×

காரியாபட்டி அருகே பயங்கரம்: கல்குவாரி வெடி விபத்தில் 3 பேர் பலி; 5 கிமீ தூரம் சத்தம் கேட்டதால் அதிர்ச்சி

காரியாபட்டி: காரியாபட்டி அருகே கல்குவாரி குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 3 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கீழஉப்பிலிக்குண்டு கிராமத்தில் கல் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்படுவது வழக்கம். மேலும், இந்த குவாரியில் வெடிமருந்து இருப்பில் வைக்க குடோன் உள்ளது. இந்த குடோனில் இருந்து சரக்கு வேனில் வெடிமருந்து, குவாரிகளுக்கு ஏற்றி செல்லப்படும். குடோனில் அதிகளவில் வெடிபொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை 8 மணியளவில் இரண்டு சிறிய சரக்கு வாகனங்களில் வெடிமருந்து ஏற்றும் பணியில் காரியாபட்டி அருகே டி.புதுப்பட்டியை சேர்ந்த கந்தசாமி, தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த துரை, குருசாமி ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது உராய்வு காரணமாக வெடிமருந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் வெடிமருந்து குடோன் முற்றிலும் தரைமட்டமானது. சரக்கு வாகனம் நீண்ட தொலைவுக்கு தூக்கி வீசப்பட்டது. இந்த சம்பவத்தில், பணியில் ஈடுபட்ட கந்தசாமி, துரை, குருசாமி ஆகியோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் இடிபாடுகளில் சிக்கிய 3 பேரின் உடல்களை மீட்டனர். பின்னர் உடல்களை பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை விருதுநகர் எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா, காரியாபட்டி தாசில்தார் மாரீஸ்வரன், காரியாபட்டி எஸ்ஐ செந்தில்குமார் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் குவாரி உரிமையாளரான ஆவியூரை சேர்ந்த சேது மீது காரியாபட்டி போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

முன்னதாக, கல்குவாரி குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி சத்தம் சுமார் 5 கிமீ தூரத்திற்கு கேட்டது. இதனிடையே, கல் குவாரியை நிரந்தரமாக மூடவேண்டும் என வலியுறுத்தி கீழஉப்பிலிக்குண்டு, டி.கடமங்குளம் கிராமங்களை சேர்ந்த மக்கள் மதுரை – தூத்துக்குடி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த எஸ்பி மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா உறுதியளித்ததை தொடர்ந்து மறியலை கைவிட்டனர். இந்த மறியலால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில்,‘ விருதுநகர் மாவட்டம் டி.கடம்பன்குளத்தில் இயங்கி வந்த தனியார் வெடிபொருள் சேமிப்பு கிட்டங்கியில் நேற்று காலை ஏற்பட்ட எதிர்பாராத வெடிவிபத்தில், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இதில், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டவுடன் அரசின் நிவாரண உதவி விரைந்து வழங்கப்படும்,’என்றார்.

300 மீ தொலைவில் வீடுகளில் விரிசல்
கல்குவாரி குடோனில் நடந்த வெடி விபத்து அறிந்து அங்கு ஏராளமானோர் திரண்டனர். மேலும், இந்த வெடி விபத்தால் அதிர்வு காரணமாக, 300 மீட்டர் தொலைவிலுள்ள டி.கடமங்குளம் கிராமத்திலுள்ள ஒரு சில வீடுகளில் விரிசல் ஏற்பட்டது.

The post காரியாபட்டி அருகே பயங்கரம்: கல்குவாரி வெடி விபத்தில் 3 பேர் பலி; 5 கிமீ தூரம் சத்தம் கேட்டதால் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Panic ,Kariyapatti ,Kalquari ,blast ,Kizhauppilikundu village ,Virudhunagar district ,
× RELATED காரியாபட்டி கல்குவாரியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் மறியல் போராட்டம்