×

5 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது இலங்கை: சமரவிக்ரமா பொறுப்பான ஆட்டம்

லக்னோ: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் 19வது லீக் ஆட்டத்தில், நெதர்லாந்துடன் மோதிய இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் முதல் வெற்றியை வசப்படுத்தியது. வாஜ்பாய் ஏகனா ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த நெதர்லாந்து 21.2 ஓவரில் 91 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து திணறியது. கோலின் ஆக்கர்மேன் 29, மேக்ஸ் ஓ தாவுத், கேப்டன்ஸ்காட் எட்வர்ட்ஸ் தலா 16 ர எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தனர்.

இந்த நிலையில், சைப்ரண்ட் எங்கல்பிரெக்ட் – லோகன் வான் பீக் இணைந்து 7வது விக்கெட்டுக்கு 130 ரன் சேர்த்தனர். சைப்ரண்ட் 70 ரன் (82 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), வான் பீக் 59 ரன் (75 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். நெதர்லாந்து அணி 49.4 ஓவரில் 262 ரன் குவித்து ஆல் அவுட்டானது. ஆர்யன் தத் 9 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை பந்துவீச்சில் மதுஷங்கா, கசுன் ரஜிதா தலா 4 விக்கெட், தீக்‌ஷனா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 263 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. குசால் பெரேரா 5 ரன், கேப்டன் குசால் மெண்டிஸ் 11 ரன் எடுத்து ஆர்யன் தத் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர். பொறுப்புடன் விளையாடி அரை சதம் அடித்த பதும் நிசங்கா 54 ரன் (52 பந்து, 9 பவுண்டரி) விளாசி ஆட்டமிழந்தார்.

ஒரு முனையில் சதீரா சமரவிக்ரமா உறுதியுடன் விளையாட, சரித் அசலங்கா 44 ரன் (66 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), தனஞ்ஜெயா டிசில்வா 30 ரன் (37 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். இலங்கை அணி 48.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 263 ரன் எடுத்து முதல் வெற்றியை ருசித்தது. சமரவிக்ரமா 91 ரன் (107 பந்து, 7 பவுண்டரி), துஷான் ஹேமந்தா 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சமரவிக்ரமா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

The post 5 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது இலங்கை: சமரவிக்ரமா பொறுப்பான ஆட்டம் appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Netherlands ,Samarawickrama ,Lucknow ,ICC World Cup ODI ,Dinakaran ,
× RELATED போதிய பயணிகள் இல்லாததால் இலங்கைக்கு ஒரே நாளில் 4 விமானங்கள் ரத்து