×

அரசு மருத்துவமனையில் போதையில் பெண் காவலரை தாக்கி ரகளை செய்த இளம்பெண் கைது

பெரம்பூர்: போதையில் பெண் காவலரை தாக்கி மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்ட இளம்பெண்ண கைது செய்யப்பட்டார். கொளத்தூர் விநாயகபுரம் விஜயலட்சுமி நகரை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். அழகு கலை நிபுணராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு, கொளத்தூர் புத்தாரகம் பகுதியில் மது போதையில் கீழே விழுந்துள்ளார். அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதை பார்த்து அவரது நண்பருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே, சம்பவ இடத்துக்கு வந்த அவரது நண்பர், இளம்பெண்ணை மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளார்.

அப்போது, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், இளம்பெண் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களை வீடியோ எடுத்துள்ளார். இதனால், பிரச்சனை ஏற்பட்டது. எனவே, மருத்துவர்கள் மருத்துவமனையில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், பெண் காவலர்கள் முத்துலட்சுமி மற்றும் கவுசி ஆகிய இருவரும் மருத்துவமனைக்கு உள்ளே சென்று இளம் பெண்ணிடம் விசாரணை செய்தனர். அப்போது, பெண் போலீசாரை இளம் பெண் மிகவும் அருவருக்கத்தக்க வார்த்தைகளால் பேசியுள்ளார். மேலும், காவலர் முத்துலட்சுமி என்பவரின் உடமைகளை சேதப்படுத்தி, அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

மருத்துவமனையில் இருந்த ஊழியர்கள் இளம் பெண்ணை சமாதானம் செய்ய முயற்சி செய்தனர். இதில், இளம் பெண் முதலில் தான் ஒரு பத்திரிகையாளர் என்றும் பிறகு அட்வகேட் என்றும் கூறியுள்ளார். மேலும், தனக்கு பல அதிகாரிகளை தெரியும் எனக் கூறி மிரட்டி உள்ளார். இதையடுத்து அவரை பெரவள்ளூர் காவல் நிலையம் கொண்டு சென்றனர். அங்கு, இரவு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், அவரிடம் விசாரணை மேற்கொண்டார். அதில், அந்த பெண் கணவரை பிரிந்து வாழ்வதும், மது போதையில் இருப்பதால் அவரை பெண் காவலர் ஒருவருடன் வீட்டிற்கு அனுப்பி வைத்து மறுநாள் காலை வரும்படி எச்சரித்தும் அனுப்பி வைத்தார்.

பெண் காவலரை தாக்கி போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்து, அநாகரிகமாக பேசிய இளம் பெண் மீது நடவடிக்கை எடுக்கும்படி பெண் காவலர் முத்துலட்சுமி பெரவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் நேற்று காலை பெரவள்ளூர் போலீசார் இளம் பெண்ணின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் தலைமறைவானது தெரியவந்தது. இதையடுத்து, நேற்று மதியம் அந்த இளம் பெண்ணை கைது செய்த பெரவள்ளூர் போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அரசு மருத்துவமனையில் போதையில் பெண் காவலரை தாக்கி ரகளை செய்த இளம்பெண் கைது appeared first on Dinakaran.

Tags : Perambur ,Kolathur ,Vinayakapuram ,Vijayalakshmi Nagar ,
× RELATED கொளத்தூரில் அண்ணாமலை நிகழ்ச்சி காவல்...