- பிரம்மோத்சவம்
- சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி
- திருப்பதி ஏழுமலையான் கோவில்
- திருமலா
- சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி
- திருப்பதி ஏழு மலையான் கோயில்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரமோற்சவம் நிறைவு பெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். ஆந்திர மாநிலம், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர நவராத்திரி பிரமோற்சவம் கடந்த 15ம்தேதி தொடங்கி நடைபெற்றது. பிரமோற்சவத்தின் கடைசி நாளான நேற்று முன்தினம் காலை கோயிலில் இருந்து அதிகாலை உற்சவ மூர்த்திகள் மற்றும் சக்கரத்தாழ்வார் ஊர்வலமாக வராக சுவாமி கோயிலுக்கு வந்தனர். வராக சுவாமி கோயில் எதிரே மலையப்ப சுவாமி தயார்களுக்கும் சக்கரத்தாழ்வாருக்கு பால், தயிர், தேன், இளநீர் கொண்டு ஜீயர்கள் முன்னிலையில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
பின்னர், ஏழுமலையான் கோயில் தெப்ப குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில், குளத்தை சுற்றி அமர்ந்து இருந்த அயிர்க்கணக்காண பக்தர்கள் புனித நீராடினர். சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரிக்கு பிறகு புனித நீராடினால் சகல பாவங்களும், தோஷங்களும் விலகி கஷ்டங்கள் தீரும் என்பது பக்தர்களின் ஐதீகம். இத்துடன் பிரமோற்சவம் நிறைவு பெற்றது. இதில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகரன், தலைமை செயல் அதிகாரி தர்மா, இணை செயல் அதிகாரிகள் வீரபிரம்மம், சதாபார்கவி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பிரசாந்தி, யானதய்யா, சதீஸ், துணை செயல் அதிகாரி லோகநாதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர் குறிப்பிடத்தக்கது.
* ரூ.25.71 கோடி காணிக்கை
நவராத்திரி பிரமோற்சவத்தில் 6 லட்சத்து 24 ஆயிரத்து 284 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். உண்டியலில் ரூ.25 கோடியே 71 லட்சத்து 62,300 காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரமோற்சவம் நிறைவு: திரளான பக்தர்கள் புனித நீராடினர் appeared first on Dinakaran.