×

தரைவழி தாக்குதலை தொடங்க ஆயத்தம் காசா மீது மீண்டும் இஸ்ரேல் குண்டுமழை: லெபனான் எல்லை நகரங்களிலும் பதற்றம்

ஜெருசலேம்: காசா மீது தரைவழித்தாக்குதலை தொடங்க இஸ்ரேல் ஆயத்தமாகி விட்டது. அதன் அறிகுறியாக காசா மீது மீண்டும் இஸ்ரேல் குண்டுமழை பொழிந்தது. இதனால் லெபனான் எல்லையிலும் பதற்றம் ஏற்பட்டது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் உக்கிரத்தை எட்டி உள்ளது. காசா பகுதியில் வாழும் 11 லட்சம் மக்கள் வெளியேற இஸ்ரேல் அவகாசம் வழங்கியது. அதை தொடர்ந்து நேற்று காசா மீது சரமாரி குண்டுமழையை இஸ்ரேல் போர் விமானங்கள் பொழிந்தன. மேலும் காசா மீது தரை வழித்தாக்குதலுக்கு இஸ்ரேல் முழுமையாக தயாராகி விட்டது.

அதே சமயம் காசா மருத்துவமனை மீதான குண்டு வீச்சில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் வேண்டுகோளுக்கு இணங்க எகிப்தில் இருந்து மனிதாபிமான உதவிகள் அனுமதிக்கப்படும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் லெபனான் எல்லையில் உள்ள நகரங்கள் அனைத்திலும் இஸ்ரேல் படை குவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கும் பதற்றம் உருவாகி உள்ளது. ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க இஸ்ரேல் ராணுவம் தரைவழித்தாக்குதலை எப்போது வேண்டுமானாலும் நடத்தும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் யேவ் கேலண்ட் தெரிவித்தார். அங்கு விமானத்தாக்குதல் முடித்த பிறகு, உடனடியாக தரைவழித்தாக்குதல் தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த போரில் இதுவரை 3,785 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும் கிட்டத்தட்ட 12,500 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஹமாஸ் நடத்தும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே போல் இஸ்ரேலில் 1,400 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் காசாவிற்குள் ஹமாஸ் அமைப்பினரால் கடத்திச்செல்லப்பட்ட 206 பேரின் குடும்பங்களும் கொல்லப்பட்டுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்து உள்ளது. காசாவின் பழைய நகரத்தின் அல்-ஜாய்துன் பகுதியில் தேவாலயத்தில் ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளை வைத்துள்ளனர். அங்குள்ள 200 பேரில் 30 பேர் சிறுவர்கள் என்று கூறப்படுகிறது. மேலும் காணாமல் போன 100க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களின் இருப்பிடம் குறித்து அதிகாரிகளிடம் எந்த தகவலும் இல்லை. அவர்கள் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. அதே போல் காசாவின் அல்-அஹ்லி மருத்துவமனையில் நடந்த குண்டுவெடிப்பில் 100 முதல் 300 பேர் வரை இறந்ததாக அமெரிக்க உளவுத்துறை கணித்துள்ளது.

* ஏமன் ஏவுகணைகளை தடுத்த அமெரிக்க படை

ஏமனில் இருந்து இஸ்ரேல் நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளை அமெரிக்க கடற்படை இடைமறித்து அழித்துள்ளது. ஏமனில் இருந்து ஏவப்பட்ட மூன்று ஏவுகணைகளை அமெரிக்க கடற்படை போர்க்கப்பல் கைப்பற்றி அழித்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த ஏவுகணைகள் இஸ்ரேலை இலக்காக சென்றதா அல்லது அமெரிக்க கப்பலை குறிவைத்து ஏவுகணைகள் வீசப்பட்டதா என்பது தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

* போரை நிறுத்த சவுதி அழைப்பு

வளைகுடா மற்றும் ஆசிய நாடுகளின் உச்சி மாநாடு போர் நிறுத்தத்திற்கான அழைப்போடு நிறைவடைந்தன. சவுதி அரேபியா நடத்திய வளைகுடா நாடுகளின் உச்சிமாநாட்டின் இறுதி அறிக்கையில் சவுதி அரேபியா, சண்டையை நிறுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளது.

* லெபனான்-இஸ்ரேல் மோதலில் ஒருவர் பலி

தெற்கு லெபனானில் உள்ள லெபனான் படைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும் இதில் ஒருவர் பலியாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் 7 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

* ஹமாஸ் தாக்குதலில் தாய்லாந்து நாட்டை சேர்ந்த 30 பேர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. முதற்கட்டமாக 8 பேரின் உடல்கள் பாங்காக் சென்றடைந்தன.

* இஸ்ரேல் சென்ற இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் அங்கிருந்து எகிப்து சென்றார். அங்கு எகிப்து அதிபர் அப்டெல் பத்தாக் எல் சிசியை சந்தித்து பேசினார்.

* இஸ்ரேல் போரை தொடர்ந்து வெளிநாடுகளில் அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடப்பதால் அனைவரும் உஷாராக இருக்க அமெரிக்கா எச்சரித்து உள்ளது.

The post தரைவழி தாக்குதலை தொடங்க ஆயத்தம் காசா மீது மீண்டும் இஸ்ரேல் குண்டுமழை: லெபனான் எல்லை நகரங்களிலும் பதற்றம் appeared first on Dinakaran.

Tags : Israel ,Gaza ,Jerusalem ,Dinakaran ,
× RELATED ஒளிபரப்பு தடை செய்யப்பட்ட நிலையில்...