×

தமிழக பகுதியிலேயே இலங்கை கடற்கொள்ளையர் அட்டூழியம் மீனவர்களை நடுக்கடலில் தள்ளி நிர்வாணப்படுத்தி கடும் சித்ரவதை: ரூ.5 லட்சம் மீன், வலைகள் பறிப்பு

வேதாரண்யம்: கோடியக்கரை அருகே தமிழக மீனவர்களை நடுக்கடலில் தள்ளி சரமாரி தாக்கி, ரூ.5லட்சம் மீன், வலைகளை பறித்து நிர்வாணப்படுத்தி இலங்கை கடற்கொள்ளையர் சித்ரவதை செய்து உள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே விழுந்தமாவடி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி, முருகேசன், மகாலிங்கம், ராஜகோபால் ஆகியோருடன் நேற்று முன்தினம் மீன்பிடிக்க சென்றார். இதேபோல் அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் பைபர் படகில் சுப்பிரமணியன், சண்முகவேல், முருகானந்தம் ஆகியோருடன் மீன்பிடிக்க சென்றார். இவர்கள் 9 பேரும் கோடியக்கரை தென்கிழக்கே 10 நாட்டிக்கல் மைல் தூரத்தில் நள்ளிரவு மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு 2 விசைபடகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள், சுப்பிரமணியன் படகில் ஏறி கத்தியை காட்டி மிரட்டி மீன்பிடி வலை மற்றும் தொழில்நுட்ப கருவிகள் உள்ளிட்ட பொருட்களை கேட்டுள்ளனர். அவர்கள் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த கடற்கொள்ளையர்கள், இரும்பு கம்பியால் 5 மீனவர்களையும் சரமாரியாக தாக்கினர். பின்னர், அங்கிருந்த 600 கிலோ மீன்பிடிவலையை பறித்ததோடு, படகையும் சேதப்படுத்தி விட்டு தப்பினர். இதனைதொடர்ந்து இலங்கை கடற்கொள்ளையர்கள், செல்வம் படகில் ஏறி அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பொருட்களை தருமாறு கேட்டுள்ளனர்.

இதில் அவர்கள் தர மறுத்ததால் கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் 4 மீனவர்களையும் சரமாரியாக தாக்கிவிட்டு மீன்கள், தொழில்நுட்ப கருவிகள் பறித்து படகையும் சேதப்படுத்தி விட்டு தப்பினர். இதன் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம்.
இந்நிலையில் நேற்று காலை இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட 9 மீனவர்களும் விழுந்தமாவடி கடற்கரைக்கு வந்து, கீழையூர் கடலோர காவல் படையில் புகார் அளித்தனர். தொடர்ந்து கடலோர காவல் படையினரும், மீன்வளத்துறை அதிகாரிகளும் தாக்கப்பட்ட மீனவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர், அவர்கள் அனைவரும் நாகப்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர் தாக்குதல் தொடர்வதால் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவர்களை தமிழக மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

அப்போது மீனவர்கள் கூறியதாவது: இந்திய எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்கொள்ளையர்கள் அதிவேக இன்ஜின் பொருத்தப்பட்ட படகில் வந்தனர். அவர்கள் அதிக வெளிச்சம் கொண்ட விளக்கை எங்கள் கண் மீது செலுத்தினர். இதில் நாங்கள் நிலைதடுமாறியவுடன் எங்கள் படகு மீது ஏறி ஆயுதங்களை கொண்டு தாக்கி மிரட்டினர். இதில் பயந்து போன எங்கள் கைகளை பின்புறமாக கட்டினர். எங்கள் கழுத்து பகுதியில் அதிநவீன ஆயுதங்களை கொண்டு தாக்கினர். இதை தொடர்ந்து எங்களது உடைகளை முழுமையாக அகற்றி நிர்வாணமாக்கி கடல் தண்ணீரில் தள்ளிவிட்டனர்.

இதன்பின்னர் எங்களது வலைகளை அறுத்து பொருட்களை கொள்ளையடித்தனர். கடல்நீரில் தத்தளித்த நாங்கள் உயிருக்கு போராடி எங்கள் படகு மீது ஏற முயன்றபோது கடற்கொள்யைர்கள், ஆயுதங்களை கொண்டு தாக்கியதால் நாங்கள் எங்களது படகில் கை வைக்க முடியாமல் மீண்டும், மீண்டும் கடல் நீரில் தத்தளித்தோம். இவ்வாறு 2 மணி நேரம் சித்தரவதை செய்தனர். இலங்கை கடற்கொள்ளையர் தாக்குதலுக்கு ஒன்றிய அரசு விரைவில் முடிவு கட்ட வேண்டும். வீட்டில் உள்ள பொருட்களை அடமானம் வைத்து படகுகள் வாங்கி மீன்பிடி தொழிலுக்கு செல்லும் எங்களை இலங்கை கடற்கொள்ளையர்களும், இலங்கை அரசும் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. இதற்கு ஒன்றிய அரசு முடிவு கட்ட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post தமிழக பகுதியிலேயே இலங்கை கடற்கொள்ளையர் அட்டூழியம் மீனவர்களை நடுக்கடலில் தள்ளி நிர்வாணப்படுத்தி கடும் சித்ரவதை: ரூ.5 லட்சம் மீன், வலைகள் பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Kodiyakarai ,Sri Lanka ,
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து