×

கவர்னர் பதவி கிடைக்காததால் பாஜ தேசிய தலைவர்கள் மீது எச்.ராஜா கடும் அதிருப்தி

சென்னை: கவர்னர் பதவி வழங்காததால் தமிழக பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா கடும் அதிருப்தியில் உள்ளார். தமிழக பாஜ மூத்த தலைவர்களில் ஒருவர் எச்.ராஜா. அவருக்கு தேசிய செயலாளர் பதவி இருந்ததால் தமிழக பாஜவில் கோலோச்சி வந்தார். இந்நிலையில் அவரின் தேசிய செயலாளர் பதவி 2020 செப்டம்பரில் பறிக்கப்பட்டது. அதே நேரத்தில் அவருக்கு தமிழ்நாட்டில் எந்த பொறுப்பும் வழங்கவில்லை. ஆனால், எச்.ராஜாவுக்கு பின்னால் வந்தவர்களுக்கு கட்சியில் தாராளமாக பதவி வழங்கப்பட்டது. ராஜாவுக்கு பதவி எதுவும் இல்லாததால் அவர் கட்சி மேலிடம் மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்தார். அவரை சமாதானப்படுத்தும் வகையில் அவருக்கு கவர்னர் பதவி வழங்கப்படும் என்று கடந்த காலத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

இதனால், கவர்னர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் ராஜா இருந்தார். அவருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. ஆனால், அவரைவிட ரொம்ப ஜூனியராகவும், தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடையந்த தமிழிசை சவுந்தரராஜனுக்கு உடனடியாக கவர்னர் பதவி வழங்கப்பட்டது. அதாவது 2019ம் ஆண்டு தெலங்கானா ஆளுநராக அவர் நியமனம் செய்யப்பட்டார். தொடர்ந்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவி கூடுதலாக தமிழிசைக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து, எச்.ராஜா எந்த மாநிலத்திலாவது கவர்னர் பதவி காலியானால் தனக்கு பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு பாஜவில் மூத்த தலைவராக வலம் வந்த முன்னாள் தலைவர் இல.கணேசன் 2021 ஆகஸ்ட் 22ம் தேதி மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டார். முன்னதாக அவர் மேற்குவங்க ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். தொடர்ந்து, பாஜவில் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா ஆகியோர் மூத்த தலைவர்களாக இருந்து வந்தனர். மேலும், ஆளுநர் வரிசையில் சி.பி.ராதாகிருஷ்ணன் இடம்பிடித்தார். அவருக்கு ஜார்க்கண்ட் ஆளுநர் பதவி வழங்கப்பட்டது. அதே நேரத்தில் மூத்த தலைவரான பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தமிழக பாஜவில் பொறுப்பாளர் பதவி உள்ளதால் அவர் கட்சி பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

அதே நேரத்தில், மூத்த தலைவரான தனக்கு எந்த பதவியும் இல்லை என்பதால் கட்சி பணியையும், மக்கள் பணியையும் ஆற்ற முடியவில்லையே என்ற கடும் வருத்தத்தில் எச்.ராஜா இருந்து வந்தார். ஒடிசா, திரிபுரா போன்ற மாநிலங்களுக்கான கவர்னர் பதவி காலியானது. இதிலாவது தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எச்.ராஜா எதிர்பார்த்து இருந்தார். இதற்கிடையே, எச்.ராஜாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சூழலில் 2 மாநிலங்களுக்கான புதிய கவர்னர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். அதிலும் எச்.ராஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால், அவர் ஏமாற்றத்துடன் இருந்து வருகிறார். ஆளுநர் பதவி என்பது அரசியலில் இருந்து வழங்கப்படும் ஓய்வுக்கு பிறகான பதவி போன்றது. ஆக்டிவ் அரசியலில் இருந்து ஒதுக்கி தள்ளாமல் அவர்களுக்கு மரியாதையாக வழங்கப்படும் அரசியலில் ஓய்வு ஆகும். கவர்னர் பதவி கிடைத்தால் தனக்கு ஒரு கவுரவம் என்று தலைவர்கள் நினைத்து வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் வேறு நெருங்குகிறது. இந்நிலையில் எச்.ராஜாவுக்கு கட்சியில் எந்த பொறுப்பும் இல்லாததும், அவருக்கு கவர்னர் பதவி வழங்கப்படாததும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

The post கவர்னர் பதவி கிடைக்காததால் பாஜ தேசிய தலைவர்கள் மீது எச்.ராஜா கடும் அதிருப்தி appeared first on Dinakaran.

Tags : H. Raja ,BJP ,CHENNAI ,Tamil ,Nadu ,H.Raja ,Tamil Nadu ,
× RELATED பாஜ தேர்தல் அலுவலகம் திறப்பு