- பாக்கிஸ்தான்
- ஆப்கான்
- செபாக் ஸ்டேடியம்
- சென்னை
- ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட்
- மா சிதம்பரம் அரங்கம்
- செப்பக்கம். ...
- சேப்பாக்கம் மைதானம்
- தின மலர்
சென்னை: ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 22வது லீக் ஆட்டம் சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இனி ஒவ்வொரு ஆட்டமும் முக்கியம், அதில் வென்றால்தான் அடுத்தச் சுற்று குறித்து நினைத்து பார்க்க வேண்டிய நிலையில்தான் ஆப்கானிஸ்தான் உள்ளது. இதுவரை விளையாடிய 4 ஆட்டங்களில் அந்த அணி 3ல் தோல்வியை தழுவி உள்ளது. இடையில் ஒரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்துக்கு அதிர்ச்சி தோல்வியை பரிசளித்தது.
அதனால் நம்ப முடியாத அணியாக ஆப்கான் இருக்கிறது. ஹஷ்மத்துல்லா ஷாகிதி தலைமையிலான ஆப்கான் அணியில் பந்துவீச்சை விட பேட்டிங்தான் மோசமாக இருக்கிறது. யாராவது ஒன்றிரண்டு வீரர்கள் அணியை கரை சேர்க்க போராடுகிறார்கள். அணியில் ஒருங்கிணைப்பு இருந்தால் பாகிஸ்தானுக்கு சவால் கொடுக்க முடியும். அந்த சவாலை சமாளிக்க கூடிய அணிதான் பாபர் ஆஸம் தலைமையிலான பாக் அணி. முதல் 2 ஆட்டங்களில் அடுத்தடுத்து வெற்றிகளை வசப்படுத்திய பாகிஸ்தான், அடுத்த 2 ஆட்டங்களில் தோல்வியை தான் சந்தித்துள்ளது.
தலா 2 வெற்றி, தோல்விகளுடன் சமமாக இருந்தாலும் அரையிறுதியில் கரை சேர எஞ்சிய 5 ஆட்டங்களிலும் கவனமாக விளையாடுவது அவசியம். அதிலும்… ஆப்கானை வெல்வது முக்கியமானது. ஏனென்றால், அடுத்து வலுவான தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிகளை சந்திக்க வேண்டி உள்ளது. அதனால் பாக், ஆப்கான் என 2 ஸ்தான்களும் தங்கள் அரையிறுதிக்கான ஸ்தானங்களை பெற கடுமையாகப் போராடும். சென்னை ரசிகர்கள் அணிகளை பேதம் பாராமல் கொண்டாடுபவர்கள் என்பதால் 2 அணிகளுக்கும் சமமான ஆதரவும் இருக்கும்.
* இரு அணிகளும் 7 முறை மோதியுள்ளதில் பாகிஸ்தான் 7-0 என ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
* ஒருநாள் உலக கோப்பையில் ஒரே ஒருமுறைதான் மோதியுள்ளன. இங்கிலாந்தில் 2019ல் நடந்த போட்டியில், பாகிஸ்தான் கடைசி ஓவர் வரை போராடி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
* கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் முறையே 3 விக்கெட் (3 பந்துகள் மிச்சம்), 3 விக்கெட் (2 பந்துகள் மிச்சம்), 142 ரன், ஒரு விக்கெட் (ஒரு பந்து மீதி), 59 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றுள்ளது.
* சென்னையில் பாகிஸ்தான் இதுவரை 2 முறை விளையாடியுள்ளது. அந்த 2 ஆட்டங்களிலும் இந்தியாவை வென்று இங்கு 100 சதவீத வெற்றியை பதிவு செய்துள்ளது.
* 1997ல் நடந்த ஆட்டத்தில் தொடக்க வீரர் சயீத் அன்வர் விளாசிய 194 ரன் அந்தக் காலத்தில் ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ரன்னாக நீண்ட நாட்கள் இருந்தது.
* ஆப்கான் அணி சென்னை எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் இந்த உலக கோப்பையில்தான் முதல் முறையாக விளையாடியது. அக்.18ல் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த அந்த ஆட்டத்தில் 149 ரன் வித்தியாசத்தில் ஆப்கான் தோற்றது.
* எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் இதுவரை 26 சர்வதேச ஒருநாள் ஆட்டங்கள் நடந்துள்ளன. முதலில் பேட் செய்த அணி 11 ஆட்டங்களிலும், சேஸ் செய்த அணி 14 ஆட்டங்களிலும் வென்றுள்ளன (ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது).
* பாக் 11 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் விளையாட உள்ளது.
The post சேப்பாக்கம் மைதானத்தில் இன்று பாகிஸ்தான் -ஆப்கான் மோதல்: பிற்பகல் 2.00 மணிக்கு தொடக்கம் appeared first on Dinakaran.