×

சித்தா

நன்றி குங்குமம் தோழி

பெண் குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் சீண்டல் களை, அத்துமீறல்களை முகத்தில் அறைந்து பதிவு செய்திருக்கும் படமாக வந்திருக்கிறது சித்தா.பாலியல் வக்கிரம் செய்பவர்கள் கைகளில் நம் குழந்தை மாட்டினால் என்னவாகும் என்பதை பதைபதைப்போடு படத்தில் காட்டியிருப்பதுடன், குடும்பம், சமூகம், சட்டம், நீதித்துறை போன்ற அமைப்புகள் எப்படி இதை எதிர்கொள்கின்றன என்பதையும், சமூகத்தில் இருக்கும் பொது புத்தி, போலித்தனமான குடும்ப விழுமியங்கள் போன்றவை குற்றவாளிக்கு எந்த அளவு சாதகமாக இருக்கிறது என்பதையும் காட்சிகள் வழியே படம் பதிவு செய்திருக்கிறது.

பழனி நகராட்சியில் துப்புரவு ஆய்வாளராக பணி செய்பவர் ஈஸ்வரன் (சித்தார்த்). இவரின் அண்ணன் இறந்துவிட, வாரிசு அடிப்படையில் அண்ணனின் வேலை சித்தார்த்திற்குக் கிடைக்கிறது. அண்ணன் மனைவியை (அஞ்சலி நாயர்) தாயாகவும், அண்ணன் மகள் சுந்தரியை (சஹஸ்ரஸ்ரீ) மகளாகவும் நினைத்து கண்ணுக்குள் வைத்து அவர்களை பார்த்துக்கொள்வதுடன், சமூகத்திற்கும் நல்லது செய்யும் மனிதராக வலம் வருகிறார்.

அண்ணன் மகள் சுந்தரியை ‘சேட்டை… சேட்டை…’ என சித்தார்த் அழைப்பதும், பதிலுக்கு அவர் தன் சித்தப்பாவை ‘சித்தா… சித்தா…’ என அழைத்து அன்பைப் பொழிவதுமாக தந்தை, மகளாகவே படத்தில் வாழ்ந்து இருக்கின்றனர். படத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் நமது குடும்பங்களில் நடைபெறுவது போன்ற உணர்வையே நமக்கு பெரும்பாலும் ஏற்படுத்துகிறது.

காவல்துறையில் பணியாற்றும் சித்தார்த்தின் நெருங்கிய நண்பன் வடிவேலு. இவரது அக்காவின் மகள் பொன்னியும் (அபியா தஸ்நீம்), சித்தார்த்தின் அண்ணன் மகள் சுந்தரியும் நெருங்கிய தோழிகளாக ஒரே பள்ளியில் படிக்கின்றனர். சுந்தரியின் தோழி பொன்னிக்கு எதிர்பாராமல் பாலியல் கொடுமை ஒன்று நடக்கிறது. அதில் அவரின் குடும்பம் உடைந்து போக, பழி சித்தார்த்தின் மீது தவறுதலாக சுமத்தப்பட்டு பிரச்னை வெடிக்கிறது.

இந்தப் பிரச்னையில் இருந்து சித்தார்த் மீண்டு வரும்போது, அவரின் அண்ணன் மகள் சுந்தரியும் அடையாளம் தெரியாத நபரால் கடத்தப்படுகிறார். இந்தப் பிரச்னைகளில் இருந்து சித்தார்த் எப்படி மீண்டு வருகிறார். இரு பெண் குழந்தைகளுக்கும் என்ன நேர்ந்தது என்பதை பதைபதைப்புடன் காட்சிப்படுத்தி, ஒரு த்ரில்லர் மூவி போன்ற காட்சி அமைப்புகளோடு கொண்டு சென்று, காட்சி வழியாகவும், கதாநாயகியின் மூலமாகவும் அழுத்தமான வசனங்களை பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் அருண்குமார்.

குறிப்பாக குழந்தையை ஆட்டோவில் கடத்தும் காட்சிகள், சீட்டின் நுனிக்கே நம்மை இழுத்துச் செல்கிறது. கூடவே நமது கரங்களில் 24 மணி நேரமும் தவழுகிற கைபேசி, குழந்தைகளை என்னவாக மாற்றி வைக்கிறது என்பதை அதிர்ச்சியுடன் காட்சிகள் வழியாக நமக்கு கடத்துகிறார் இயக்குநர். சில காட்சிகளில் கதாபாத்திரங்கள் பார்க்கும்
பார்வையே அர்த்தத்தை நமக்கு உணர்த்திவிடுகிறது.

சிறுமி பொன்னியை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியது யார்? சித்தார்த்தின் அண்ணன் மகள் சுந்தரி கிடைத்தாளா? இந்தத் தேடுதல் பயணத்தில் சித்தார்த்துக்கு நிகழ்வது
என்ன போன்றவை அடுத்தடுத்த காட்சிகளாக வருகின்றது.பாலியல் குற்றத்தால் பாதிப்படைந்த பெண்கள் அதிலிருந்து மீண்டுவந்து நிம்மதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு பதிலாக குற்றவாளிகளை பழிவாங்குவதில் சில ஆண்கள் முனைப்புக் காண்பிப்பதையும், குடும்ப கவுரவம், வீரம், மானப் பிரச்னை என இயங்கும் ஆணாதிக்க விழுமியங்களை அழுத்தமாக இயக்குநர் பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது.

பிரதான கதாபாத்திரங்கள் தொடங்கி சிறிய கதாபாத்திரங்கள் வரைக்குமான நடிகர்கள் தேர்வு, அவர்களிடமிருந்து இயல்பான நடிப்பை வாங்கிய விதம் என எல்லாமும் படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறது. குறிப்பாக கதாநாயகிக்கான பிம்பத்தை சுக்குநூறாக உடைத்திருக்கிறார் இயக்குநர். தன் கதாபாத்திரத்தை உணர்ந்து, சக்தியாக வரும் நிமிஷா சஜயன், இயல்பாகவும் அழுத்தமாகவும் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அதேபோல் கணவனை இழந்த அண்ணி கதாபாத்திரத்தில் வரும் அஞ்சலி நாயருக்கும், சித்தார்த்திற்குமான காட்சி அமைப்புகளும் படத்தில் கவனம் பெறுகின்றன. குழந்தை நட்சத்திரங்களாக வரும் சகஸ்ரஸ்ரீ, அபியா தஸ்னீம் இருவரும் சிறப்பாக தங்கள் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். காட்சியின் வீரியத்தை குழந்தைகளிடம் விளக்கி அவர்களிடத்தில் இயக்குநர் எப்படி நடிப்பை வாங்கியிருப்பார் என சில காட்சிகள் நம்மை சிந்திக்க வைக்கிறது.

பள்ளிக் காதலி மீதான தன் காதலை மீட்டெடுக்க உருகுவது, தன் அண்ணன் மகள் மீது அன்பு காட்டுவது, குழந்தையை காணாமல் உடைந்து அழுவது, மீண்டும் வெகுண்டெழுவது
என எல்லாமுமாக நடிப்பில் கவனம் பெறுகிறார், ‘சித்தா’வாக வரும் சித்தார்த். படத்தில் பழனி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் மிக யதார்த்தமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சிறுமி சம்பந்தப்பட்ட காட்சிகளில் சிறப்பான ஒலி அமைப்பைக் கொடுத்து பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார் இசையமைப்பாளர்.

குட் டச்… பேட் டச் என்பதைத் தாண்டி, பெண்களை பாதுகாப்பது என்பது ஆண்களை சரியாக வளர்ப்பது என்பதை முகத்தில் அறைந்து சொல்லியிருப்பதுடன், பாலியல் அத்துமீறல்களை பெண் குழந்தைகள் எப்படி கடந்து செல்ல வேண்டும் என்பதையும் யதார்த்தமாக கூறி கைத்தட்டல் பெறுகிறார் இயக்குநர். ‘சித்தா’ படம் அல்ல பாடம்!

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

The post சித்தா appeared first on Dinakaran.

Tags : Siddha ,Kunkum Dothi ,
× RELATED சாக்கோட்டையில் இலவச சித்த மருத்துவ முகாம்