×

திருமலையில் 7டி தொழில்நுட்பத்துடன் ₹145 கோடியில் வெங்கடேஸ்வரா அருங்காட்சியகம் புதுப்பிக்கும் பணி

*வரும் டிசம்பருக்குள் நிறைவுபெறும்

*அருங்காட்சியக அதிகாரி தகவல்

திருமலை : ₹145 கோடியில் வெங்கடேஸ்வரா அருங்காட்சியகம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என அருங்காட்சியக அதிகாரி கிருஷ்ணா பேசினார். திருமலையில் ரம்பகீசா கெஸ்ட் ஹவுஸ் -2ல் உள்ள மீடியா சென்டரில் நேற்று நிருபர்களிடம் அருங்காட்சியக அதிகாரி கிருஷ்ணா பேசியதாவது: டிசிஎஸ் நிறுவனம் ₹125 கோடியும், பெங்களூருவைச் சேர்ந்த மேப் சிஸ்டம்ஸ் நிறுவனம் ₹20 கோடியும் என மொத்தம் ₹145 கோடியில் புதிய தொழில்நுட்ப அம்சங்களுடன் திருமலை வெங்கடேஸ்வரா அருங்காட்சியகம் புதுப்பிக்கப்படுகிறது.

3டி மற்றும் 7டி தொழில்நுட்ப அம்சங்களுடன் டிசிஎஸ் 14 மற்றும் மேப் சிஸ்டம்ஸ் 5 கேலரிகளை அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மொத்தம் 19 கேலரிகள் அமைக்கப்பட உள்ளது. இதில் தரை தளத்தில் திருமாட வீதிகள், ஏழுமலையான் கோயில் அனுபவம், வாகன சேவைகள், சுவாமியின் பல்வேறு சேவைகள் மற்றும் ஏழுமலைகளுக்கான கேலரிகள் உள்ளன. அவை மேப் சிஸ்டம்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு வருகின்றன. மீதமுள்ள கேலரிகள் டிசிஎஸ் மூலம் நவீனமயமாக்கப்பட்டு வருகிறது.

மேலும், தரை தளத்தில் சுவாமி தாயார் காட்சியகங்கள், கல் சிலைகள், வெண்கல சிலைகள், செம்பு சிலைகள், அன்னமய்ய செம்பு தகடுகள் மற்றும் பழங்கால நாணயங்கள் உள்ளன. முதல் தளத்தில் ஏழுமலையான் கோயிலின் சிற்பக்கலை சிறப்பு, பக்தர்கள்- அவர்களின் சேவைகள், போர் உபகரணங்கள், இசைக்கருவிகள், பூஜை சாமான்கள் காட்சியகங்கள் போன்றவை பக்தர்களை வியக்க வைக்கும் வகையில் அமைய உள்ளது. 2வது மாடியில் பிரம்ம சிவன், விஷ்ணுவுடன் ரிக்வேதம் மற்றும் யஜுர்வேத காட்சியகங்கள் அமைக்கப்படும்.

3வது மாடியில் பெரிய கேலரி அமைத்து அதில் உச்சியில் 17 பெரிய கோபுரங்கள் அமைக்கப்படும். இதில் ஸதாலபாக்க அன்னமய்யா, தரிகொண்ட வெங்கமாம்பா, புரந்தரதாசர், ராமானுஜாச்சாரியா, சங்கராச்சாரியார், மத்வாச்சாரியார் போன்ற மகான்கள், ராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை போன்ற இதிகாசங்கள் தொடர்பான சுவாரசியமான அம்சங்களுடன் அமைக்கப்படும்.

இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் உருவாகி வரும் இந்த அருங்காட்சியகத்தின் மேம்பாட்டுப் பணிகள் வரும் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடைந்து பக்தர்கள் பார்வைக்கு கொண்டு வரப்படும் . இவ்வாறு அவர் பேசினார். இதில், பி.ஆர்.ஒ.டி.ரவி, ஏபிஆர்ஓ பி.நீலிமா, அருங்காட்சியக காப்பாளர் சிவக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

The post திருமலையில் 7டி தொழில்நுட்பத்துடன் ₹145 கோடியில் வெங்கடேஸ்வரா அருங்காட்சியகம் புதுப்பிக்கும் பணி appeared first on Dinakaran.

Tags : Venkateswara Museum ,Tirumala ,
× RELATED கடப்பாவில் நடைபெற உள்ள தேர்தலை திறமையாக எதிர்கொள்வது எப்படி