×

‘நிம்மல் கார்டு மேல உள்ள நம்பரை சொல்லுங்க’ அமெரிக்கரை ஏமாற்றிய குஜராத் ஆசாமி சிக்கினான்: ரூ.7.7 கோடி கிரிப்டோகரன்சி பறிமுதல்

புதுடெல்லி: வங்கி ஏடிஎம் கார்டை புதுப்பிப்பதாக சில அப்பாவி பொதுமக்களை போனில் ஏமாற்றும் தமிழ் தெரியாத மோசடி பேர்வழிகள் ‘நிம்மல் டெபிட் கார்டு மேல இருக்கிற 16 டிஜிட் நம்பரை சொல்லுங்க’ எனக் கேட்டு ஆயிரக்கணக்கில் பணத்தை மோசடி செய்வது நடந்து வரும் நிலையில், குஜராத்தை சேர்ந்த ஒருநபர் இதே பாணியில் ஹைடெக்காக அமெரிக்காவை சேர்ந்தவரிடம் கோடிக்கணக்கில் பணத்தை மோசடி செய்துள்ளார்.

அகமதாபாத்தை சேர்ந்த ரமாவத் சாய்ஷவ் என்கிற அந்த நபர், அமெரிக்காவை சேர்ந்த ஒருவருக்கு போன் செய்து அமேசான் இணையதளத்தின் மோசடி தடுப்பு பிரிவிலிருந்து ஜேம்ஸ் கார்ல்சன் பேசுவதாக கூறி நம்ப வைத்துள்ளார். அமெரிக்க நபரின் அமேசான் கணக்கை ஹேக்கிங் நபர்கள் 4 நாடுகளில் இருந்து மோசடியாக பயன்படுத்துவதாகவும் அதிலிருந்து தப்பிக்க வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்து பிட்காயின் வாலட் ஒன்றில் டெபாசிட் செய்யுமாறு கூறி உள்ளார். இதற்காக அமெரிக்க அரசின் சில போலி சான்றிதழ்களையும் அனுப்பி உள்ளார்.

இதை நம்பிய அமெரிக்கர் ரூ.1 கோடி வரையிலும் தனது வங்கி கணக்கிலிருந்து எடுத்து சாய்ஷவ் கூறிய பிட்காயின் வாலட்டில் டெபாசிட் செய்துள்ளார். அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்பிஐ, இந்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயிடம் தகவல் தெரிவித்தது. இதன் பேரில் சிபிஐ அதிகாரிகள் சாய்ஷவ்வை பிடித்து விசாரித்ததில், அவரது பல கிரிப்டோகரன்சி வாலட்களில் மொத்தம் ரூ.7.7 கோடி மதிப்பிலான பிட்காயின்களை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

The post ‘நிம்மல் கார்டு மேல உள்ள நம்பரை சொல்லுங்க’ அமெரிக்கரை ஏமாற்றிய குஜராத் ஆசாமி சிக்கினான்: ரூ.7.7 கோடி கிரிப்டோகரன்சி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Nimal ,
× RELATED ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று டிஜிட்டல் கேஒய்சி