×

வண்டலூர் அருகே கீரப்பாக்கத்தில் பரபரப்பு; அதிமுக ஊராட்சி தலைவரின் மகன் வெடிகுண்டு வீசி, வெட்டிக் கொலை: ரவுடி கும்பலுக்கு வலை

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், வண்டலூர் அருகே வேங்கடமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி கல்யாணி. இவர்களது மகன்கள் அன்புராஜ், அன்பரசு. ஏற்கெனவே அதிமுக ஊராட்சி மன்றத் தலைவராக ரவி பதவி வகித்துள்ளார். அவரது மனைவி கல்யாணி, தற்போது ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர்களின் 2வது மகன் அன்பரசு, அதே ஊராட்சியில் 9வது வார்டு உறுப்பினராகப் பொறுப்பு வகித்து வந்தார்.

இந்நிலையில், நேற்றிரவு கீரப்பாக்கம், துலுக்காணத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்த சேகர் (எ) தனசேகரின் 2வது மகன் நவீன்குமார் மறைவைத் தொடர்ந்து, அவரது படத்திறப்பு விழாவுக்காக, தனது 6 நண்பர்களுடன் அன்பரசு சென்றிருந்தார். பின்னர் அங்குள்ள சுடுகாட்டு வாசலில் இரவு 10.30 மணியளவில் தனது நண்பர்களுடன் அன்பரசு மது அருந்தியுள்ளார். அங்கு மறைந்திருந்து நோட்டமிட்ட ஒரு ரவுடி கும்பல், அன்பரசு வந்த காரின்மீது 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. இதை கண்டு, அங்கு மது அருந்திய அன்பரசு உள்பட 7 பேரும் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

இதில் அன்பரசுவை மட்டும் சிறிது தூரம் ஓட ஓட விரட்டி சென்று, அவரை ரவுடி கும்பல் சுற்றி வளைத்து, வீச்சரிவாளால் சரமாரி வெட்டி சாய்த்தது. இதனால் அன்பரசுவின் கழுத்து, கை-கால் உள்பட பல்வேறு உடல் பாகங்களில் பலத்த வெட்டு விழுந்தது. இதில் அன்பரசு ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அன்பரசு இறந்ததை உறுதி செய்தபின் ரவுடி கும்பல் தப்பி ஓடிவிட்டது.இதுகுறித்து தகவலறிந்ததும் மாமல்லபுரம் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன், திருப்போரூர் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் காயார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அன்பரசுவின் சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

காயார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரியல் எஸ்டேட் தகராறு அல்லது தொழில் போட்டி காரணமாக அன்பரசுவை ரவுடி கும்பல் வெட்டி கொன்றதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். மேலும், அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, தலைமறைவான ரவுடி கும்பல் குறித்து போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், அதிமுக ஊராட்சி மன்றத் தலைவரின் மகனை கொலை செய்த ரவுடி கும்பலை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி இன்று காலை வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் உள்ள ரத்தினமங்கலம் பகுதியில் ஏராளமான அதிமுகவினரும் கிராம மக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

The post வண்டலூர் அருகே கீரப்பாக்கத்தில் பரபரப்பு; அதிமுக ஊராட்சி தலைவரின் மகன் வெடிகுண்டு வீசி, வெட்டிக் கொலை: ரவுடி கும்பலுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Keerapakkam ,Vandalur ,Adimuka Orati ,Vetik ,Mudravancheri ,Ravi ,Perumal Temple Street ,Vengadamangalam Uratchi ,Chengalpattu District ,Katangolatur Union ,Rawudi ,
× RELATED வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஊழியரை கடித்து குதறிய முதலை