×

இதயமும் இரக்கமும் இல்லாதவராக ஆளுநர் அமைந்திருப்பது வரலாற்று அவலமாகும்: முத்தரசன் சாடல்


சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு ஆளுநர் ரவி சட்டத்தின் ஆட்சி முறைக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அவர் ஆளுநர் பொறுப்பேற்ற நாளில் இருந்து மக்களாட்சியின் மாண்பையும், மரபையும் அலட்சியப்படுத்தி வருகிறார். சட்டமன்றப் பேரவை நிறைவேற்றி, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் மறுத்து வருகிறார். வழிவழியாக பின்பற்றி வரும் மரபுக்கு மாறாக விளக்கம் பெறுதல் என்ற பெயரில் மசோதாக்களை திருப்பி அனுப்புகிறார். அரசு தரப்பில் போதுமான விளக்கம் அளித்த பிறகும் எல்லையற்ற கால தாமதம் செய்து வருகிறார். “நீட்” தேர்வில் இருந்து, தமிழ்நாட்டிற்கு விலக்குக் கோரும் மசோதாவை கிடப்பில் போட்டு வைத்துள்ளார். இதன் விளைவாக வளரும் இளைய தலைமுறையினர் தற்கொலை சாவுக்கு நெட்டித் தள்ளப்படுகிறார்கள்.

இதே போல் ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்கும் சட்டம் நிறைவேற்ற ஒப்புதல் வழங்க மறுத்து வருவதால். சிறு, குறு தொழில் முதலீட்டாளர்கள் உட்பட பல குடும்பங்கள் திவாலாகி, உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள் என்ற துயரத்தை கண்டு கொள்ளாத “இதயமும் இரக்கமும்” இல்லாதவராக ஆளுநர் அமைந்திருப்பது வரலாற்று அவலமாகும். பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் மூலம் தமிழ்நாடு மக்கள் ஏற்க மறுத்து, எதிர்த்து போராடி வரும் தேசிய கல்விக் கொள்கையை பகுதி, பகுதியாக திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் நூற்றாண்டு கண்டு வாழ்ந்து வரும் தியாக சீலர், தகைசால் தமிழர் என்.சங்கரய்யாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் அரசின் முடிவை ஏற்க மறுத்து வருகிறார்.அறிவுத்துறை உலகம் ஆயிரம் ஆண்டுகளில் தலைசிறந்த பேரறிவாளர் என்று அறிவித்த காரல் மார்க்ஸ் சிந்தனைகளை இழிவுபடுத்தி பேசி வருகிறார்.

நாட்டின் விடுதலைக்கு போராடிய வீரர்களையும், தியாகிகளை தேடி, தேடி பெருமைப்படுத்தும் தமிழ்நாடு அரசின் கொள்கைக்கு எதிராக பகைமையும். வெறுப்பையும் பரப்பும் தரம் தாழ்ந்த பிரச்சாரகராக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டாட்சி கோட்பாட்டினை தகர்த்து வருகிறார். மதவெறி, சாதிய ஆதிக்க உணர்வோடு செயல்படும் அமைப்புகளின் எதிர்மறை விளைவுகள் குறித்து வாய் திறக்காத ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, அமைதி நிலையை பாதுகாத்து வரும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை விமர்சித்து அடிப்படையற்ற அவதூறுகள் பரப்பி வருகிறார். மலிவான அரசியலில் ஈடுபட்டு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் சட்டவிரோத, அநாகரிக செயலை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

The post இதயமும் இரக்கமும் இல்லாதவராக ஆளுநர் அமைந்திருப்பது வரலாற்று அவலமாகும்: முத்தரசன் சாடல் appeared first on Dinakaran.

Tags : Governor ,Mutharasan Chatal ,Chennai ,State Secretary of ,Communist Party of India ,Mutharasan ,Tamil Nadu ,Ravi ,
× RELATED எடப்பாடி சூழ்ச்சியில் சிக்கி தவிப்பு;...