×

குறுகலான சாலை வசதியால் கல்வராயன்மலை சின்ன திருப்பதிக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் அவதி

*நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சின்னசேலம் : குறுகலான சாலை வசதியாக உள்ளதால் கல்வராயன்மலை சின்ன திருப்பதிக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் அவதியடைந்தனர். ஆகையால் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் சின்ன திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் உள்ளது. கடந்த 2000 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட இந்த கோயில் மன்னர், ஜாகிர்தாரின் கீழ் இருந்து வருகிறது.

கடந்த 15ம் தேதி ஜாகிர்தார் ராமசாமி சடையப்ப கவுண்டர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் இக்கோயிலில் கொடியேற்றப்பட்டு ஒரு வாரமாக சாமிக்கு அபிஷேக பூஜை நடந்து வந்தது. நேற்று முன்தினம் தேர் திருவிழாவையொட்டி கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு நடந்தும் இருசக்கர, நான்கு சக்கர வாகனத்திலும் ஆயிரக்கணக்கானோர் வந்தனர். அப்போது கோயிலுக்கு செல்ல தார்சாலை வசதி இல்லாததால் பெரும்பாலான பக்தர்கள் கச்சிராயபாளையம், கரியாலூர், வெள்ளிமலை கொட்டபுத்தூர், எழுத்தூர், எட்டரைப்பட்டி, மேல்பாச்சேரி, கிணத்தூர், சோத்தூர் வழியாக குறுகலான மண் சாலையில் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

அடிபெருமாள் கோயில் சாலை, செருவாச்சூர் சாலையில் பக்தர்கள் நடந்து வந்ததால், வெள்ளிமலை-மேல்பாச்சேரி குறுகலான குண்டும், குழியுமான சாலை வழியாக அதிகமானோர் பைக், கார் போன்ற வாகனங்களில் வந்தனர். இதில் ஒருபுறம் கோயிலுக்கு செல்பவர்களும், மறுபுறம் மலையிலிருந்து இறங்குபவர்களும் ஒரே நேரத்தில் வந்ததால் நேற்று முன்தினம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஸ்தம்பித்தது. மேலும் பக்தர்கள் பலர் நீண்ட நேரமாக காத்திருந்து, இரவு நெருங்கியதால் கோயிலுக்கு செல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது:

கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 6 மாவட்ட பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து செல்கின்றனர். அனைத்து தரப்பு மக்களும் குறுகலான இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். திருவிழா காலங்களில் கோயிலுக்கு செல்வது முடியாத நிலையாக உள்ளது. எனவே மலைவாழ் மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு பக்தர்களின் நலன் கருதி குறுகலான சாலையை அகலப்படுத்தி தார்சாலை அமைத்து, பஸ் போக்குவரத்து தொடங்க வேண்டும்.

பொட்டியம், மாயம்பாடி வழியாக சாலை வசதி செய்து தரவும், இதேபோல் சேலம் மாவட்டம் செருவாச்சூர்-தாழ்பாச்சேரி வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் மண்பாதையாக உள்ளதை தார்சாலை அமைத்து தரவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுத்து திருவிழா காலத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் திரும்பி செல்லாத வகையில் மேற்கண்ட வழித்தடங்களில் உடனடியாக தார்சாலை அமைக்க வேண்டும் எனவும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post குறுகலான சாலை வசதியால் கல்வராயன்மலை சின்ன திருப்பதிக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Kalvarayanmalai ,Chinna ,Tirupati ,Chinnasalem ,Kalvarayanmalai Small Tirupati ,Dinakaran ,
× RELATED தொடர்ந்து வெயில் வாட்டிய நிலையில் கல்வராயன்மலையில் திடீர் மூடுபனி