×

நீட் விலக்கு விவகாரத்தில் அலட்சியம் செய்து கொண்டிருந்தால் ஜல்லிக்கட்டு போராட்டத்தை போன்று வீரமிக்க போராட்டத்தை நடத்துவோம்: ஒன்றிய அரசுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: நீட் விலக்கு விவகாரத்தில் அலட்சியம் செய்து கொண்டிருந்தால், ஜல்லிக்கட்டு போராட்டம் போன்று வீரமிக்க போராட்டத்தை நடத்துவோம் என்று ஒன்றிய அரசுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். திமுக இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவரணி சார்பில் ‘நீட் விலக்கு, நம் இலக்கு’ என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கம் தமிழ்நாடு முழுவதும் நேற்று நடந்தது. சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், எழிலன் எம்.எல்.ஏ., மாணவரணி செயலாளர் எழிலரசன் எம்எல்ஏ, மருத்துவரணி செயலாளர் கனிமொழி சோமு, திராவிடர் கழக துணை பொதுச்செயலாளர் மதிவதனி, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, அனிதாவின் சகோதரர் மணிரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அஞ்சல் அட்டை மற்றும் இணையதளம் வாயிலாக இந்த கையெழுத்து இயக்கத்தை திமுகவினர் முன்னெடுத்து செல்கின்றனர். இதன் முதல் கையெழுத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டுள்ளார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: நீட் விலக்கு மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. நீட் தேர்வு வந்தால் தரமான டாக்டர்கள் கிடைப்பார்கள் என்று சொன்னார்கள். ஆனால் இப்போது என்ன நடக்கிறது. முதுநிலை மருத்துவப் படிப்பை படிக்க முதுநிலை நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்தால் போதும், அதாவது முட்டை மதிப்பெண் எடுத்தால் போதும். டாக்டர் ஆகிவிடலாம். இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம், கேலிக்கூத்து. உலகத்தில் இதுமாதிரி எங்கேயாவது நடந்தது உண்டா? இந்த மாதிரியான நேரங்களில் தான் பெரியார், அண்ணா, கலைஞர் போன்றவர்களின் உழைப்பை நினைத்து பார்க்க வேண்டும்.

ஒன்றிய அரசு நம்மையும், மாநில அரசின் முயற்சிகளையும் அலட்சியம் செய்து கொண்டு இருந்தால், அடுத்ததாக ஜல்லிக்கட்டு போராட்டம் போன்ற வீரமிக்க போராட்டத்தை தான் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இதை ஒன்றிய அரசுக்கு ஒரு எச்சரிக்கையாகவே கூற விரும்புகிறேன். அதிமுகவுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். அதிமுகவினரும் வாருங்கள். நீட் தேர்வு விலக்கு கிடைத்தால் அதனால் கிடைக்கும் நற்பெயரை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள். இந்த கையெழுத்து இயக்கத்தில் அனைத்து இயக்கங்களும் பங்கேற்கவேண்டும். இந்த கையெழுத்தை அனைத்து கட்சிகளும் சேர்ந்து ஜனாதிபதியிடம் ஒப்படைப்போம்.

பாஜகவுடன் கூட்டணி இருந்த போது தான் அதிமுகவால் எதையும் செய்ய முடியவில்லை. இப்போது கூட்டணியில் இருந்து வெளிவந்துவிட்டோம் என்று சொல்கிறீர்கள். தமிழ்நாட்டின் உரிமைகளை காக்க தான் பாஜக கூட்டணியில் இருந்து வெளியில் வந்தோம் என்று சொல்கிறீர்கள். ஆகவே தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக, மாணவர்களின் உரிமைகளுக்காக, கல்வி உரிமைகளுக்காக, நீட் விலக்குக்காக அதிமுகவும் இதில் பங்கேற்கவேண்டும். சாவியை பார்த்து சுத்தியல் கேட்டது, உன்னைவிட நான் பெரிதாக இருக்கிறேன். பூட்டை திறக்க கஷ்டப்படுகிறேன். நீ மட்டும் எப்படி பூட்டை எளிதாக திறந்து விடுகிறாய் என்று கேட்டது.

அதற்கு சாவி, நீ என்னைவிட பலசாலிதான், உருவத்தில் பெரிய ஆள் தான். பூட்டை திறக்க நீ தலையில் அடிக்கிறாய். நான் பூட்டின் இதயத்தை சென்றூ தொடுகிறேன். அதனால் தான் என்னால் எளிதாக திறக்க முடிகிறது என்று சொன்னது. எனவே பா.ஜ.க. என்ற சுத்தியல் எவ்வளவு ஓங்கி அடித்தாலும், தமிழர்களின் இதயத்தை திறக்க முடியாது. ஏனென்றால், தமிழர்களின் இதயத்தை தொடும் திராவிட கொள்கையின் சாவியை பெரியார், அண்ணா, கலைஞர் தி.மு.க.விடம், தலைவர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்து சென்றுள்ளனர். ஆகவே தமிழ்நாட்டின் கல்வி உரிமையை பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது.

கல்வி உரிமையை சிதைக்க ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம். சேலத்தில் டிசம்பர் 17ம் தேதி நடக்கும் இளைஞரணி 2-வது மாநில மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டு, ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த கையெழுத்து இயக்கம் வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும். இதில் பங்குபெற்றுள்ள ஒவ்வொருவரும் வரலாற்றில் இடம்பெறுவார்கள். நீட் தேர்வை ஒழித்து நம் கல்வி உரிமையை காப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

The post நீட் விலக்கு விவகாரத்தில் அலட்சியம் செய்து கொண்டிருந்தால் ஜல்லிக்கட்டு போராட்டத்தை போன்று வீரமிக்க போராட்டத்தை நடத்துவோம்: ஒன்றிய அரசுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Jallikattu ,Minister ,Udayanidhi Stalin ,Union Government ,CHENNAI ,Union ,Dinakaran ,
× RELATED மக்களுடைய மகிழ்ச்சியே முக்கியம் என்ற...