×

மாவட்ட நிர்வாகம் வெளிப்படை தன்மையுடன் செயல்படும் அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைந்ததை பணிகள் உறுதிப்படுத்தும்

*புதிய கலெக்டர் லட்சுமிபதி பேட்டி

தூத்துக்குடி : அரசின் அனைத்து திட்டங்களும் மக்களை சென்றடைந்துள்ளதை உறுதி செய்யும் வகையில் ஒருங்கிணைந்து பணிகள் மேற்கொள்ளப்படும் என தூத்துக்குடி மாவட்ட புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ள லட்சுமிபதி கூறினார். தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக இருந்த செந்தில்ராஜ், தமிழ்நாடு சிப்காட் இயக்குநராக மாற்றப்பட்டார். இதையடுத்து செங்கல்பட்டு சப்-கலெக்டராக இருந்த லட்சுமிபதி, பதவி உயர்வில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.

நேற்று அவர், தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத்தின் 27வது கலெக்டராக பொறுப்பேற்றார். தூத்துக்குடி மாவட்டம் 20.10.1986ம் ஆண்டு உருவானது. மாவட்டம் உருவான நாளில் பொறுப்பேற்ற புதிய கலெக்டர் லட்சுமிபதிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், சப்-கலெக்டர் கவுரவ்குமார், பிஆர்ஓ நவீன்பாண்டியன், ஏபிஆர்ஓ முத்துக்குமார் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் கலெக்டர் லட்சுமிபதி, நிருபர்களிடம் கூறியதாவது:தூத்துக்குடி மாவட்டம் ஒரு மாநகராட்சி, 2 நகராட்சி, 12 யூனியன்கள், 18 பேரூராட்சிகள், 403 ஊராட்சிகளை உள்ளடக்கியதாகும். இந்த மாவட்டத்தின் நகர்ப்புறம் மற்றும் ஊரக பகுதிகளுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள் அனைத்து அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படும். அரசின் அனைத்து திட்டங்களும், அனைத்து மக்களையும் சென்றடைந்து உள்ளதா என்பது குறித்து கள ஆய்வு மூலம் உறுதி செய்யப்படும். மக்களின் அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை வசதி, பொது சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு குறைதீர்க்கும் கூட்டங்கள் மூலம் பெறப்படும் மனுக்களுக்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். நான் முதல்வன் திட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி அளிப்பது, பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டம், காலை உணவுத் திட்டம் போன்றவை குறித்து முறையாக ஆய்வு செய்யப்படும். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முடிந்து வகுப்புகள் ஆரம்பித்துள்ளது. எனவே, அவர்களுக்கு கல்வி கடன் கிடைப்பதற்காக 2 வாரத்தில் கல்விக் கடன் மேளா நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விமான நிலையம், துறைமுகம், ரயில்வே உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் ஒருங்கே அமைந்துள்ளதால், பொருளாதார வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கிறது.எனவே தொழில் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், போதைப்பொருட்களை கட்டுப்படுத்தவும் காவல் துறையினருடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும். குலசேகரன்பட்டினம் தசரா விழா தொடர்பாக முந்தைய கலெக்டர் அனைத்து பணிகளையும் முடித்து வைத்துள்ளார். நானும் திருச்செந்தூரில் வைத்து தசரா விழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பாக ஆய்வு கூட்டம் நடத்த உள்ளேன்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்படும். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள மனுக்களுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட நிர்வாகத்தில் பணிகள் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்தப்படும், என்றார்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள கலெக்டர் லட்சுமிபதி வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் கடந்த 1996ம் ஆண்டு ஊரக வளர்ச்சி துறை கூடுதல் இயக்குநராக பணியை தொடங்கியுள்ளார். தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை கூடுதல் இயக்குநராகவும், அதனைத்தொடர்ந்து செங்கல்பட்டு சப்-கலெக்டராகவும் பணியாற்றியுள்ளார்.

The post மாவட்ட நிர்வாகம் வெளிப்படை தன்மையுடன் செயல்படும் அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைந்ததை பணிகள் உறுதிப்படுத்தும் appeared first on Dinakaran.

Tags : Lakshmipathy ,Thoothukudi ,
× RELATED மகளிர் குழு பொருட்கள் விற்கப்படும்...