×

என்னை நெருங்குபவர்கள் யார்?

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஸ்ரீகிருஷ்ண அமுதம் – 58

(பகவத்கீதை உரை)

நற்காரியங்களில் நாட்டம் கொள்ளும் மனம், புலனடக்கம், சகிப்புத் தன்மை, விவேகம், தவம், வாய்மை, கருணை, மகிழ்ச்சி, நம்பிக்கை, பாவம் செய்யக் கூச்சப்படுதல், தன்னிலேயே மகிழ்ந்திருத்தல், தானம், பணிவு மற்றும் எளிமை ஆகிய இயல்புகளைக் கொண்டது, சத்வகுணம். இந்த சத்வகுணத்தால், தன் செயல்களை பகவானுக்கு அர்ப்பணம் செய்வது, பலன் எதிர்பாராமல் செயலாற்றுவது ஆகியன சாத்தியமாகும்.

ஊக்கம், ஞானம், வீரம், தருமம், தானம், கல்வி, ஆசை, முயற்சி, இறுமாப்பு, வேட்கை, திமிர், தெய்வங்களிடம் செல்வங்கள் வேண்டுவது, வேற்றுமை எண்ணம், புலனின்பப் பற்று, சண்டைகளில் ஆர்வம், புகழில் ஆசை, மற்றவர்களை எள்ளி நகையாடுவது, பராக்கிரமம், பிடிவாதம், பயனில் விருப்பம் கருதி செய்யும் செயல்கள் ஆகிய இயல்புகளைக் கொண்டிருப்பது ரஜோகுணம். இந்த ரஜோகுணத்தால், இன்பத்தில் பற்று, அசுரத்தன்மை, செயல் புரிவதில் ஆர்வம், கனவில் சஞ்சரிப்பது ஆகியன சாத்தியமாகும்.

காமம், வெகுளி, மயக்கம், கலக்கம், கோபம், பேராசை, பொய் பேசுதல், இம்சை, யாசித்தல், வெளிவேஷம், சிரமம், கலகம், வருத்தம், மோகம், கவலை, தாழ்மை, உறக்கம், அச்சம், சோம்பல், தகுதியில்லாமல் பிறர் பொருட்களை விழைதல், பிறர்க்கு கேடு விளைவித்தல், பகட்டுச் செயல்கள் ஆகிய இயல்புகளைக் கொண்டிருப்பது தமோ குணம். இந்த தமோ குணத்தால் சோம்பல், ராட்சசத் தன்மை, மோகம் ஆகியன சாத்தியமாகின்றன.

வெறும் தோற்றமும், சரும நிறமும் ஒருவர் ஒரு குறிப்பிட்ட வர்ணத்தை, குலத்தைச் சார்ந்தவர் என்பதற்கான தீர்மானமான அடையாளங்கள் இல்லை என்பதையும் உணர வேண்டும். சத்வகுணம் என்ற பிரிவில் வருபவர் வெண்மை நிறத்தவர் என்றால், உலகில் எல்லா வெண்மை நிறத்தவரும் அந்தப் பிரிவில் அடங்க வேண்டும். ஆனால், எல்லா வெண்மை நிறத்தவரும் சத்வகுணத்தின் இயல்புகளைக் கொண்டிருப்பதில்லை என்பது அனுபவ பூர்வமான உண்மை. ஆகவே, வெறும் நிறம் ஒருவரை மேலே சொன்ன மூன்று பிரிவுகளுக்குள் பாகுபடுத்தாது, அவரவர் தனிப்பட்ட குணம்தான் பாகுபடுத்தும்.

இன்றைய சூழலில் கிருஷ்ணன் வகுத்த வர்ணங்கள் சர்ச்சைக்குரியதாகவே தோன்றுகின்றன. ஆனால், அந்த நான்கு வர்ணங்களுக்குள் நாற்பதாயிரம் பிரிவுகளை உண்டாக்கியது கிருஷ்ணன் அல்ல, நாம்தான். நான்கு வர்ணத்தாருக்குள் கொள்கை மாற்றமோ, பேதமோ இருந்தால் அது அந்தந்த வர்ணத்தின் அடிப்படை குணம் என்று ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், ஒரு வர்ணத்துக்குள்ளேயே இத்தனை பாகுபாடுகளை, பிரிவுகளை மற்றும் வன்மத்தை ஆரம்பித்ததும், வளர்த்ததும், இப்போது அதைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுவதும் யார் பொறுப்பில் நிகழ்ந்தன?

குறிப்பிட்ட வர்ணத்தார் அனைவராலும், உலகம் முழுவதும் ஒரே கொள்கையை, ஒரே வாழ்க்கை முறையை அனுசரிக்க முடிவதில்லையே, ஏன்? எந்தப் புள்ளியிலிருந்து இந்தப் பிரிவினைகள் கிளைவிட்டன? வழிவழியாக வந்த வாழ்க்கைமுறை ஒரு கட்டத்தில், ஒரு நபர் மற்றும் அவர் சொல்வது சரி என்று நினைக்கும் அவரது கூட்டத்தால் புறம்பாக மாறியிருக்கவேண்டும். இந்த மாற்றத்துக்கு என்ன காரணம்?

அந்த நபர் மற்றும் அவருடைய கூட்டத்தாரின் சுயவிழிப்புதான். மாற்றம் வேண்டும் என்பதற்காக மட்டும் இந்த சுயவிழிப்பு ஏற்பட்டிருந்தால் பரவாயில்லை. ஆனால், தனக்கு முக்கியத்துவம் தரப்படவேண்டும், முந்தைய வழிமுறைகளிலிருந்து திசை திரும்பினால்தான் தான் பிறரால் கவனிக்கப்பட முடியும், இந்த வகையில் தன்னை ஆதரிக்கும் ஒரு கூட்டம் தன் பின்னால் வரும், தன் சமுதாய பலம் அதிகரிக்கும், தனக்கென ஒரு பிரிவை அந்த வர்ணத்துக்குள்ளிருந்தபடியே உருவாக்கிக்கொள்ள முடியும்.

இதெல்லாம் கிருஷ்ணன் உபதேசித்ததல்ல, நாமே ‘நான்’ என்ற அகங்காரத்தில் வளர்த்துக் கொண்டவை. ஏனென்றால் குணம் மற்றும் கர்மத்தை அனுசரித்துதான் நான்கு வர்ணங்களை உருவாக்கியதாக கிருஷ்ணன் சொல்கிறார். அந்த நான்கை நாற்பதாயிர உட்பிரிவுகளாக மாற்றிக் கொண்டது நம் ‘குணம்’தான், ‘நான்’ என்ற அகங்காரம்தான். பகவான் படைத்த அணுவை நாம் துளைக்கிறோம். அதன் சக்தியைப் பலகோடி மடங்கு பெருக்குகிறோம். ஆனால், அந்தப் பெரும் சக்தியை நாம் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துகிறோமா? ஹிரோஷிமா, நாகசாகி என்ற இயற்கைப் பூங்காவைக் கொலைக்களமாக அல்லவா மாற்றிவிட்டோம்!

அணுவின் சித்தாந்தம் இயற்கை பூர்வமானதுதான், ஆனால் அதன் சிதைவிற்கும், பின்விளைவுகளுக்கும் நாம்தானே பொறுப்பு?

ஆகவே, நம் அகங்காரம்தான் நம் பிரிவினைகளுக்கும் சரி, அந்தப் பிரிவினைகளுக்கிடையேயான பகைமைக்கும், தொடர்ந்த அழிவிற்கும் காரணம். ஏனென்றால் எந்தத் தீவினைக்கும் மூலகாரணமே நம் அகங்காரம்தான். யோசித்துப் பாருங்கள், எந்த விவாதத்திலும் ‘நீங்கள் சொல்வது சரிதான்,’ என்ற சொற்றொடர் எத்தனை சுமுகமான சூழ்நிலையை உருவாக்குகிறது! ஆனால், துரதிருஷ்டவசமாக ஒரு விவாதம், எது சரி என்று தீர்மானிக்காமல், யார் சரி என்று தீர்மானித்தே விரோதத்தை வளர்க்கிறது! விவாதம் இவ்வாறு கெடுபலனோடு முடியக் காரணம் அதில் ஈடுபடுவோரின் அகங்காரம்தான்.

மென்மையாகத் தம் கருத்தை எடுத்துச் சொல்லி, எதிர் கருத்துக்கும் உரிய முக்கியத்துவம் கொடுத்து, நம் கருத்து தவறென்றால் எந்தத் தயக்கமுமின்றி அதை ஒப்புக் கொண்டு, மாற்றுக் கருத்துக்கு மதிப்பளித்து ஏற்றுக் கொள்ளும் குணம் உலகெங்கும் அன்பை விதைக்கவல்லது, பகையை அழிக்கவல்லது. ஆக, இவ்வாறு குலத்தை நிர்ணயிக்கும் குணத்தைப் பற்றி கிருஷ்ணன் சுருக்கமாக அர்ஜுனனிடம் சொல்கிறார்.

ந மாம் கர்மாணி லிம்பந்தி நமே கர்மபலே ஸ்ப்ருஹா
இதி மாம் யோபிஜானாதி கர்மபிர் ந ஸ
பத்யதே (4:14)

‘‘கர்ம பலன்களில் நான் ஆர்வம் காட்டுவதில்லை. எனக்கு எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. அதனால் நான் எந்த நிர்ப்பந்தத்துக்கும் உள்ளாவதில்லை. அந்தக் கர்மங்களுக்கும் எனக்கும் இடையே எந்த பந்தமுமில்லை. இப்படிப்பட்ட என்னை அறிந்துகொள்பவர்களும் தங்களது கர்மத்தின் பலன்களிலிருந்து விலகியே இருக்கிறார்கள்’’நம் கர்மாக்களில் – பணிகளில் – நமக்கு எப்போது ஈடுபாடு வருகிறது? அந்தக் கர்மாக்களின் விளைவுகளை நாம் எதிர்பார்க்கும்போதுதான். பெரும்பாலும் நன்மைகளையே எதிர்பார்ப்பது நம் இயல்பு. அதேபோல எதிர்பாராதது நடந்தால் நொந்துபோவதும் நம் இயல்புதான்.

கடற்கரையில் காலாற நடந்து போகிறோம். இதில் நடக்கவேண்டும் என்பது மட்டுமே நம் கர்மாவாக இருக்கிறது. இவ்வாறு நடப்பது என்பது, நாம் நடந்து முடித்தபிறகு கிடைக்கக்கூடிய எந்தப் பலனையும் எதிர்பார்த்து அல்ல. ‘ஏங்கே சார், இப்படி…?’ என்று யாராவது கேட்பாரானால், ‘சும்மா சார், வாக்கிங்,’ என்று பதில் சொல்கிறோம். அந்த ‘சும்மா’வில்தான் இருக்கிறது நாம் அந்த நடையால் பயன் எதையும் எதிர்பார்க்கவில்லை என்பது. சிறிதுநேரம் அப்படி நடந்துவிட்டு வீட்டிற்குத் திரும்புகிறோம்.

உடனே பரபரப்பு தொற்றிக்கொள்கிறது. அலுவலகம் புறப்படவேண்டும். தேவையானவற்றை எடுத்துக்கொண்டு வேகமாக பேருந்து நிலையம் நோக்கி நடக்கிறோம். இந்த நடையில் ஒரு வேகம் இருக்கிறது. (கடற்கரை நடையில் நிதானம் இருந்தது.) நடந்தோடிப் போய்ப் பேருந்தைப் பிடித்துவிடவேண்டும், உரிய நேரத்திற்குள் அலுவலகம் சென்றுவிடவேண்டும்.

அலுவலகக் காரணமான நடையில் பலனை எதிர்பார்க்கும் மனநிலை இருக்கிறது. பேருந்து கிடைக்குமா, உட்கார்ந்துகொண்டு பயணிக்க இருக்கை கிடைக்குமா, உரிய நேரத்தில் பேருந்து எடுக்கப்பட்டுவிடுமா, வழியில் எங்கும் போக்குவரத்துத் தடை ஏற்படா திருக்க வேண்டுமே, பேருந்துக்கு எந்த விபத்தும் நேரக்கூடாதே, இறங்கவேண்டிய நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டு அலுவலகத்துக்கு உரிய நேரத்துக்குள் போய்ச் சேர்ந்துவிட வேண்டு மே என்ற அடுத்த மணிநேரத்துப் பலன்களையெல்லாம் இந்த நடை எதிர்பார்க்கிறது!

ஆனால், கடற்கரை நடைக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. ‘சும்மா’ போகிறோம். நடக்கிறோம், திரும்புகிறோம். இந்த நடையின்போது சிலரை சந்திக்கலாம், சிலருடன் பேசவேண்டியிருக்கலாம். ஆனாலும், எந்தப் பதட்டமும் இல்லை. அவசரம் இல்லை. காரணம் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. இப்படி கர்ம பலன்களில் ஆர்வம் காட்டாத கடற்கரை நடை போன்ற தன்மை நம் எல்லா செயல்களிலும் அமைந்துவிடுமானால், அப்புறம் கிருஷ்ணனை எட்டுவது எளிது!

எந்தப் பலனையும் எதிர்பாராமல் ஒரு கர்மாவை எதற்காக மேற்கொள்ளவேண்டும்? இங்கே ‘எதிர்பார்ப்பது’ என்பதைக் கொஞ்சம் ஆழமாக கவனிக்க வேண்டும். விளைவுகளால் மகிழ்வது அல்லது துக்கப்படுவதுதான் இந்த ‘எதிர்பார்த்த’லின் தன்மை. ‘என்னவேண்டுமானாலும் நடக்கட்டும், நம் கர்மாவை ஒழுங்காகச் செய்வோம்’ என்று பணியில் ஈடுபடும்போது ‘எதிர்பார்த்தல்’ மறைந்து விடுகிறது. கர்மாவை சிரத்தையாகச் செய்து முடிக்க வேண்டிய செயலாற்றல் அதிகரிக்கிறது, எத்தகைய பின்விளைவுகளையும் எதிர்கொள்ளும் துணிவு பிறக்கிறது.

அதற்கேற்ப தொடர்ந்து செயல்படுவதற்காக, அறிவும் மேம்படுகிறது. ஒவ்வொரு நாளும் நமக்கு இந்தப் பாடத்தைச் சொல்லிக் கொடுக்கத்தான் செய்கிறது. நமக்கு இன்றைய பொழுதுதான் சாஸ்வதம். நாளை என்பது நம் திட்டமிடலுக்கு உட்படுவதானாலும் அது நமக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கிறதா என்பதை யோசிக்கவேண்டும். ‘நன்றே செயினும் இன்றே செய், இப்போதே செய்’ என்பார்கள். அதாவது, பிறருக்காகச் செய்ய நினைத்திருக்கும் நன்மைகளை ஒத்திப்போடாதே என்ற அறிவுறுத்தல்.

தன்னிடம் யாசகம் கேட்டு வருபவர்களுக்கெல்லாம் வாரி வாரி வழங்கினான் கர்ணன். அவ்வாறு கொடுக்கும்போது, அருகிலிருந்த அமைச்சர், ‘‘வலது கையால் தானமளிப்பதுதான் முறை. இடது கையால் கொடுப்பது சம்பிரதாயமல்ல; அதோடு தானம் பெறுபவரின் கரம் தாழ்ந்திருக்கவேண்டும், கொடுப்பவரின் கரம் உயர்ந்து இருக்கவேண்டும். நீங்கள் இரண்டையும் முரணாகச் செய்கிறீர்கள்…’’ என்று தன் கருத்தைச் சொன்னார்.

கர்ணன் அவரைப் பார்த்துத் திரும்பினான். ‘‘தானமளிக்கவேண்டும் என்பது நான் மேற்கொண்டிருக்கும் கர்மம். தானமளிப்பதுதான் முக்கியம் எந்தக் கையால் அளிக்கிறேன் என்பதைவிட, ஒருவேளை இடது கையால் பொருளை எடுத்து வலதுகைக்கு மாற்றும்போது என் மனமும் மாறிவிட்டால்…? இப்படி தானம் செய்யத்தான் வேண்டுமா என்று தோன்றிவிட்டால்..? அதற்கு இடம் கொடுக்காதிருக்கத்தான் எந்தக் கை முன்வருகிறதோ, அந்தக் கையால் தானமளிக்கிறேன்.

அதேபோல தானமளிக்கும் என் கரம் தாழ்ந்து இருப்பதே என்னைப் பொறுத்தவரை சரியானது. தானம் பெறுபவர் என் கரத்திலிருந்து எடுத்துக் கொள்ளட்டும். தேவை உள்ளவர் என்பதால் அவர் என் கையிலிருக்கும் பொருட்களை முற்றிலுமாக எடுத்துக்கொண்டுவிட முடியும். நான் என் கைகளை உயர்த்தி தானம் இடுவேனானால், அந்தக் கண நேரத்தில், ‘இவருக்கு இத்தனைப் பொருள் கொடுக்கத்தான் வேண்டுமா? குறைவாகக் கொடுத்தால் போதாதா?’ என்ற எண்ணம் எனக்குள் தோன்றிவிடக்கூடும். அப்போது என்னையே அறியாமல் என் விரல்கள் அந்தப் பொருட்களில் கொஞ்சத்தைப் பற்றிக் கொள்ளக்கூடும். அது தானம் பெறுபவருக்கு ஏமாற்றத்தை அளிக்கலாம். இதைத் தவிர்ப்பதற்காகவும்தான் நான் என் கைகளைத் தாழ வைத்துக்கொள்கிறேன்,’’ என்றான்.

தான் யாருக்கு தானம் கொடுத்தோமோ அவரிடமிருந்து பதிலுக்குத் தனக்கு என்ன கிடைக்கும் என்றெல்லாம் கர்ணன் சிந்தித்ததில்லை. ஏன், அவர் மனதில் தன்மீதான மதிப்பு உயரும் என்றுகூட அவன் எதிர்பார்த்ததில்லை. தானம் கொடுப்பது என்ற தன்னுடைய கர்மாவை அவன் மிகுந்த சிரத்தையோடு நிறைவேற்றினான் என்றால் அதற்கு அந்த எதிர்பார்க்காத நோக்கம்தான் முக்கிய காரணம். (அதனால்தான் தன் இறப்பு நாளில் தன் தான, தர்மக் காரியங்களின் பலன்களையெல்லாம் கிருஷ்ணனுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தான் அவன்! அப்போதும் அவன் இந்த ‘தானத்’தால் தனக்கு முக்தி கிடைக்கும், சுவர்க்கலோகம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை, மாறாகத் தான் தானமளிக்கத் தன்னிடம் இது மிச்சமிருக்கிறதே என்ற மகிழ்ச்சிதான் அவனுக்கு ஏற்பட்டது, வலிமிகுந்த அந்த இறப்புத் தறுவாயிலும்!)

மனமாற்றம் என்பது அது சந்தோஷமாகவோ, துக்கமாகவோ மாற, கண்ணிமைக்கும் நேரம் போதும். ஆகவே, நல்லனவற்றை, எதைப் பற்றியும் யோசிக்காமல் உடனே நிறைவேற்ற வேண்டும் என்று பெரியவர்கள் அறிவுறுத்தினார்கள். இதுவரை கிருஷ்ணன் செய்த கர்மாக்கள், இனி செய்யப்போகும் கர்மாக்கள் எல்லாமே அந்தந்த காலத்துக்கு ஏற்றதாக, அந்தந்த நபரின் தகுதிக்கு ஏற்றதாக அந்தந்த சூழ்நிலையின் போக்குக்கு ஏற்றதாகவே அமைந்திருந்தன என்றால், அந்த கர்மாக்களின் பின்விளைவாக அவர் எதையும் எதிர்பார்க்கவில்லை என்றுதான் அர்த்தம்.

அதது அப்பப்படி நடந்தது, அவ்வளவுதான். அதில் எந்த சுயலாபமும் இல்லை, எந்த நஷ்டமும் இல்லை. இப்படித் தன் குணம் ஒத்தவர்கள்தான் தன்னுடன் சங்கமிக்கிறார்கள் என்கிறார் கிருஷ்ணன். நாளை என்ற ஒன்று இருப்பதால்தான் எதிர்பார்ப்பும் இருக்கிறது. ஆனால், நாளை என்பது இருக்கட்டும், அன்றும் நம் கர்மங்கள் தொடரட்டும், ஆனால், நேற்று எப்படி எதையும் எதிர்பார்க்காமல் செய்தோமோ, இன்று எப்படி எந்த விளைவுகளிலும் ஆர்வம் காட்டாமல் செய்தோமோ, அதேபோல நாளையும் செய்தோமானால் நாம் கிருஷ்ணனை நெருங்குகிறோம் என்று அர்த்தம் – நேற்று, இன்று, நாளை பொழுதுகளில் ஒரேமாதிரியாக நாம் கர்மாக்களை இயற்றும் பட்சத்தில்!

பகவானைப் பொறுத்தவரை நேற்று, இன்று, நாளை எல்லாமே ஒரே காலமாக இருப்பதால் அவருக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. மனிதப் பிறவிக்குதான் இந்த காலக் கணக்கு. அதனாலேயே பலாபலன்களுக்கு அடிமையாகவேண்டியிருக்கிறது. ‘நேற்றுபோல் இன்று இல்லை, இன்றுபோல் நாளையில்லை,’ என்று நாம் பாடவும் வேண்டியிருக்கிறது! ஆனால், பரம்பொருளுக்கு எல்லா நாளும் ஒரே நாளே. அதனால்தான் அவரால் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க முடிகிறது. இந்தப் பற்றற்ற தன்மையைப் பயிலும் யாரும் பகவானை நெருங்கலாம், சேரலாம், ஐக்கியமாகிவிடலாம்.

வேடிக்கை பாருங்கள், கர்மங்களின் பலன்களிலிருந்து விலகி இருப்பவர்கள், பகவானிடம் நெருங்கிச் செல்கிறார்கள்! இப்படி பகவானுடன் ஒன்றிணைவதிலும்கூட இத்தகையவர்கள் எந்த பலனையும் எதிர்பார்ப்பதில்லை. ஏனென்றால் அவ்வாறு இணைவதையும் தம் கர்மாக்களில் ஒன்றாக அவர்கள் கருதுவதுதான்!

(கீதை இசைக்கும்)

தொகுப்பு: பிரபு சங்கர்

The post என்னை நெருங்குபவர்கள் யார்? appeared first on Dinakaran.

Tags : Anmikam ,Srikrishna Amutham ,
× RELATED பஞ்சதேகமூர்த்தி