×

ரயில்வே மருத்துவமனையின் சீர்கேடுகளை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சென்னை: பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து தட்சிண ரயில்வே பென்ஷனர்ஸ் யூனியன், தட்சிண ரயில்வே எம்ப்ளாயர்ஸ் யூனியன் மற்றும் அகில இந்திய லோகோ ஓடும் தொழிலாளர் கழகம் ஆகிய அமைப்புக்கள் இணைந்து நேற்று மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.  இதில், ஓய்வுபெற்ற ஊழியர்கள் அவர்களது குடும்பத்தினருக்கு ரயில்வே மருத்துவமனையில் தரமான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. மருத்துவமனையில் உணவகம் இல்லாததால், மருத்துவர்கள், ஊழியர்கள், நோயாளிகள் என அனைவரும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று உணவு சாப்பிட வேண்டிய நிலை உள்ளது.

குறிப்பாக, சர்க்கரை நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், மருத்துவமனையில் சுத்தமான குடிநீர் கிடைப்பது கிடையாது. ஓபி சீட் எனப்படும் நுழைவு சீட்டு வாங்குவதற்கு பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் முதல் ஊழியர்கள் வரை நூற்றுக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் ஒருவரே பல வேலைகளை சிரமப்பட்டு செய்து வருகின்றனர்.

நோயாளிகளுக்கான வார்டுகளில் கட்டில்கள், படுக்கைகள் உள்ளிட்டவை மோசமான நிலையில் உள்ளது. இவ்வாறு, மருத்துவமனையில் பல பிரச்னைகள் உள்ளன.  ஆனால், இந்த பிரச்னைகள் எதனையும் ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து அலட்சியப் போக்குடன் இருப்பதாக கோஷம் எழுப்பினர். மேலும், ரயில்வே மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணவில்லை என்றால் அடுத்தகட்ட போராட்டங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்தனர்.

The post ரயில்வே மருத்துவமனையின் சீர்கேடுகளை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dakshina Railway Pensioners Union ,Dakshina Railway Employers Union ,Perambur Railway Hospital ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...