×

காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து இல்லாததால் ஈரோட்டில் 7 கதவணைகளில் மின் உற்பத்தி நிறுத்தம்

ஈரோடு : காவிரி ஆற்றில் குடிநீருக்கு மட்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், போதிய நீர் வரத்து இல்லாததால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 7 கதவணைகளிலும் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்றில் குறுக்கே தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் செக்கானூர், குதிரைகல்மேடு, நெரிஞ்சிப்பேட்டை, ஊராட்சிகோட்டை, பி.பெ.அக்ரஹாரம், வெண்டிபாளையம், பாசூர் ஆகிய 7 இடங்களில் கதவணை அமைக்கப்பட்டு, நீர் மின் நிலையங்கள் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு தடுப்பணையிலும் தலா 15 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் 2 இயந்திரங்கள் அமைக்கப்பட்டு தினமும் அதிகபட்சமாக 30 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், ஈரோடு வெண்டிபாளையம் கதவணை மட்டும் நவீனமானது. இந்த தடுப்பணை 18 மதகுகள் கொண்டது. இந்த தடுப்பணை மூலம் 30 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த வெண்டிபாளையம் தடுப்பணையில் காவிரி ஆற்றில் 2,500 கன அடி நீருக்கு மேல் வந்தால் மட்டுமே மின் உற்பத்தி நடக்கும்.

இந்நிலையில், மேட்டூர் அணைக்கு போதிய நீர் வரத்து இல்லாததால், காவிரி ஆற்றில் தண்ணீர் குடிநீர் தேவைக்காக மட்டும் அணையில் இருந்து 500 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஆற்றில் தண்ணீரின்றி ஆங்காங்கே பாறைகளாக காட்சியளிக்கிறது. காவிரி ஆற்றில் போதிய தண்ணீர் வரத்து இல்லாததால் ஈரோடு வெண்டிபாளையம் கதவணை உட்பட மாவட்டத்தில் உள்ள 7 கதவணைகளிலும் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:மேட்டூர் அணையில் இருந்து 1000 கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டால், வெண்டிபாளையம் மட்டும் அல்லாமல் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 7 தடுப்பணைகளிலும் மின் உற்பத்தி நடக்கும். ஆனால், குடிநீர் தேவைக்காக மட்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், கதவணைகளில் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கதவணைகளில் ஆற்றில் வரும் தண்ணீரை தேக்கி வைக்கிறோம். குடிநீர் தேவைக்கு மட்டும் ஒரு மதகில் இருந்து தண்ணீர் செல்ல திறந்து வைத்துள்ளோம். குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை தேக்கி வைத்த தண்ணீரை திறந்து மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து இல்லாததால் ஈரோட்டில் 7 கதவணைகளில் மின் உற்பத்தி நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Cauvery River ,Erode ,Dinakaran ,
× RELATED ஆவத்திபாளையம் ஓடைக்குள் திறந்துவிடப்படும் சாயக்கழிவுகள்