையே தேவர்களை அதாவது இந்திராதி தேவர்கள் எனும் மூல புலன்களையும், சூட்சும புலன்களையும் அகமுகமாக்கி அந்தர்முகமான வேள்வியைத் தொடங்கி வைக்கின்றாள்.

ஏன் தொடங்கி வைக்கின்றாள் எனில், பண்டாசுரன், மகிஷாசுரன், ரக்தபீஜன், தூம்ரலோசனன் என்று பல்வேறு விதமான அரக்கர்களை அழிக்க வேண்டியே இந்த வேள்வியை தொடங்கச் சொல்கிறாள். இந்த அசுரர்கள் யாரும் வெளியில் இல்லை. அவர்கள் அனைவரும் நம்முடைய மனதை மயங்கச் செய்யும் அனைத்து உலகாயதமான விஷயங்களில் உள்ளனர்.

மனதை உள்முகமாக விடாது வெளிப்புறமாக செலுத்தியபடி இருக்கின்றனர். இதை நிறுத்துவதுதான் தேவகாரியம். இப்படி வேள்வியை தொடங்கச் செய்யும் காரியத்தையும் அவளே செய்கின்றாள். அந்த காரியத்தைத்தான் தேவகார்ய ஸமுத்யதா என்று இந்த நாமம் சொல்கின்றது.

6. உத்யத்பானு ஸஹஸ்ராபா

என்னவொரு அற்புதமான நாமம் இது. உத்யத்பானு ஸஹஸ்ராபா…. இருள் சூழ்ந்த ஓரிடத்தில், இருளெனில் அந்தகார இருள். ஜென்ம ஜென்மமாக சூழ்ந்திருந்த இருளுக்கு மத்தியில் சட்டென்று ஆயிரக்கணக்கான கிரணங்களை உடைய சூரியன் உதிப்பதுபோல் அந்த ஆத்ம ஞானம் ஒரு ஜீவனுக்குள் தோன்றுகின்றது. அதுவரை அவனிடமிருந்த அறியாமை, மாயை, துக்கம், பயம், சோகம், காமம், ஆசைகள் என்று சூழப்பட்ட அத்தனையும் கண நேரத்திற்கும் குறைவான நேரத்தில் காணாமல் போகின்றன.

எத்தனை எத்தனை ஜென்மங்கள் எடுத்து அலுத்துப்போன ஜீவனுக்கு லலிதாம்பிகையின் இந்த முதல் தரிசனம் கிடைத்தவுடன் பேரானந்த மடைகின்றான். ஆஹா… இவ்வளவு அருகில் இருந்துமா நான் இத்தனை ஜென்மங்களாக அடையாமல் விட்டு வைத்திருந்தேன் என்று ஆனந்த வெள்ளத்தில் துடித்துப் போகின்றான்.

7. சதுர்பாஹூ ஸமன்விதா

உத்யத்பனு ஸஹஸ்ராபா என்கிற நாமத்தில் அம்பாள் தன்னுடைய முதல் கிரணங்களை, தன்னுடைய சொரூபத்தை பக்தனுக்கு காட்டுகின்றாள். இங்கு சதுர்பாஹூ என்பது நான்கு கரங்களோடு அம்பாள் காட்சி தருவதை காட்டுகின்றன. இந்த சதுர்பாஹு சமன்விதா என்கிற பெயரில் உள்ள சதுர் என்பதற்கு நான்கு என்று பொருள். சமன்விதா என்பதில் இந்தந்த வழிகளில் அடைதல் என்று பொருள்படும். உதாரணமாக நான்கு என்று எடுத்துக் கொண்டால், பிரம்மத்தை கர்ம யோகம், பக்தி யோகம், யோக மார்க்கம், ஞான மார்க்கம் என்று நான்கு வழிகளில் அடையலாம்.

சைவ சித்தாந்தம் இந்த நான்கு கரங்களை வழிகளாகக் கொண்டு சரியை, கிரியை, யோகம், ஞானம் என்று சொல்கின்றது. அதேபோல் நாம் அனுபவிக்கக் கூடிய அவஸ்தைகளான ஜாக்ரத், சொப்பனம், சுஷுப்தி, துரீயம் என்று ஞான மார்க்கத்தில் இவை நான்கும் சதுர் பாஹு. அதாவது நான்கு கரங்கள். இப்படி இந்த நான்கு நிலைகளையும் கடந்து துரீயாதீதம் என்கிற ஞான நிலையிலுள்ள அம்பிகையை அடைவதற்கு வழியாகவே இந்த கரங்கள் விளங்குகின்றன. அதுவே இங்கு நாற்கரங்களாகும் என்று இந்த நாமம் விளக்குகின்றது.

8. ராக ஸ்வரூப பாசாட்யா

ஒரு ஜீவனுக்கு ஆத்ம தரிசனம் கிடைத்ததற்குப் பிறகு, விருப்பும் வெறுப்பும், ராக துவேஷங்களும் அதனினின்று விரிந்து விரிந்து பரவும் மற்ற அனைத்து விஷயங்களும் ஜீவனுடைய கட்டுப்பாட்டிற்குள் வருகின்றன. ஏனெனில், தனக்கு மேலேயுள்ள பெருஞ் சக்தியை அவன் கண்டு விடுகின்றான். இதுவரையிலும் மேலேயுள்ள ஆசை, கோபம், மோகம், காமம் உள்ளிட்ட விஷயங்கள் அனைத்தும் இப்போது இதற்கு மேலேயுள்ள அம்பிகையின் கட்டுப்பாட்டில் உள்ளதையும் ஒரு ஜீவன் அறிகின்றான்.

இன்னொரு விதமாகச் சொன்னால் நம்மிடமுள்ள விருப்பையும், வெறுப்பையும் அம்பிகையானவள் பாசமாகவும், அங்குசமாகவும் வாங்கி தன் கையில் தரித்துக் கொண்டிருக்கின்றாள். ராகஸ்வரூப பாசாட்யா என்கிற இந்த நாமத்திலுள்ள பாசம் என்பதிலிருந்துதான் அஸ்வாரூடா என்கிற அம்பிகை ஆவிர்பவிக்கின்றாள். அஸ்வம் என்றால் குதிரை என்று பொருள்.

அம்பிகை கையில் இருக்கும் அங்குசத்திலிருந்துதான் சம்பத்கரி என்கிற யானை மீதேறி வரும் அம்பிகை ஆவிர்பவிக்கின்றாள். அஸ்வாரூடா அம்பிகையின் குதிரைப்படைத் தலைவியாகவும், சம்பத்கரி யானைப்படைத் தலைவியாகவும் விளங்குகின்றாள். நம்முடைய ஆசையும், விருப்பமும் சரியான அலைவரிசையில் கட்டுப்பாட்டில் இருந்தால் அந்தச் சக்தியே அஸ்வாரூடா. மனம் முற்றிலும் அம்பிகையின் ஆளுகைக்குள் சென்று விடும்.

9. க்ரோதா காராங்கு ஸோஜ்வாலா

கோப, குரோதங்கள் என்பது உள்ளே அழுத்தி பெரும் யானை போன்று அமர்ந்திருக்கும். இப்படி பெரும் கனத்தோடு உள்ளே இருப்பதால் யானையாகவும் சொல்லப்படுகின்றது. இந்த குரோதம் எனும் யானையை அடக்குவதற்காகவே அங்குசம் உள்ளது. எனவே, குரோதத்தின் உருவமான அங்குசத்தை தரிப்பதால் ஒளியோடு விளங்குகிறாள் என்று நேரடியான பொருளையே இந்த நாமம் கூறுகின்றது.

மனம் தான் எதை நாடிச் செல்கிறோமோ அல்லது அந்தப் பொருளை அடைய முடியாவிட்டாலோ ஏற்படும் சித்த விருத்திக்கு வெறுப்பு என்று பெயர். இந்தக் குரோதமே அங்குசமாக வடிவெடுத்து ஆணவத்தின் வெளிப்பாடான குரோதத்தை அடக்குகின்றது. இந்த குரோதம் என்னும் விஷயத்தை நமக்கு உண்மையில் கையாளத் தெரியாது. அதாவது இந்த அகங்காரத்திற்கு தெரியாது. எனவே, அந்த குரோதத்தை எப்படி கையாளுவது என்பதை அம்பாளிடமே விட்டுவிட வேண்டும். அப்படி விட்டுவிட்டால் அவளே அந்த அங்குசம் என்கிற சக்தியைக் கொண்டு அடக்கி விடுவாள்.

10. மனோரூபேஷு கோதண்டா

நாம் ஸ்தூல சரீரத்தை இந்த ஆத்மா விட்டால் கூட, இந்த ஜீவாத்மாவிற்கு இந்த ஸ்தூல சரீரம் போனால் கூட, சூட்சும சரீரம் அப்படியே இருக்கும். அந்த சூட்சும சரீரத்தின் மூலமாக இன்னொரு ஜென்மா எடுக்கின்றது. அதன் மூலம் தொடர்ந்து கர்மாக்களை தொடர்ச்சியாக உற்பத்தி செய்தபடி இருக்கின்றது. இப்போது மீண்டும் இடையறாத சுழலில் சுழற்சியில் மாட்டிக் கொண்டு விடுகின்றது. இவற்றிற்கு அனைத்துமான காரணமே மனம்தான். இந்த மனம் மீண்டும் மீண்டும் சூட்சுமமாக தன்னை சரீரத்தோடு தொடர்பு படுத்திக்கொண்டு மாயையில் சிக்கிக் கொள்கின்றது.

இப்போது இந்த ஜீவனுக்கு என்ன செய்வதென்று தெரியாதபோது அம்பிகையானவள் இந்த மனதை எடுத்துக் கொள்கிறாள். இப்படி எடுத்துக் கொள்வதாலேயே அவளுக்கு மனோ ரூபேஷு கோதண்டா என்கிற நாமம் உள்ளது. மனம் என்கிற கரும்பு வில்லை ஏந்தியவள் என்கிற பொருளில் இந்த நாமம் அமைந்துள்ளது. நம்மிடம் இந்த மனம் இருக்கும் வரையில் கரும்பாக மனம் இனிக்காது.

ஆனால், அதே மனதை அவள் ஏந்தினால் மனம் கரும்பாக மாறுகின்றது. கரும்புச் சாறுபோல அதற்குள் அம்பிகையின் அருள் எனும் கருணைச் சாறு ஊறி ஊறித் தளும்புகின்றது. அதனால், இந்த மனதை எவ்வித சந்தேகமும் இல்லாமல் அம்பிகையின் கையில் அளிக்கின்ற தெளிவு நமக்கு வரவேண்டும்.

11. பஞ்ச தன்மாத்ர ஸாயகா

இப்போது இந்த மனதிற்கும் ஆதாரமாக உள்ளவை பஞ்ச தன்மாத்திரைகள். இந்த பஞ்ச தன்மாத்திரைகளுக்கும் ஆதாரமாக இருப்பது பஞ்ச பூதங்களாகும். இந்த பஞ்ச பூதங்களே மனதில் பஞ்ச தன்மாத்திரை என்று சூட்சும வடிவமாக உள்ளது. இந்த பஞ்ச தன்மாத்திரைகளையும் அம்பிகை தன் கரங்களில் பாணங்களாக ஏந்தியிருக்கின்றாள் என்று சொன்னோம் அல்லவா? அவை என்னென்ன என்று பார்ப்போமா?

அம்பாள் தன்னுடைய வலது மேல் கரத்தில் ஐந்து விதமான புஷ்பங்களை அம்புகளாக வைத்துக் கொண்டிருக்கிறாள். அதாவது தாமரை, செங்கழுநீர், செவ்வல்லி, செவ்வாம்பல், மாம்பூ போன்றவை ஆகும். இந்த பாணங்கள் உணர்த்தும் விஷயம் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இந்த பாணங்களின் சூட்சும உருவானது வெளியில் நாம் பார்க்கும் பஞ்ச பூதங்களிலிருந்து வந்தவை ஆகும்.

முதல் பூதமான ஆகாசமானது சப்தம் மற்றும் ஒலியைக் குறிக்கின்றது. இரண்டாவது வாயு. தொடு உணர்ச்சியை குறிப்பது. மூன்றாவதான அக்னியானது உருவம் நிறம் எனும் பார்த்தலைக் குறிப்பது. நான்காவதான நீர் என்பது சுவையை குறிக்கின்றது. ஐந்தாவதான பிருத்வீ என்கிற பூமியானது மணம் மற்றும் கந்தம் என்பதை குறிக்கின்றது.

12. நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத் பிரம்மாண்ட மண்டலா

இந்த நாமத்திற்குப் பிறகு அம்பிகையின் சகுண ரூபத்தை அதாவது கேசத்திலிருந்து பாதம் வரை வர்ணிக்கப்போகின்றது. இதுவரை தான் பார்த்துக் கொண்டிருந்த அந்த சைதன்யம் தனக்குள் மட்டுமல்லாமல், மொத்தப் பிரபஞ்சம் முழுவதும் அதுதான் நிறைந்திருக்கிறது என்கிற உண்மை புலப்படுகின்றது. நான் என்னை அறிகின்றேன் என்று தொடங்கிய இடம் இப்போது என்னை அறிவது என்பதும் போய், அவளே அனைத்துமாகவும் நிறைந்திருப்பது புரிகின்றது.

இந்த நாமத்தை கவனியுங்கள். மஜ்ஜத் பிரம்மாண்ட மண்டலா. இந்த பிரம்மாண்டத்தைச் சொல்லும்போது பூமி, வானம், சூரியன், சந்திரன் மற்ற நட்சத்திரங்கள் பால்வெளி மண்டலம் என்கிறோம். இதையே அண்டம் என்கிறோம். இதுபோன்ற பல கோடி அண்டங்கள் சேர்ந்தது அகிலாண்டம். இந்த மொத்தத்தையும் அவளே நிரப்பிக் கொண்டிருக்கிறாள்.

13. சம்பகா சோக புன்னாக ஸௌகந்திக லஸத்கசா

சிதக்னி குண்டத்திலிருந்து வரும்போது முதலில் தேவர்கள் பார்த்தது அம்பிகையின் அந்த கேசத்தைத்தான். கேச பாரத்தைத்தான். முதலில் முடிதான் தெரிகின்றது. அதில் அம்பிகை எதைச் சூடியிருக்கின்றாள் எனில், சம்பகம் (செண்பகம்), அசோகம் (மருதாணி), புன்னை, செங்கழுநீர் பூ என்று நான்கு மலர்களை சூடியிருக்கின்றாள்.

சம்பகம் என்றால் மகிழ்ச்சி. இப்போது இதற்கு அடுத்த நாமமே இந்த மகிழ்ச்சி வலியோடு இல்லை என்பதை நிரூபிப்பதுபோல் வருகின்றது. அதாவது அசோகம். சோகம் என்பது வருத்தம், அசோகம் எனில் சோகக் கலப்பே இல்லாத ஆனந்தம். புன்னாக மலர் என்பதின் அர்த்தம் பாவ புண்ணியங்களினால் வரும் ஆனந்தமும் அன்று. புன்னாகம் என்பதில் வரும் சந்தோஷம் இவை எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது.

அடுத்ததாக சௌகந்தி என்பது குறிப்பிடுவது என்னவெனில், இந்த ஜீவன் தான் அனுபவித்த இந்த பேரின்பமானது இவனிலிருந்து எல்லோருக்கும் சென்று அவர்களை அணைத்துக் கொள்ளும். தெறித்துப் பரவும் ஒளியைப் போன்றது. இவனை மட்டுமல்லாது சுற்றியுள்ளோரை ஜொலிக்க வைப்பது. (radiance and fragrance). இவனிலிருந்து பெருகும் மணம் கொண்டது.

14. குருவிந்த மணிச்ரேணீ கநத் கோடீர மண்டிதா

இந்த நாமமானது அம்பிகையின் கிரீடத்தை குறிக்கின்றது. ஆபரணங்களின் மேலான ஆபரணம் கிரீடம். மகுடம். இந்த கிரீடத்திற்கு மேல் இன்னொரு ஆபரணம் கிடையாது. குருவிந்தம் என்றால் நவரத்தினத்தில் பத்மராகம் என்கிற ரத்னம் இருக்கிறதே அதற்குத்தான் குருவிந்தம் என்றழைக்கின்றோம். இந்த ரத்னம் சிவப்பு நிறமாக இருக்கும்.

இந்த சிவப்பு நிறமாக இருக்கக் கூடிய ரத்னங்கள் பதிக்கப்பட்ட மகுடத்தை சூடியவள் என்று பொருள். கோடீர மண்டிதா என்பது ஜடாமகுடம் போன்ற ஒரு வகையைச் சேர்ந்தது. மற்ற மகுடங்கள் கேசத்தை மறைக்கும். ஆனால், இந்த கோடீரம் என்பது முழுமையாக கேசத்தை மறைக்காது. அதாவது கேசமும் தெரியும். அந்த கேசத்திற்குரிய ஆபரணமும் தெரியும்.

சரி, ஒரு ஆத்ம சாதகனுக்கு இந்த சிவப்புக் கல் பதிக்கப்பட்ட கோடீரம் எதை உணர்த்துகின்றது? சென்ற நாமத்தில் அம்பிகையின் ஆனந்தம் எப்படிப்பட்டது என்று பார்த்தோம். இப்போது இந்த நாமமானது அந்த ஆனந்தத்தை தாண்டி வேறொரு ஆனந்தம் இல்லை, அதற்கு மேலான இன்னொரு ஆனந்தம் இல்லை. அதுவே சிகரம். அதுவே மகுடம் என்பதை இந்த நாமமானது நிச்சயப்படுத்துகின்றது.

The post ஸ்ரீமாதா முதல் குருவிந்த மணிச்ரேணீ கநத் கோடீர மண்டிதா வரை appeared first on Dinakaran.

Tags : Srimata ,Guruvinda Manichreni Ganath Kodeera Mandita ,Adi Shakti ,Lalita Sahasranamam ,Ramya Vasudevan ,Krishna Nam ,Guruvinda Manichereni Kanath Kodeera Mandita ,
× RELATED அருள்மழை பொழியும் அகிலாண்டேஸ்வரி