×

உலக விபத்து காய அவசர சிகிச்சை தினத்தை முன்னிட்டு ரத்த இழப்பை நிறுத்தும் நுட்பம் குறித்து நேரடி செயல் விளக்கம்: அப்போலோ மருத்துவமனை நிகழ்த்தியது

சென்னை: உலக விபத்து காய அவசர சிகிச்சை தினத்தை முன்னிட்டு, அப்போலோ மருத்துவமனையின் அவசர சிகிச்சை சேவைகள் பிரிவை சேர்ந்த மருத்துவ குழுவினர், உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட உயிர் காக்கும் நடைமுறைகள் குறித்து அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டனர். அந்த வகையில் அவசர சிகிச்சையின் போது ரத்த இழப்பை நிறுத்தும் நுட்பங்கள் குறித்து விளக்கம் அளிக்க, அப்போலோ மருத்துவர்கள் குழு சென்னையில் உள்ள தனியார் விடுதியில் ஒரு நேரடி செயல் விளக்கத்தையும் நிகழ்த்தியது. இதில் மக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று விரிவாக விளக்கப்பட்டது.

அதை தொடர்ந்து அப்போலோ மருத்துவமனையின் பன்னோக்கு தீவிர சிகிச்சை பிரிவின் மூத்த மருத்துவர் செந்தில்குமார், நிருபர்களிடம் கூறியதாவது: அப்போலோ மருத்துவமனையை பொறுத்தவரை நாங்கள் உலக விபத்து காய தினத்தை, அனைத்து தரப்பினருக்கும் விபத்து காய சிகிச்சை முதலுதவி செயல்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு முக்கியமான சந்தர்ப்பமாக பார்க்கிறோம். ரத்த கசிவு அல்லது ரத்த இழப்பை நிறுத்தும் தொழில்நுட்பம் (ஸ்டாப் தி ப்ளீட் டெக்னிக்ஸ்) என்பது பயிற்சி பெற்ற மருத்துவ ஊழியர்களுக்கு மட்டுமானது அல்ல.

விபத்து நடந்த இடத்திற்கு அருகிலும் அதற்கு அப்பாலும் உள்ள சாதாரண மக்களுக்குமானதாகும். 2021ம் ஆண்டில் உலக வங்கி வெளியிட்ட ஒரு அறிக்கையில், உலகளாவிய சாலை விபத்து இறப்புகளில் 11 சதவீதம் இந்தியாவில் நிகழ்கின்றன, என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 53 சாலை விபத்துகள் நிகழ்கின்றன. எய்ம்ஸ் விபத்து காய அவசர சிகிச்சை மையம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, விபத்துகளால் பாதிக்கப்படுவோரில் 50 சதவீதம் பேர் தற்காலிக அல்லது நிரந்தர இயலாமை அல்லது ஊனத்தால் பாதிக்கப்படுகின்றனர்.

பல்வேறு விபத்து நிகழ்வுகளின்போது செயல்படவேண்டிய உலகளாவிய பொது தர நிலை செயல்பாடு இதுவாகும். சாலை விபத்துகளில் காயமடையும் கணிசமானவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். வயதானவர்களுக்கு காயங்கள் ஏற்படுவது அதிகரிப்பதையும் நாங்கள் காண்கிறோம். வயது முதிர்ந்தவர்கள் இதில் ஒரு வகையில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அத்துடன் அவர்கள் குணமடைவதற்கான பயணத்தில் எங்களது நீடித்த ஆதரவும் தேவைப்படுகிறது.

எனவே இந்த அம்சங்களை நாம் கவனத்தில் கொண்டு ஒரு சமூகமாக திறம்பட செயல்பட வேண்டிய அவசர தேவை உள்ளது. ரத்த கசிவு அல்லது ரத்த இழப்பை நிறுத்துவோம் என்பது, செயல்பாட்டுக்கான எங்களது சிறப்பு அழைப்பு ஆகும். உயிர்களை காப்பாற்றுவதே எங்கள் நோக்கம். இதற்கு விழிப்புணர்வு முக்கியம்.
இவ்வாறு அவர் கூறினார்.

The post உலக விபத்து காய அவசர சிகிச்சை தினத்தை முன்னிட்டு ரத்த இழப்பை நிறுத்தும் நுட்பம் குறித்து நேரடி செயல் விளக்கம்: அப்போலோ மருத்துவமனை நிகழ்த்தியது appeared first on Dinakaran.

Tags : World Accidental Injury ,Day ,Apollo Hospitals ,CHENNAI ,World Accidental Injury Emergency Treatment Day ,Apollo Hospital ,Emergency Services Department ,Dinakaran ,
× RELATED நூலகத்தில் புத்தக தின விழா