×

அப்பீல் நிலுவையில் இருந்தாலும் பரோல் கோரும் மனுவை டிஐஜி பரிசீலிக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: அப்பீல் மனு நிலுவையில் இருந்தாலும் பரோல் கேட்கும் மனுவை சிறைத்துறை டிஐஜி பரிசீலிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லையைச் சேர்ந்த லதா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘என் கணவர் திருப்பதிராஜன், குற்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ளார். அவருக்கு 40 நாள் பரோல் கேட்டு விண்ணப்பித்தோம். இதை நிராகரித்து உத்தரவிட்டுள்ளனர்.

இந்த உத்தரவை ரத்து செய்து, போலீஸ் பாதுகாப்பு இல்லாத 40 நாள் பரோல் வழங்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், எம்.நிர்மல்குமார் ஆகியோர் விசாரித்தனர். அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் திருவடிக்குமார் ஆஜராகி, ‘‘இடைக்கால ஜாமீன் கோரிய மனு ஏற்கனவே தள்ளுபடியானால் பரோல் கேட்க முடியாது. அதோடு தண்டனையை எதிர்க்கும் அப்பீல் மனு நிலுவையில் இருந்தால் பரோல் வழங்க முடியாது’’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘தண்டனை சிறைக்கைதிக்கு அவசர மற்றும் சாதாரண பரோல் வழங்க முடியும். ஆனால், இது அரசின் விருப்பத்தை பொறுத்தது. இதை சட்டப்படியான உரிமையாக கேட்க முடியாது. சிறைக்கைதியின் பெற்றோர், கணவன், மனைவி, மகன், மகள் உள்ளிட்டோரின் உடல்நல பாதிப்பு, திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பரோல் கேட்க முடியும். கர்ப்பமான பெண் கைதி சிறைக்கு வெளியில் குழந்தை பெற முடியும். இதில் 40வது விதி எதிர்மறையாக இருந்தாலும், விதிவிலக்கு உண்டு. விதி விலக்கான அதிகாரங்கள் பரோல் மறுப்பதற்காகவே பயன்படுகிறது. பரோல் கேட்கும் மனுக்களின் மீது சிறைத்துறை டிஐஜி தான் முடிவெடுக்க முடியும். பரோல் கேட்கும் மனுதாரரின் மனுவை அவர் மீண்டும் 4 வாரத்தில் பரிசீலித்து உத்தரவிட வேண்டும். அப்பீல் மனு நிலுவை உள்ளிட்ட காரணங்களை ஆராய வேண்டியதில்லை’’ என உத்தரவிட்டுள்ளனர்.

The post அப்பீல் நிலுவையில் இருந்தாலும் பரோல் கோரும் மனுவை டிஐஜி பரிசீலிக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : DIG ,ICourt Branch ,Madurai ,Prisons Department ,Prisons ,
× RELATED தீ விபத்தில் சிக்கி சிறுநீரக...