×

பக்கிங்ஹாம் கால்வாயில் பயணித்த மினியேச்சர் வீடு!

நன்றி குங்குமம் தோழி

கொலு பண்டிகை… ஒன்பது நாட்களும் என்னென்ன பொம்மைகளை படிக்கட்டில் வைக்கலாம். பார்க் கட்டலாமா, புதிதாக தீம் அமைக்கலாமா என்று வீட்டில் உள்ளவர்கள் திட்டமிடுவார்கள். ஆனால் 85 ஆண்டுகளுக்கு முன் தன் அம்மாவால் வடிவமைக்கப்பட்ட அவர்கள் வாழ்ந்த வீட்டினை நவராத்திரியின் போது மட்டுமல்லாமல் வருடம் முழுதும் அலங்காரம் செய்து அதனை பார்த்து பார்த்து ரசித்து வருவது மட்டுமில்லாமல் நவராத்திரி ஒன்பது நாட்களும் அதையே ெகாலுவாகவும் மாற்றியுள்ளார். அம்மாவின் கையால் அலங்கரிக்கப்பட்ட வீடு எப்படி நவராத்திரி கொலு வீடாக மாறியது பற்றி கூறுகிறார் ஸ்ரீலட்சுமி.

‘‘எங்க வீடு சென்னை பாரிஸ் கார்னரில் தான் இருந்தது. அந்தக் காலத்தில் பாரிஸ் கார்னர்தான் டவுன். அம்மாவிற்கு சின்ன வயசில் இருந்தே கைவினை செய்வதில் ஆர்வம் அதிகம். அப்பாவிற்கு சொந்தமாக பிசினஸ் என்பதால், அவர் இந்தியா மட்டுமில்லாமல் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வது வழக்கம். என் கூட பிறந்தவங்க 12 பேர். அம்மாவிற்கு வீடு, நாங்கதான் உலகம். அதனாலேயே இந்த வீட்டை அமைத்திருக்கிறார் என்று சொல்லணும். அம்மா வடிவமைத்த மினியேச்சர் வீடு இப்போது இல்லை என்றாலும் அதைப் பார்க்கும் போது எங்களின் சிறுவயது நினைவுகள் இன்றும் பசுமையாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

எங்க வீடு செட்டியார் வீடு போல் மூன்று கட்டமைப்பு மற்றும் மூன்று தளம் கொண்டது. வீட்டில் 50 அறைகள் இருக்கும். இரண்டு மூன்று குடும்பங்கள் வாடகைக்கு இருந்தாங்க. நாங்க 12 பேர் என்பதால் எங்க எல்லாருக்கும் தனித்தனி அறை மட்டுமில்லாமல் நாங்க விளையாடுவதற்கான அறைகளும் இருக்கும். அப்பாவிற்கு மேல் தளத்தில் அலுவலக அறை. கீழ் தளத்தில் வாடகைக்கு இருப்பவர்கள், சமையல் அறை. நடுவில் முற்றம் இருக்கும். அப்பாவைப் பார்க்க வெளிநாட்டில் இருந்து எல்லாம் பிசினஸ் பேச வருவாங்க. அவங்க தங்குவதற்காக முதல் தளத்தில் அறைகள் அமைக்கப்பட்டு இருக்கும்.

இந்த வீட்டைத்தான் அம்மா சின்னச் சின்ன போர்ஷனாக பிரித்து மூன்று அடுக்குமாடி அமைப்பில் செய்திருந்தாங்க. இதற்காக எங்க சொந்த ஊரான ஓங்கோல் அருகே உள்ள ஒத்தப்பட்டனத்தில் எங்க தோட்டத்தில் இருந்து பலா மரக்கட்டைகளை கொண்டு வந்தாங்க. அதில்தான் வீட்டை செய்தாங்க. அந்த காலத்தில் அம்மா மின்சார வயரிங்கைக் கூட இரண்டு மரக் கட்டைகளுக்கு நடுவே வைத்திருந்தாங்க. மேலும் எங்க வீட்டில் என்னெல்லாம் இருந்ததோ அதெல்லாம் அந்த வீட்டில் இருந்தது.

மூன்று வருஷம் ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து 1938ல் வீட்டை முழுமையா செய்து முடிச்சாங்க. அதன் பிறகு எங்க வீட்டில் இருக்கும் பொருட்களை அப்படியே கொண்டு வர விரும்பினாங்க. அதற்கு அப்பா வெளிநாடு அல்லது இந்தியாவில் மற்ற ஊர்களுக்கு பிசினஸ் விஷயமா செல்லும் போது அம்மாவும் கூடவே போவாங்க. அங்கு பொம்மை கடைகளுக்கு சென்று மினி சைசில் இருக்கும் மேசை, நாற்காலி, ஊஞ்சல், பாத்திரங்கள்னு எல்லாம் ஒவ்வொன்றாக சேர்க்க ஆரம்பிச்சாங்க.

இட்லி குக்கர் முதல் கட்டில், மெத்தை, ஊஞ்சல், பியானோ, கிட்டார், தையல் மெஷின் என எங்க வீட்டில் ஒவ்வொரு அறையில் இருக்கும் முக்கிய பொருட்களை எல்லாம் பார்த்து பார்த்து வாங்கினாங்க. கடையில் கிடைக்காத பொருட்களை அவங்க வெள்ளியில் ஆசாரியிடம் சொல்லி செய்தாங்க. அதாவது பழங்கள், பலகாரங்கள், தின்பண்டங்கள், பூஜை அறையில் பயன்படுத்தப்படும் பஞ்ச பாத்திரம், தீப ஆராதனைத் தட்டு போன்றவை வெள்ளியில் செய்தாங்க. அது மட்டுமில்லை வெளிநாட்டினர் தங்கும் அறையையும் இந்த வீட்டிற்குள் வடிவமைச்சாங்க. சொல்லப்போனால் வீட்டில் இருக்கும் பல்லி மற்றும் கரப்பான் பூச்சிக்கூட அவங்க மிஸ் செய்யல.

இதில் முக்கியமானது, கல்யாண செட் பொம்மைகள். அந்தக்காலத்தில், வீட்டில் தான் கல்யாணம் நடக்கும். ஒரு கல்யாணம் எப்படி நடக்குமோ அதேபோல் வீட்டில் பொம்மைகளை அமைச்சிருந்தாங்க. சொல்லப்போனால் எங்க வீட்டில் என்னென்ன ெபாருட்கள் எல்லாம் இருந்ததோ அதெல்லாம் அம்மா வடிவமைத்த வீட்டில் இருக்கும்’’ என்றவர் இந்த மினியேச்சர் வீட்டினை இரண்டாம் உலகப் போரின் போது கப்பலில் பத்திரமாக எடுத்து சென்றுள்ளார்.

‘‘இரண்டாம் உலகப்போர் 1939ம் ஆண்டு துவங்கியது. அப்போது நாங்க எல்லாரும் எங்க சொந்த ஊருக்கு சென்று விட்டோம். வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக கப்பலில் எங்க ஊருக்கு கொண்டு வந்தோம். மினியேச்சர் வீடும் அப்படித்தான் ெகாண்டு வந்தோம். ஒரு மரப்பெட்டியில் பொம்மைகளை எல்லாம் துணியில் சுற்றி கப்பலில் அனுப்பினாங்க. போரின் போது இதைப் பாதுகாக்க அம்மா எப்படி கப்பலில் அனுப்பினாங்களோ அதேபோல் அவர்களின் காலத்திற்கு பிறகு இதை எப்போதும் போல் புதிதாக பராமரிக்க வேண்டும் என்பதற்காக என் வீட்டிற்கு மீன் பாடி வண்டியில் கொண்டு வந்தாங்க. அன்று முதல் நான் மிகவும் பத்திரமாக பராமரித்து வருகிறேன்.

எனக்கும் கைவினைப் பொருட்கள் மேல் தனிப்பட்ட ஆர்வம் உண்டு. அதுகுறித்து பயிற்சியும் அளித்து வந்தேன். அப்போது வரும் மாணவர்கள் கண்டிப்பாக இந்த வீட்டைப் பார்ப்பாங்கன்னு சொல்லி கொடுத்தாங்க. எனக்கும் அம்மா மட்டுமில்லை என்னுடைய கொள்ளு பாட்டிக்கும் கைவினைப் பொருட்கள் செய்வதில் அதிக ஆர்வமுண்டு. அவங்க அந்த காலத்தில் மணியால் அழகாக லூடோ விளையாட்டினை செய்து கொடுத்தாங்க. நாங்க சின்ன வயசில் அதில் விளையாடி இருக்கோம்.

அதையும் பத்திரமாக பாதுகாத்து வருகிறேன். அம்மா எல்லாவற்றையும் என்னிடம் கொடுத்த பிறகு நவராத்திரி ஒன்பது நாட்களும் நான் இந்த மினியேச்சர் வீட்டை அலங்கரித்து வைப்பேன். அதைப் பார்க்கவே பலர் வருவாங்க. எங்களுக்கு கொலு வைக்கும் பழக்கம் இல்லை என்றாலும், வீட்டைப் பார்க்கவே வருவாங்க. அது மட்டுமில்லாமல் பொங்கல் பண்டிகையை நாங்க மூன்று நாள் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அந்த மூன்று நாட்களும் எங்க மினியேச்சர் வீடு பிரகாசமாக இருக்கும். அதை அப்படி பார்க்கும் போது, நான் வாழ்ந்த வீட்டினை நேரில் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படும்’’ என்றவருக்கு கைவினைப் பொருட்கள் மேல் ஏற்பட்ட விருப்பம் காரணமாக அதையே தன்னுடைய தொழிலாக மாற்றியுள்ளார்.

‘‘சின்ன வயசில் அம்மாவிடம் சின்னச் சின்ன வேலைப்பாடுகளை செய்ய கற்றுக் கொண்டேன். அதன் பிறகு நான் நிறைய புத்தகம் படிச்சு கத்துக்கிட்டேன். என் மாணவர்கள் மூலமாகவும் பல விஷயங்கள் கற்றுக்கொண்டேன். வீட்டில் சும்மா இருக்க பிடிக்காமல், எனக்கு தெரிந்த கைவினைப் பொருட்கள் குறித்து பயிற்சி எடுக்க இருப்பதாக விளம்பரம் கொடுத்தேன். அதைப் பார்த்து இரண்டு பேர் பயிற்சிக்கு வந்தாங்க. அதனைத் தொடர்ந்து 150க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி அளித்திருக்கேன்.

ஐந்து முதல் 80 வயசு வரை பயிற்சி அளித்திருக்கேன். அந்த சமயத்தில் கோத்தாரி பயிற்சி மையத்தில் வாரத்தில் இரண்டு நாட்கள் என பத்து வருஷம் பயிற்சி அளித்தேன். அதன் பிறகு ஆந்திர மகிளசபாவில் ஓபுல் ரெட்டி அவர்கள் கேட்டுக் கொண்டதால், அங்கு பயிற்சி அளித்தேன். பள்ளிகளில் ஆர்ட் வகுப்பு ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளித்திருக்கேன். இன்றும் தஞ்சாவூர் பெயின்டிங் மற்றும் குரோஷே, கிராஸ் ஸ்டிச் செய்து வருகிறேன். அதனை ஆர்டர் மூலமாகவும் செய்து கொடுக்கிறேன். நான் செய்த கைவினைப் பொருட்களை கண்காட்சியாகவும் வச்சிருக்கேன். தொலைக்காட்சியிலும் கைவினை பொருட்கள் செய்முறை விளக்கம் செய்திருக்கேன்.

கிராஃப்ட் மட்டுமில்லாமல் பல அமைப்பு நிறுவனங்களுக்கு அறங்காவலராக இருக்கேன். இதற்கிடையில் அலங்கிருத்தா என்ற ஒரு அமைப்பினை துவங்கி அதனைப் பார்த்து வருகிறேன். இதன் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உதவி செய்து வருகிறோம். கோவிட் நேரத்தில் மருத்துவமனையில் உள்ளவர்களுக்கு உணவு கொடுத்தோம். பெரிய அளவில் இல்லை என்றாலும், சிறிய அளவில் எங்களால் முடிந்த உதவியினை செய்து வருகிறோம். ஆரோக்கிய தொண்டு மையத்தில் தினமும் ேநாயாளிகளுக்கு மருந்து மற்றும் மருத்துவ ஆலோசனை இலவசமா வழங்கி வருகிறோம். என்னைப் பொறுத்தவரை எந்த ஒரு அமைப்பு என்றாலும் அதில் நிரந்தர வருமானம் இருக்க வேண்டும்.

அதனால் என் அமைப்பிற்காக ஒரு இடம் வாங்கி அதில் வரும் வாடகையினை அமைப்பிற்காக பயன்படுத்திக் கொள்கிறேன். அதேபோல் ஆந்திரா மகிளா சபாவில் ஒரு மண்டபம் அமைத்து அதில் வரும் வருமானத்தை அவர்கள் பயன்படும்படி அமைத்துக் கொடுத்திருக்கேன். எப்போதும் அடுத்தவரிடம் உதவி கேட்க முடியாது. நம்மால் முடிந்த வரை அதற்கான வருமானத்தை எப்படி கொண்டு வரவேண்டும்னு திட்டமிட்டாலே போதும்’’ என்றார் லட்சுமி.

தொகுப்பு: ஷன்மதி

The post பக்கிங்ஹாம் கால்வாயில் பயணித்த மினியேச்சர் வீடு! appeared first on Dinakaran.

Tags : Buckingham Canal ,kumkum doshi kolu festival… ,Dinakaran ,
× RELATED கல்பாக்கம் அருகே பரபரப்பு மர்மமான...