×

தளி அருகே யானை மிதித்து வாலிபர் பலி: பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை


தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே அடையாளம் தெரியாத வாலிபர் யானை மிதித்து பலியானார். கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள நெல்லுமார் கிராமத்தில் ராகி வயலில் அடையாளம் தெரியாத சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடலில் காயங்களுடன் இன்று காலை இறந்து கிடந்தார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தளி காவல்நிலையத்திற்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் வனச்சரக அலுவலர் முரளிதரன் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்தனர். அப்பகுதியில் ஆய்வு செய்து பொதுமக்களிடம் விசாரணை நடத்தியதில், நெல்லுமார் காட்டு பகுதியில் உணவு தேடி வந்த யானை, வாலிபரை மிதித்து கொன்றது தெரியவந்தது.

இதையடுத்து தளி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். யானை மிதித்து இறந்த வாலிபர் அடையாளம் தெரியவில்லை. அவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பலியான வாலிபர் மனநலம் பாதித்து சுற்றித்திரிந்துள்ளார். இதனிடையே விவசாய நிலங்களில் யானை நடமாட்டம் உள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் எச்சரிக்கையுடன் வெளியே வருமாறு வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

The post தளி அருகே யானை மிதித்து வாலிபர் பலி: பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tali ,Dhenkanikottai ,Thali ,Krishnagiri district ,Dinakaran ,
× RELATED ஓசூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு